நாம் தினமும் தொலைக்காட்சிகள், ஸ்மார்ட் ஃபோன்கள், துண்டுப் பிரசுரங்கள், ஃபிளெக்ஸ் போர்டுகள் வாயிலாகவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகைப்பொருட்கள் வாயிலாகவும் நமக்கு நன்கு அறிமுகமான எண்ணற்ற பிராண்ட் பொருட்களின் லோகோக்களைப் பார்க்கிறோம். ஆனால், நமக்குப் பல சமயங்களில் அந்தப் பொருட்கள் தான் நினைவிருக்கின்றனவே தவிர லோகோக்கள் குறித்து நாம் பெரிதாக யோசிப்பதாக இல்லை. லோகோக்கள் நாம் நன்கு அறிந்தவையாகவே இருப்பினும் அவற்றின் பின்னணி பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. நாம் அலட்டிக் கொள்ளாத காரணத்தால் லோகோக்களின் மவுசு ஒன்றுமில்லாததாக ஆகிவிடாது. அவை, அவற்றின் தனித்தன்மையுடனும், காலம் கடந்த வெற்றிகளுடனும் பல்லாண்டுகளாக ஜொலித்துக் கொண்டே தான் இருக்கின்றன. ஏனெனில் நமக்குப் பிடித்தமான பொருட்களை நாம் வாங்க ஒருவகையில் மறைமுகத் தூண்டலாக அமையக் கூடியவையும் இந்த லோகோக்கள் தான். எனவே லோகோக்களின் முக்கியத்துவம் பற்றி வாடிக்கையாளர்களான நாம் அலட்டிக் கொள்ளாவிட்டாலும் தயாரிப்பாளர்களுக்கும், அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப லோகோக்களை வடிவமைக்கும் டிசைனர்களுக்கும் அது குறித்த அக்கறையும், தெளிவும் நிறையவே இருக்கும்.