அப்போதெல்லாம் வித்யாசமான நல்ல கதைகளை, சம்பவங்களை வெற்றிகரமான நாடகங்களாக மாற்ற நாடக மேதைகள் பலர் இருந்தனர். கே.பாலசந்தர், வி.எஸ்.ராகவன், மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் இயக்க சிவாஜி, நாகேஷ் உள்ளிட்ட திறமைசாலிகள் நடித்து மிகப் பெரிய வெற்றிகண்ட நாடகங்கள் பல அப்போது வெளிவந்து கொண்டிருந்தன. அந்தச் சூழ்நிலையில் அமெச்சூர் நாடகக் குழுவின் நாடகங்கள் ரசிக்கப் பட வேண்டும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற வேண்டும், என்றால் நாங்கள் நிச்சயமாக வித்யாசமான படைப்புகளைத் தர வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தோம். அந்த நிர்பந்தமும், தொடர்ந்த பயிற்சிகளும் தான் மக்கள் விரும்பும் அருமையான நாடகங்களைப் போடும் உத்வேகத்தை எங்களுக்கு அளித்தது. இல்லா விட்டால் இத்தனை ஜாம்பவான்களுக்கு மத்தியில் எங்களது நாடகத்தை யார் பார்ப்பார்கள்? எனும் பயம் எங்களுக்கு இருந்து தொடர்ந்து எங்களை இயக்கிக் கொண்டிருந்தது.