பெங்களூரு, சிவாஜி நகரில் ரஜினி கண்டக்டராக இருந்த போது, ஒருநாள் திடீரென ஒரு இளம்பெண் இவரது பேருந்தில் முன்புறமாக ஏறி வந்திருக்கிறார். பேருந்தில் பின்புறப் படிகளில் தான் ஏற வேண்டும். முன்புற படி வழியே இறங்க வேண்டும் என்று விதி இருந்தது. அதனால் ரஜினி, என்னம்மா இது? இப்படி பண்றியே, பின்னால வந்து ஏறும்மா என்று தடுக்க, அந்தப் பெண்ணோ, ரஜினியின் கைகளைத் தட்டி விட்டுவிட்டு அசால்ட்டாகச் சென்று இருக்கை தேடி அமர்ந்து விட்டார். ரஜினிக்கோ, ஹே.. இதென்ன, இப்படியொரு பெண்ணா?! என்று அந்தப் பெண்ணின் மீது கொஞ்சம் சுவாரஸ்யமாகி விட்டது. அந்தப் பெண்ணின் பெயர் நிர்மலா, ரஜினி அவரை நிம்மி என்று குறிப்பிட்டார். பிறகு அந்தப் பெண் தினமும் ரஜினி இருந்த பேருந்திலேயே கல்லூரி செல்லத் தொடங்கி இருக்கிறார். அவரொரு மருத்துவ மாணவி. அப்போது எம் பி பி எஸ் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். இவர்களது இந்தச் சந்திப்பு பிறகு மெல்ல மெல்ல காதலாக மாறத் தொடங்கிய வேளையில் ஒருமுறை ரஜினி வசித்த காலனிப்பகுதியில் நாடகம் போட்டிருக்கிறார்கள். அதில் ரஜினியும் நடித்திருக்கிறார். அதனால் தனது நடிப்பை காண நிம்மியையும் ரஜினி அழைத்திருக்கிறார். அந்தப் பெண்ணும் வந்தார். நாடகத்தில் ரஜினியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணும் பாராட்டி விட்டுச் சென்று விட்டார். பிறகு சில நாட்களின் பின் ரஜினிக்கு அடையாறு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயில அட்மிஷன் கார்டு வந்திருக்கிறது. அதைக் கணு ஆச்சர்யப்பட்டுப் போன ரஜினி, அதைப்பற்றி அந்தப் பெண் நிம்மியிடம் பகிர்ந்திருக்கிறார்.