சரி ப்ரியேஷ் படிக்காதவர், அதிலும் மீனவர், இவரென்னவோ கடலுக்குப் போய் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு வந்தால் ஊர் மக்கள் அதை அப்படியே ஒப்புக் கொள்வார்களா என்ன? அட நீ என்னய்யா சொல்ற? கடல் எம்மாம் பெருசு, அதுல பிளாஸ்டிக் கழிவுகள் கிடந்தா நம்மால என்ன பண்ணிட முடியும்? என்று தட்டிக் கழிக்கத்தானே செய்வார்கள். அந்த புறக்கணிப்பு நிகழ்ந்து விடகூடாது என்று தான் முன்னதாக ஊர் பஞ்சாயத்தாரை அணுகிய ப்ரியேஷ், கடலில் சிக்கிய பிளாஸ்டிக் கழிவுகளுடன் தான் எடுத்த புகைப்படங்களை ஊர் மக்களுக்கு காட்டியிருக்கிறார். அத்துடன், எப்போதெல்லாம் இப்படி பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் சிக்குகின்றனவோ அந்த இடங்களில் எல்லாம் மீன்பாடு மிகவும் குறைவாக இருந்திருப்பதாகவும், கழிவுகளை நீக்கிய பின் ஓரிரு நாட்களில் அதே இடங்களுக்கு மீன் பிடிக்கச் சென்றால் அப்போது அங்கே கணிசமாக மீன்கள் சிக்கிய வித்யாசத்தையும் ப்ரியேஷ் தன் கிராமத்தாருக்கு ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்ட கிராமப் பஞ்சாயத்தார் தற்போது ப்ரியேஷுக்கு உதவிகரமாக பிளாஸ்டிக் சுத்திகரிப்புக் கூடம் ஒன்றை ஊர்ப்பொதுவில் நிர்மாணித்துத் தந்திருக்கிறார்கள். அத்துடன் அவரது சேவையை அவ்வப்போது ஊக்குவிக்கவும் தவறுவதில்லை.