ராதிகாவும், மீனாவும், சுகன்யாவும், கே ஆர் விஜயாவும் கோல்டு லோன் வாங்கச் சொல்கிறார்கள். காஜல் அகர்வாலும், சமந்தாவும் வீட்டை உடைத்துக் கொண்டு வந்து பிரபல உப்பு நிறைந்த டூத் பேஸ்டை பயன்படுத்தச் சொல்கிறார்கள். ஜோதிகா வேறு மசாலா பெளடரும், துணிகளுக்கு வாசனையூட்டும் திரவமும் வாங்கச் சொல்கிறார். ரகுமான் என்னவோ ஹேர் டை விளம்பரம் பண்ணுகிறார். இன்னும் நிறைய நடிகர், நடிகைகள் நிறைய நிறைய விளம்பரங்களில் வந்து அதை வாங்குங்க, இதை வாங்குங்க என்று படு சாமர்த்தியமாக மூளைச்சலவை செய்கிறார்கள். அதைப் பார்க்கும் ரசிகர்கள் என்ன செய்கிறார்கள்? இந்த விஷயத்தில் நான் புத்திசாலிகளைப் பற்றி பேசவில்லை. விளம்பரங்களுக்கு மயங்கும் சில, பல அப்பாவிகளைச் சொல்றேன். அவர்களுக்கெல்லாம் சினிமா நடிகர், நடிகைகள் விளம்பரத்தில் வந்து சொல்லிவிட்டால் போதும், அந்தப் பொருட்களைத்தான் கடைகளில் சென்று வாங்குவார்கள்.