எளியவர்களின் காவலர்
முன்னாள் பிரதமர் வி.பி.சிங், காலத்தாலும் தவிர்க்க முடியாத, சுதந்திர இந்தியாவின் பெரும் தலைவர். பிரதமராகப் பதவி வகித்தது வெறும் 11 மாதங்கள்தான் என்றாலும் அவர் செய்த சாதனைகள் காலம் உள்ளவரை


முன்னாள் பிரதமர் வி.பி.சிங், காலத்தாலும் தவிர்க்க முடியாத, சுதந்திர இந்தியாவின் பெரும் தலைவர். பிரதமராகப் பதவி வகித்தது வெறும் 11 மாதங்கள்தான் என்றாலும் அவர் செய்த சாதனைகள் காலம் உள்ளவரை நினைவுகூரத்தக்கவை. அதிகாரத்தில் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி... நாட்டின் மதச்சார்பின்மையை, சமூக நீதியைக் காக்க அவர் செய்த புரட்சியும், ஊழலுக்கு எதிராக எழுப்பிய போர்க்குரலும் அனைத்துத் தரப்பினரும் முன்மாதிரியாகப் பின்பற்றக்கூடியவை.
விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி.சிங் உத்தரப்பிரதேச மாநிலம் அலாகாபாதில் தையா என்ற ராஜ வம்சத்தில் ராஜா பகவதி பிரசாதுக்கு மகனாக 1931ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி பிறந்தார். அவரது 5ஆவது வயதில் மாண்டா சமஸ்தானத்தின் ராஜ்பகதூரான ராம்கோபால் சிங்கால் தத்தெடுக்கப்பட்டு, 10ஆவது வயதிலேயே அந்த சமஸ்தானத்தின் ராஜ்பகதூராக பொறுப்பேற்றார். அலாகாபாத், புணே பல்கலைக்கழகங்களில் இயற்பியலில் உயர்கல்வியை நிறைவு செய்தார். அவரது பொதுவாழ்க்கை, கல்லூரியில் மாணவர் பேரவைத் தலைவராக அவர் பணியாற்றியதில் இருந்தே தொடங்குகிறது.
செல்வச் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மீது இயல்பாகவே கரிசனம் கொண்டிருந்தவர். 1957-இல் வினோபாவின் பூமிதான இயக்கத்தில் பங்கேற்று, தனக்குச் சொந்தமான விளைநிலங்களை தானமாக வழங்கினார்.

அரசியல் வாழ்க்கை
வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை படிப்படியாக அவரை அரசியலுக்கு கொண்டுவந்தது. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த வி.பி.சிங், 1969ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது சீரிய பணி காரணமாக 1971ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி அவருக்கு வாய்ப்பளித்தது. அதில் வெற்றி பெற்று முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குச் சென்றார். 1974இல் இந்திரா காந்தி அமைச்சரவையில் வர்த்தகத் துறை துணை அமைச்சர் பொறுப்பு வி.பி.சிங்கிற்கு வழங்கப்பட்டது. 1976இல் வர்த்தகத் துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தில், நாட்டில் விளைபொருள்கள் பதுக்கல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி திறம்படச் செயலாற்றினார்.
நெருக்கடி நிலையின் எதிரொலியாக, 1977 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. பின்னர், 1980 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானதும், வி.பி.சிங்கை உத்தரப்பிரதேச மாநில அரசியலுக்கு அனுப்பினார். மேலும், அதே ஆண்டில் உத்தரப்பிரதேச முதல்வராகவும் வி.பி.சிங்கை நியமனம் செய்தார். 1983ஆம் ஆண்டு மீண்டும் தேசிய அரசியலுக்கு திரும்பிய வி.பி.சிங், மத்திய வர்த்தகத் துறை அமைச்சராகப் பணியைத் தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து, இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் 1984ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமரானபோது, மத்திய நிதி அமைச்சராக வி.பி.சிங்கை நியமனம் செய்தார்.
ராணுவ பேர ஊழல் விவகாரம்
மத்திய நிதி அமைச்சராக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார் வி.பி.சிங். தொழில்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்கும்பொருட்டு லைசன்ஸ் ராஜ் விதிமுறைகளைத் தளர்த்தினார். தங்கத்துக்கான வரியைக் குறைத்து தங்கக் கடத்தலை கட்டுக்குள் கொண்டுவந்தார். குறிப்பாக, வரி ஏய்ப்புக்கு எதிராக அமலாக்கத் துறை மூலம் அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. திருபாய் அம்பானி, அமிதாபச்சன் உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்களும், செல்வாக்கு மிக்கவர்களும் இந்த நடவடிக்கைகளுக்குத் தப்பவில்லை. இதையடுத்து, தொழிலதிபர்களிடமிருந்து வந்த நெருக்கடி காரணமாக நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து வி.பி.சிங்கை நீக்கினார் ராஜீவ். ஆனாலும், வி.பி.சிங்கின் பதவியை மொத்தமாகப் பறிக்க முடியாமல் 1987ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் பொறுப்பை அளித்தார் ராஜீவ்.
அங்கும் தனது அதிரடியைத் தொடர்ந்தார் வி.பி.சிங். ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் நடைபெற்றுவரும் முறைகேடுகளை விசாரிக்கத் தொடங்கினார். அந்தநேரத்தில், போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஸ்வீடனைச் சேர்ந்த வானொலி வெளியிட்ட செய்தி ராஜீவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. பின்னர், ஹெச்டிடபிள்யூ என்ற நீர்மூழ்கிக் கப்பலை மேற்கு ஜெர்மனியிடமிருந்து வாங்கியதில் இந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகர்கள் ரூ.32 கோடி கமிஷன் பெற்றுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டார் வி.பி.சிங். தான் பதவி வகிக்கும் அரசுக்குத்தான் இது நெருக்கடியை அளிக்கும் என்று தெரிந்திருந்தும், நேர்மை தவறக்கூடாது என்ற நோக்கத்தில் வி.பி.சிங் மேற்கொண்ட இந்த நடவடிக்கையால், அவருக்கும் ராஜீவ் காந்திக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தியின் வலியுறுத்தலையடுத்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகிய வி.பி.சிங், எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகினார்.
தேசிய முன்னணி உதயம்
காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய பிறகு வி.பி.சிங்கின் அரசியல் வாழ்க்கை என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. அருண் நேரு, ஆரிஃப் முகமதுகான் ஆகியோர் துணையுடன் ஜன் மோர்ச்சா என்ற புதிய கட்சியை தொடங்கினார் சிங். மேலும், அக்கட்சியுடன் சந்திரசேகர் தலைமையிலான ஜனதா கட்சி, லோக்தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய சிறிய கட்சிகளையும் இணைத்து ஜனதா தளத்தை உருவாக்கினார்.
தொடர்ந்து, நாடு முழுவதும் பரவலாகக் காணப்பட்ட காங்கிரஸ் எதிர்ப்பை ஓரணியில் இணைக்க விரும்பிய வி.பி.சிங் அதற்கான முயற்சிகளைத் தொடங்கினார். ஜனதா தளம், திமுக, தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கண பரிஷத் ஆகிய கட்சிகள் ஒரே கூட்டணியில் இணைய உதயமானது தேசிய முன்னணி. அதன் தலைவராக என்.டி.ராமராவும், ஒருங்கிணைப்பாளராக வி.பி.சிங்கும் பொறுப்பேற்றனர்.
பிரதமர் பதவி
அதைத் தொடர்ந்து 1989-இல் மக்களவைத் தேர்தல் வந்தது. இதில், போஃபர்ஸ் உள்ளிட்ட ராணுவ பேர ஊழலை முன்வைத்து காங்கிரஸுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது தேசிய முன்னணி.1984 மக்களவைத் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருந்த காங்கிரஸுக்கு இத்தேர்தல் கடும் சவாலாக அமைந்தது. போஃபர்ஸ் ஊழல் விவகாரம், பஞ்சாபில் தீவிரவாதத்தின் வளர்ச்சி, இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் காங்கிரஸ் அரசின் செயல்பாடு போன்றவற்றால் அக்கட்சியின் செல்வாக்கு ஆட்டம் கண்டது. 545 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 197 இடங்களிலும், ஜனதா தளம் 143 இடங்களிலும், பாஜக 85 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 33 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மை இல்லை. இந்நிலையில், பாஜக, இடதுசாரிகளின் ஆதரவுடன் தேசிய முன்னணி ஆட்சி அமைக்க, 1989ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்றார் வி.பி.சிங்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமல்
கம்யூனிஸ்டுகள், பாஜக என இரு துருவங்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்த வி.பி.சிங், தனது அரசுக்கு தனிப்பெரும்பான்மை பலம் இல்லாத சூழலிலும் துணிச்சலான முடிவுகளை எடுக்கத் தயங்கவில்லை. அதில் ஒன்றுதான் சரித்திரம் பேசும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியது. இந்தியாவில் சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்களை இனம்காண்பதற்காக பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான ஆணையம் ஜனதா கட்சி ஆட்சியில் சரண்சிங் பிரதமராக இருந்தபோது 1979இல் அமைக்கப்பட்டது. பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையிலான இந்த ஆணையம், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட பரிந்துரைகளுடன் தனது அறிக்கையை 1980இல் சமர்ப்பித்தது. ஜனதா கட்சி ஆட்சியை இழந்த பின்னர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்திலும், அதற்குப் பிறகு ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்திலும் அந்தப் பரிந்துரைகள் அமல்படுத்தப்படாத நிலையில், துணிச்சலுடன் அதை அமல்படுத்த முடிவு செய்தார் வி.பி.சிங். அதன்படி, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தது தேசிய முன்னணி அரசு.
வி.பி.சிங் அரசின் இந்த முடிவு ஒருபக்கம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், இன்னொரு பக்கம் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. பிற்படுத்தப்பட்டோர் அல்லாதவர்களால் வடமாநிலங்களில் கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மாணவர்கள் தீக்குளிப்பு, கடையடைப்பு, சாலை மறியல், போலீஸ் துப்பாக்கிச்சூடு என வடமாநிலங்கள் போராட்டத்தால் பற்றியெரிந்தன. பின்னர், இதுதொடர்பான வழக்கில் அரசின் முடிவு செல்லும் என உச்சநீதிமன்றம் நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
அத்வானி கைது
மண்டல் கமிஷன் அமலால் ஏற்பட்ட நெருக்கடி தீரும் முன்னே வி.பி.சிங் மற்றொரு பெரும் பிரச்னையை எதிர்கொள்ள நேர்ந்தது. அது அயோத்தி விவகாரம். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற விஷயத்தை கையில் எடுத்தது பாரதிய ஜனதா.

இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் எல்.கே.அத்வானி சோம்நாத்திலிருந்து அயோத்தி நோக்கி 1990, செப்டம்பர் 25ஆம் தேதி ரதயாத்திரையை தொடங்கினார். பல்வேறு நகரங்கள், கிராமங்கள் வழியாகச் சென்ற இந்த யாத்திரையால் பல இடங்களில் மதரீதியான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த யாத்திரை தொடர்ந்தால் இந்தியாவின் ஒற்றுமைக்கே பேராபத்து எனக் கருதிய வி.பி.சிங், தனது தேசிய முன்னணியின் கூட்டாளியான அப்போதைய பிகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மூலம் யாத்திரையை தடுத்து நிறுத்தி, அத்வானியை கைது செய்யவும் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையால், பாஜக ஆதரவுடன் நடத்தப்பட்டு வரும் தனது ஆட்சியே கவிழக்கூடும் என நன்றாகத் தெரிந்திருந்தும் தேச ஒற்றுமைக்கு ஊறு ஏற்படுவதைத் தடுத்தே ஆகவேண்டும் என்ற கொள்கை உறுதியோடு செயல்பட்டார். அதன்படி, பிகார் மாநிலம் வழியாகச் சென்ற ரதயாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டு அத்வானி கைது செய்யப்பட்டார்.
இதன் எதிரொலியாக வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றது பாரதிய ஜனதா. அதைத் தொடர்ந்து மக்களவையில் வி.பி.சிங்கிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அத்தீர்மானத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஜனதா தளத்தைச் சேர்ந்த அதிருப்தி உறுப்பினர்கள், அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் வி.பி.சிங்கிற்கு எதிராகவும், இடதுசாரிகள் ஆதரவாகவும் வாக்களித்தனர். இறுதியில் 142-346 என தீர்மானம் வெற்றி பெறவே, 1990, நவம்பர் 7ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார் வி.பி.சிங். அவரது பிரதமர் பதவிக் காலம் ஓராண்டு நிறைவடைவதற்குள்ளாகவே முடிவடைந்தது.
இறுதிக் காலம்
1991 பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் விடுதலைப்புலிகளால் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பின்னர், 1996 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவ, ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றது. அப்போது பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட ஐக்கிய முன்னணியின் தலைவர்கள் வலியுறுத்தியபோதும், பிரதமர் பதவியை ஏற்க மறுத்தார் வி.பி.சிங்.
1998ஆம் ஆண்டு வி.பி.சிங்குக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அதன்பிறகு பொது வாழ்க்கையை குறைத்துக்கொண்ட வி.பி.சிங், நோயின் கொடுமையிலிருந்து சற்று மீண்ட நிலையில் 2006ஆம் ஆண்டு ஜன் மோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கி, நடிகர் ராஜ் பப்பரை அதன் தலைவராக நியமித்தார். இடைப்பட்ட காலத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். இறுதியில் தனது 77ஆவது வயதில் 2008, நவம்பர் 27ஆம் தேதி தில்லியில் மறைந்தார். எளியவர்களின் காவலரான வி.பி.சிங், சமூகநீதிக்காகவும், சமரசமற்ற போராட்டத்துக்காகவும் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
கே.ஆர்.நாராயணனை முன்மொழிந்தவர்
1992-இல் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு கே.ஆர்.நாராயணன் பெயரை முதலில் முன்மொழிந்தது வி.பி.சிங்தான். அப்போது அவர் நாடாளுமன்ற ஜனதா தளம் கட்சித் தலைவராக இருந்தார். வி.பி.சிங்கும், இடதுசாரி உறுப்பினர்களும் இணைந்து தமது குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக கே.ஆர்.நாராயணன் பெயரை அறிவித்தனர். பின்னர், பிரதமர் நரசிம்மராவும் ஆதரவு தெரிவிக்க ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் கே.ஆர்.நாராயணன்.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங், காலத்தாலும் தவிர்க்க முடியாத, சுதந்திர இந்தியாவின் பெரும் தலைவர். பிரதமராகப் பதவி வகித்தது வெறும் 11 மாதங்கள்தான் என்றாலும் அவர் செய்த சாதனைகள் காலம் உள்ளவரை
வி.பி.சிங் சிறந்த நாடாளுமன்றவாதி மட்டுமன்றி, சிறந்த கவிஞரும் ஓவியரும் ஆவார். உடல்நிலை பாதித்து ஓய்வில் இருந்த காலத்தில் ஓவியத்துடனேயே அவர் செலவிட்டார். அவரது கவிதை நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு துளி வானம், ஒரு துளி கடல் என்ற பெயரில் வெளிவந்தது. அந்த நூலின் விற்பனைத் தொகையையும் தமிழகத்தில் உள்ள நாகம்மையார் சிறுவர் விடுதிக்கு வழங்கினார்.
தமிழகமும் வி.பி.சிங்கும்
வி.பி.சிங்கிற்கும் தமிழகத்துக்கும் பல தொடர்புகள் உண்டு. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனதா தளத்தை ஆரம்பித்து, தேசிய முன்னணியை உருவாக்கினார் வி.பி.சிங். தேசிய முன்னணியின் தொடக்க விழா நடைபெற்றது தமிழகத்தில்தான்.

பிரதமராகப் பொறுப்பேற்ற இரு மாதங்கள் கழித்து 1990, பிப்.3இல் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற வி.பி.சிங், மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என மேடையிலேயே அறிவித்தார்.
தேசிய முன்னணிக்கு துணை நின்ற திமுக 1989 பொதுத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாதபோதும், அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மருமகனான முரசொலி மாறனுக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பதவியை வழங்கினார்.
தமிழ்நாடு, கர்நாடகம் இடையிலான காவிரி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி நடுவர் மன்றத்தை அமைத்ததும் வி.பி.சிங்தான்.
ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையை வி.பி.சிங் தான் பிரதமரானதும் நாடு திரும்பச் செய்தார். பிரதமர் பதவியை இழந்த பின்னரும் தமிழகத்துக்கு வந்து பல்வேறு நகரங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...