‘பிச்சையெடுக்குமாம் பெருமாளு, அதைப் பிடுங்குமாம் அனுமாரு’ என்ற பழமொழியைத்தான் இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். ஆனால், பாருங்கள், இங்கே... மைசூரில் 80 வயதான ஒரு பாட்டி, நாள்தோறும் கோயில் வாயிலில் அமர்ந்ததால் தனக்குக் கிடைத்த பணம் அத்தனையையும் சேர்த்து வைத்து சுமார் 2.1/2 லட்சம் ரூபாய்த் தொகையை ஆஞ்சநேயர் கோயிலுக்குக் காணிக்கையாக அளித்துள்ளார் என்று பரபரப்பாக இணைய ஊடகங்களில் பேச்சு அடிபடுகிறது. அந்தப் பாட்டியின் பெயர் எம்.வி. சீதாலட்சுமி. மைசூர், வொண்டிக்கொப்பில் இருக்கும் பிரசன்ன ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் வளாக வாசலில் அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் கும்பலுடன் சேர்ந்து இவரும் அமர்ந்திருப்பது வாடிக்கை. ஆனால், அங்கிருப்பவர்கள் சொல்லித்தான் தெரிய வருகிறது. இவர் தானாக முன் வந்து ஒருநாளும் பிச்சை கேட்பது இல்லையாம், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனமுவந்து தட்டில் போடும் காசையும், பணத்தையும் வேண்டாமென்று மறுப்பதும் இல்லையாம். இப்படிச் சேர்த்த பணத்திலிருந்து தான் சுமார் 21/2 லட்சத்தை கோயிலுக்கு காணிக்கையாக்கியுள்ளார்.