‘எனக்கு இந்தப் போட்டியில் ஜெயிக்கும் வரை ஸ்பான்சர்கள் யாரும் கிடையாது. இந்தப் போட்டிக்கே நான் என் சொந்த செலவில் தான் விமான டிக்கெட்டுகளை புக் செய்து கொண்டு சென்றேன். இங்கே தங்குமிடம், விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்கள், முக்கியமாக ஓட்டப் பந்தய வீரங்கனையான எனக்குத் தேவையான தரமான ஷூ, சத்தான சாப்பாடு எல்லாவற்றுக்கும் நான் என்னை மட்டுமே நம்பியிருந்தேன். எனக்கு வெற்றியைத் தேடித் தந்த இந்தப் போட்டியில் கூட நான் கிழிந்த ஷூவைப் போட்டுக் கொண்டு தான் ஓடி ஜெயித்திருக்கிறேன். போட்டியில் என்னுடன் பங்கேற்ற அத்தனை விளையாட்டு வீரர்களுக்கும் இது தெரியும். பிற விளையாட்டு வீரர்களுக்கு இருந்த பகட்டான உடை வசதி எல்லாம் என்னிடம் கிடையாது. நான் சுமாரான உடைகளுடன் தான் அங்கு தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அதற்காகவெல்லாம் நான் வருத்தப்படவில்லை. நான் என்னுடைய குறிக்கோளில் மட்டுமே ஆழ்ந்த கவனத்துடன் இருந்தேன். அந்த கவனமும், அதை அடையும் மன உறுதியும் தான் எனக்கு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்று நம்புகிறேன் நான், ஆனாலும், நான் வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இருந்ததால் இது சாத்தியப்பட்டது. நம் மாநிலத்தில் என்னைப் போல பலர் விளையாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்று மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சாதித்த பின்னும் கூட விளையாட்டு வேண்டாம் என்று ஒதுங்கும் நிலை தான் இன்றும் நீடிக்கிறது. காரணம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேவையான பொருட்செலவை தாக்குப்பிடிக்க முடியாமல் தான்.