ஏதோ ஆர்வக் கோளாறில் பள்ளி தொடங்கி விட்டாரே தவிர, அந்தப் பள்ளியில் பயில ஏழைக் குழந்தைகளை ஈர்க்க வெகு பாடுபட வேண்டியதாயிருந்திருக்கிறது. பிள்ளைகள் தெருவில் வெட்டியாகச் சுற்றக் கூட விரும்பினார்களேயன்றி பிரகாஷ் ராவின் பள்ளிக்கு வர அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் பள்ளி என்றால் புத்தகங்கள், படிப்பு, ஆசிரியர்களின் கட்டுப்பாடுகள் என்று வழக்கமான பள்ளியைக் கற்பனை செய்து கொண்டு பள்ளிக்கு வர விருப்பமற்று இருந்தார்கள். அவர்களை ஈர்க்க ஒரே வழியாக அப்போது உணவு மட்டுமே இருந்தது. எனவே குழந்தைகளை பள்ளியை நோக்கி ஈர்க்க முதலில் உணவு இலவசம் என்று அறிவித்தேன். பலர் இப்போது பள்ளிக்கு வரத் தொடங்கினர். கற்பதற்காக அல்ல, உணவு கிடைக்கிறதே என்று. ஒருவேளை உணவு கூடக் சரிவரக் கிடைக்காத குழந்தைகளுக்காகத் தானே நான் இந்தப் பள்ளியைத் தொடங்கியது. அதனால் அவர்களது முதல் தேவை உணவு தான் என்பது எனக்கப்போது புரிந்தது. பிறகு அந்தக் குழந்தைகளுக்கு ஏற்றவாறு பாடப்புத்தகங்கள் வாயிலான கல்வி முறையாக இல்லாமல், பாட்டு, நடனம், ஜூடோ போன்றவற்றைக் கற்றுத்தரும் பள்ளியாக என் பள்ளியின் கற்பித்தல் முறையையும் மாற்றினேன். இப்போது பல குழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வரத் தொடங்கினர்.