ஒவ்வொரு விசில் கச்சேரிக்கும் முன்னதாக இவர்களது விசிலர்ஸ் குழுவினர் இரண்டு அல்லது மூன்று முறை ஒன்றாகக் கூடி பிராக்டிஸ் செய்கிறார்கள். விசில் கச்சேரியில் இவர்களுக்கு இருக்கும் பேரார்வத்தின் அடுத்த கட்டமாக கர்நாடக இசைப் பாடல்களையும் விசில் கச்சேரியில் சாத்தியமாக்க வேண்டும் என்பது தான் குழுத் தலைவரான ஜகத்தின் ஆசை. அதுமட்டுமல்ல ஜகத் மறைந்த நகைச்சுவை நடிகரும், அபார நடனக் கலைஞருமான சந்திரபாபு அவர்களின் தீவிர விசிறி, சந்திரபாபு பாடல்களைப் பற்றிப் பேசும் போது மனிதர் மிகுந்த உவகையுடன் சொன்னவை, ‘1959 ல் வெளிவந்த சகோதரி திரைப்படத்தில் வெளிவந்த பாடலான ‘நான் ஒரு முட்டாளுங்க பாடலும், 1962 ல் வெளிவந்த அன்னை திரைப்படப் பாடலான ‘புத்தி உள்ள மனிதரெல்லாம்’ என்ற பாடலும் சந்திரபாபு நடித்த திரைப்படங்களின் கிளாஸிக் வகைப்பாடல்கள். விசில் கச்சேரியில் இந்த இரண்டு பாடல்களையும் அபாரமாகப் பிராக்டிஸ் செய்யலாம். கூடிய விரைவில் பழம்பெரும் நகைச்சுவை நடிகரான சந்திரபாபு அவர்களுக்கு, அவரது சிறந்த பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து எங்களது குழுவின் விசில் கச்சேரி பாடல்கள் மூலம் சிறப்பான அஞ்சலி செலுத்த வேண்டும் என்று ஆசைப்படுவதாக ஜகத் கூறுகிறார்.