‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ எனும் குறும்படத்திற்கு இந்த ஆண்டுக்கான சிறந்த ஆவணப் படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது. பெண்கள் மாதவிடாய் காலத்திய இன்னல்களைப் பற்றிப் பேசும் இந்த ஆவணப் படத்தின் உருவாக்கத்தில் தமிழரான அருணாச்சலம் முருகானந்தத்தின் பங்கு அனேகம். கடந்தாண்டு வெளிவந்து விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘பேட்மேன்’ இந்தித் திரைப்படம் அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கைக் கதையே. இந்தியப் பெண்களில் பெரும்பாலானோர் மாத விடாய் காலங்களில் இப்போதும் கூட சுகாதாரமான நாப்கின்களைப் பயன்படுத்த வகையற்று சுத்தமற்ற பழைய கிழிசல் துணிகளையே பயன்படுத்தி வரும் போக்கி இன்றும் கூட கிராமப்புறங்களில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் அருணாச்சலம் முருகானந்தத்தின் குழுவினர் எடுத்த ஒரு சர்வேயில் வெறும் 2% பெண்கள் மட்டுமே மாதவிடாய் காலங்களில் நாப்கின்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். மிச்ச அனைவரும் துணிகளையே மீண்டும் மீண்டும் துவைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்து மத்திய மாநில அரசுகள் திடுக்கிட்டன. கிராமப்புற பெண்கள் இன்னும் எத்தனை தூரம் விழிப்புணர்வற்று இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சர்வே ஒரு உதாரணம்.