அயல்மொழித் திரைப்படங்களை அதிகம் கண்டதில்லை. கண்டவரையில் இந்தியத் திரைப்படங்களில், கதாநாயகி கர்ப்பமானால் உடனே அவளது வெட்கம் கலந்த தலைகுனிந்த முகத்தைக் காட்டிய அடுத்த செகண்டில் கேமரா கதாநாயகனின் முகத்துக்குத் தாவும், ஐயா சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார் அல்லது அளவிலா பெருமிதத்துடன் மீசையை முறுக்கிக் கொண்டு ரொமாண்டிக்காக கதாநாயகியைப் பார்த்துச் சிரிப்பார். இது தமிழ்சினிமாவில் நாயகி கர்ப்பம் என்றதும் நாயகன் அடைய வேண்டிய பாவமாக கருதப்படும் கிளிஷே காட்சிகளில் ஒன்றாக நெடுங்காலமாக வழங்கி வருகிறது. கர்ப்பம் என்பது ஒரு கூட்டு முயற்சி, ஆணும், பெண்ணும் இணைந்தால் தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். இன்னும் சொல்லப் போனால் ஆணின் விந்தணுக்களும், பெண்ணின் கருமுட்டைகளும் ஆரோக்யத்துடன் இருந்தால் மட்டுமே முழுமையான ஆரோக்யத்துடன் கூடிய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அதனால் பெருமிதம் என்பது இருவருக்கும் சரி சமமான உரிமை.