இந்த இளைஞரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. உலகில் மனிதர்களுக்கு எத்தனை எத்தனையோ நோய்கள் வந்து போகின்றன. ஆனால்... இப்படி ஒரு விந்தையான நோய்க்குறைபாடு உலகில் வேறு யாருக்குமே வந்து விடக்கூடாது என்று பிரார்த்திக்கத் தோன்றுகிறது. நோய் தான் வந்து விட்டதே, பிறகு வேண்டுதலில் என்ன இருக்கிறது? இனி அனுபவித்துத் தானே தீர வேண்டும் என்கிறீர்களா? ஆம், அந்த இளைஞர் வலிக்க வலிக்க அதை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார். இவரைப் பற்றி நீங்கள் முன்னமே கூட அறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர் தான் வங்க தேசத்தின் ‘ட்ரீ மென்’ (மர மனிதன்) என்று அழைக்கப்படும் அபுல் பஜந்தர். வயது 28. இதுவரை இவரது கை, கால்களில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 25. அறுவை சிகிச்சைகளுக்கான காரணம் இந்த இளைஞரின் கைகளிலும், கால்களிலும் காணப்படும் அபூர்வமான எக்ஸ்ட்ரா உருப்படிகளை வெட்டி நீக்குவதற்காக. அபுலின் புகைப்படத்தைப் பார்த்தாலே அவரிடமிருக்கும் வித்யாசம் என்னவென்று எல்லோருக்குமே புரிந்திருக்கும்.