3) கை காய்த்தால், கமுகு காய்க்கும்"
ஈக் கொட்டாமல் தேனெடுக்க விரும்பும் சோம்பேறிகளுக்குச் சொல்லப்படும் அறிவுரை இது.பாக்கு மரம் பனை போல; தென்னை போல! அடிக்கடி மரம் ஏறி, காய்ந்து பட்ட மட்டை நீக்கி, பழுது பார்த்து, பக்குவம் செய்தால்தான் நல்ல பலன் தரும். கணுக்கள் நிறைந்த அம்மரம் காய்த்துப் பலன்தர வேண்டின், கைகள் புண்ணாகி, காய் காய்க்கஅடிக்கடி மரம் ஏறுவது அவசியம். மரக்கன்றை ஊன்றினால் போதாது. கைகள் கெட்டிப்பட, மரம் ஏறி, உழைக்க வேண்டும்.
4) "மேய்த்தால் கழுதை மேய்ப்பேன்; இல்லாது போனால் பரதேசம் போவேன்"
இது சுயநல சுகபோகிகளின் கோட்பாடு. "எனக்குத் தெரிந்தது ஒரே ஒரு தொழில். அதை விட்டு, வேறு தொழில் செய்ய வற்புறுத்தாதீர்கள்" என்ற வீம்பு பிடித்த மனோபாவம். புதிதாய் கற்றுக் கொள்ள விரும்பாத சுபாவம். "அடைந்தால் மகா தேவி; இல்லையேல் மரண தேவி" என்ற பிடிவாத வசனமும் கூடப் பொருந்தும்.
5) "முடி வைத்த தலைக்கு, சுழிக் குற்றம் பார்க்கிறதா?"
'பொய் முடி வைத்த தலைக்கு' என்றும் எடுத்துக் கொள்ளலாம். 'மூடி வைத்த தலைக்கு' என்றும் கொள்ளலாம். இரண்டிலும் 'இது சொத்தை, அது சொள்ளை' என்று சொல்ல, அதற்குள் அடங்கிய சுழிக்கு அதிகாரமில்லை. சொல்வதில் அர்த்தமும் இல்லை. ஒண்ட வந்த இடத்தில் அனாவசியமாக அதிகாரம் பண்ணுகிறவர்களைக் குறிக்கும் என்று நினைக்கின்றேன்.
6) "எண்ணிப் பார்க்கக் கொடுத்த பணத்திற்கு நாளும், கிழமையும் எதற்கு?"
இப்படியும் பொருள் படலாம். சாட்சிகள் பார்த்திருக்க, கைமாறாகப் பெற்ற பணம் இது. கடன் பட்டது உறுதியாயிற்று. இதைத் திருப்பிக் கொடுக்கும் வரை, கடன்காரன்தானே? கொடுத்துக் கடன் அடைக்க, நாளும் கோளும் என்ற செண்ட்டிமெண்ட் எதற்கு? எவ்வளவு விரைவில் கடன் அடையும், அவ்வளவுக்கு நல்லது.