உணவில் சுவை என்று பார்த்தால் தமிழர்களின் நாவின் சுவை மொட்டுகளைக் கட்டிப் போடும் திறன் மலையாள உணவு வகைகளுக்கு இல்லை என்றே கூற வேண்டும். பழப்பாயஸம், எரிசேரி, புளிச்சேரி, குண்டு அரிசிச் சோறு, சப்பாத்தி, பூரி, புல்கா, பரோட்டா, நூடுல்ஸ், சிக்கன், மட்டன் பிரியாணி வகைகள் அனைத்திலுமே கொஞ்சம், கொஞ்சம் புகாரி வாசனை. இனித்துக் கொண்டு கிடக்கின்றன எல்லாமும். பிரியாணி என்றால் வாசம் மட்டும் மூக்கைத் துளைத்தால் போதுமா? நாவில் சுவை அறியப்பட வேண்டாமோ! அந்தக் குளிர் மலையின் ஜில்லிப்புக்கு கச்சிதமாக காரசாரமான சுவையில் பிரியாணி கிடைக்கவில்லையே என்பது கொஞ்சம் வருத்தமான விசயமே. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி கூட நம்மூரைப் போல இல்லை. ஓரிரு நாட்களுக்கு சமாளிக்கலாம் என்ற அளவில் தான் இருக்கிறது அவற்றின் சுவையும். கிரில்டு வகை உணவுகளின் சுவை கொஞ்சம் தேவலாம். பேசாமல் மூணாறுக்குச் செல்பவர்கள் அனைவரும் அந்த நாட்களில் மட்டுமேனும் பேலியோவுக்கு மாறலாம். அந்த அளவுக்கு சைவத்தைக் காட்டிலும் அசைவம் அங்கே கொஞ்சம் தேவலாம் என்றிருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட மகா உத்தமமான விசயம் ஒன்றுள்ளது. சிரமம் பார்க்காமல் கணிசமாக நல்லெண்ணெயில் ஊற வைத்த பொடி இட்லிகளையும், தாராளமாக வெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சுட்ட மிருதுவான சப்பாத்திகளையும் தயார் செய்து நபர்களுக்குத் தக்க தனித் தனி பொட்டலங்களாக கட்டி எடுத்துக் கொண்டு இப்படி உல்லாசச் சுற்றுலா செல்வதென்றால் அதிலும் ஒரு நிம்மதியும், பாதுகாப்புணர்வும் இருக்கவே செய்கிறது. அதோடு காசும் மிச்சம் பாருங்கள். அங்கே ஒரு காஃபிக்கு கூட 350 ரூபாய் தண்டம் அழ வேண்டியிருக்கிறது. ஆகவே சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் முதலில் என்னவெல்லாம் அவசியத் தேவைகள் என முன்னேற்பாடாக ஒரு லிஸ்ட் போட்டுத் தயார் செய்து எடுத்துச் செல்வது பயணத்தை எளிமையாக்கி விடும்.