/

தோசை, இட்லி, உப்புமா சாப்பிட்டு விட்டு விரதம் இருப்பது வேஸ்ட்!

அடை தோசை, இட்லி உப்புமா, சப்பாத்தி என்று இன்றைய  பலகார உணவுகள் போன்றவை முக்கிய உணவே தவிர, உபவாஸத்திற்கேற்றவை அல்ல. சாதாரண உணவை விட, செரிமானத்தில்  கனமானவையே. 

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:56 pm

எஸ். சுவாமிநாதன்

சிலருக்கு உபவாசம் அதாவது விரதம் இருக்க ஆசை இருக்கும், ஆனால் முறையாக எப்படி விரதம் இருப்பது என அறியாமல் வயிறு நிறைய இட்லி, உப்புமா, தோசை, மேற்கொண்டு பழங்கள், பால் எல்லாம் மொக்கி விட்டு விரதம் இருந்து அதன் பலனையே இல்லாமாலாக்கிக் கொள்வார்கள். இன்னும் சிலரோ கடுமையாக விரதமிருக்கிறேன் என்ற பெயரில் உடலில் நீர்ச்சத்தை வற்றிப் போகச் செய்து மயக்கம் வரும் அளவுக்கு தங்களைத் தாங்களே பலகீனப் படுத்திக் கொள்வார்கள். அப்படியெல்லாம் விரதம் இருப்பதில் ஒரு பயனும் இல்லை. எப்படி விரதம் இருந்தால் முழுமையான பலன் கிடைக்கும் என இந்த ஆயுர் வேதப் பேராசிரியரின் பதிலில் தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் பகுதி தினமணி.காம் முகப்புப் பகுதியில் தொடராகவும் வெளி வந்து கொண்டிருக்கிறது. ஆர்வமிருப்பவர்கள் அங்கு சென்றும் ஆயுர்வேதம் குறித்து மேலதிகமாகத் தெரிந்து கொள்ளலாம்.

விரத நாட்களில் உபவாசம் இருக்க ஆசைப்படுகிறேன். அதனால் உடலுக்கு தொந்தரவுகள் ஏற்படாதிருக்க முன் யோசனை தேவை. அதனால் ஏற்படும் நன்மைகள் எவை? 
-சிவராமன்,  சென்னை.

உபவாஸத்தின் நோக்கம் மனதைக் கட்டுப்படுத்தி ஒரு நிலைப்படுத்துவதுதான். உப-சமீபத்தில், வாஸம்-இருப்பது. தெய்வத்தை விட்டகலாமல் அதன் அருகிலேயே உடலால் வசித்து உணர்வால் நெருங்கி உணர்ச்சிகளைக் குவித்து ஒருமுகப்படுத்தி வைப்பதே உபவாசம். விரதம் என்ற சொல்லும் உடலாலும் பேச்சாலும் எண்ணத்தாலும் ஒன்றையே கடைப்பிடித்தலைக் குறிப்பிடுகிறது. வயிறு நிறைய உண்ட உணவு மனத்தையும் உடலின் செயலாற்றும் திறனையும் வயிற்றைச் சுற்றி நிற்கச் செய்கிறது. மனத்தை அடக்கும் உபாயங்களில் நாக்குக்கு முதலிடம். நாக்கு ஞானேந்திரியமும் கண் கர்மேந்திரியமுமாகும். பேச்சை அடக்குவதும் சுவை உணர்ச்சியை அடக்குவதும் நாவை அடக்கும் உபாயங்கள். 

புலன்களைக் கட்டுப்படுத்தும்போது அவற்றை அளவுக்கு மீறி துன்புறுத்துவதும் கூடாது. அதிகமாக அவற்றைத் தாஜாவும் பண்ணக் கூடாது. வீரன் தன் வாகனமான குதிரையை நடத்துவது போல நடத்த வேண்டும். உபவாஸம் இயற்கைக்கெதிரான ஒரு சாகசச் செயலே. குதிரை ஏற்றம், மல்யுத்தம், மலைஏற்றம் போன்றவற்றைக் கிரமமாக பல நாட்கள் தொடர்ந்து பழகிய பின் கடுமையான முயற்சிகளில் ஈடுபடுவது போல் உபவாசத்திலும் கிரமமாக பழகுவதே ஆரோக்கியத்திற்கேற்றது. ஆகவே அறுசுவை உண்டி முறையில் கட்டுப்பாடு ஏற்படுத்திக் கொள்வது, வாரம் 2 - 3 வேளைகள் சுவைமிக்க உணவுகளை நிறுத்தி, பாலன்னம் போன்ற மித ருசியுள்ள உணவு ஏற்பது நல்லது. மற்ற சுவைகளின் உதவியின்றித் தனித்துச் சாப்பிடக் கூடிய உணவு இனிப்பானது மட்டுமே. அதிக அளவில் உண்டால் தெவிட்டல் ஏற்படும். இனிப்பையும் பெயரளவிற்குச் சேர்த்து வாரம் 2,3 வேளை மட்டும்  உணவாகக் கொள்ளுதல்  தான் அரிசியை வறுத்து சமைத்துச் சாப்பிடுவது. பாலும் சர்க்கரையுமே இதற்குத் துணை. முடியாதவர்கள் புளிக்காத மோரும் லேசான உப்பும் வைத்துக் கொள்ளலாம். இதன் பிறகு பகலுணவையோ இரவுணவையோ தவிர்த்து, தேவையாயின் பழங்கள் பால் முதலியவற்றால் பசி வேகத்தைத் தணித்துக் கொள்ளலாம்.

பிறவியிலிருந்து ஏற்பட்டுள்ள பழக்கம் காரணமாக, ஜீரணமாகாமலிருந்தாலும் ஜீரணமாகியிருந்தாலும் வேளைக்குப் பசி உணர்ச்சி மேல் வயிற்றில் ஏற்பட்டுவிடும். இதை உணராமல் இருக்க முடியாது. ஓரளவு இதை மதிக்கவும் வேண்டும். இதமான லேசான உணவைப் பெற்றால் கூட இந்தப் பசி உணர்ச்சி மந்தப்பட்டுவிடும். இதை நன்றாகப் பழக்கிக் கொண்ட பின்  ஏற்றுக் கொள்ளும் ஒருவேளை உணவையும் வறுத்த அரிசி கொண்டு ஆக்கிய சோற்றுடன் பாலோ, மோரோ சேர்த்து உப்பும் சர்க்கரையும் சேர்க்காமலேயே சாப்பிட்டுப் பழக வேண்டும். இப்படிப் பழகிய பின்னரே பழமோ, பாலோ, மோரோ மட்டும் ஏற்றுப் பட்டினி கிடக்க வேண்டும்.

அடை தோசை, இட்லி உப்புமா, சப்பாத்தி என்று இன்றைய  பலகார உணவுகள் போன்றவை முக்கிய உணவே தவிர, உபவாஸத்திற்கேற்றவை அல்ல. சாதாரண உணவை விட, செரிமானத்தில்  கனமானவையே. இவற்றைச் சாப்பிடுவதை விட சாதாரண உணவை ஏற்பது நல்லது. பலகாரங்களின் துணைகொண்டு உபவாசத்தில் மனதைக் கட்டுப்படுத்த முடியாது. உபவாசம் என்பது பட்டினியல்ல, மனத்தைக் ஒருமிக்கச் செய்வதுதான். பட்டினிகிடந்து மறுவேளை உணவு எப்போது ஏற்போமென்றோ, அது எப்படி அமைய வேண்மென்றோ உணவு பற்றிய சிந்தனையில் மூழ்கி இருப்பதைவிட, வயிறாரச் சாப்பிட்டு மனதைக் கட்டுப் படுத்துவது எளிதாகக் கூட முடியலாம்.

பட்டினி கிடப்பதால் ஏற்படும் நன்மை, வயிற்றுப் பகுதிகளுக்கு ஓய்வு, உணவு ஜீரணமாகாமல் தேங்கி நிற்பதைத் தவிர்த்தல், ஜீரண திரவச் சுரப்புகள் தெளிவடைதல், உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமை, சுறுசுறுப்பு மனத்தெளிவு  போன்ற லாபம் உண்டு. இதுவே அளவு மீறும்போது களைப்பு, படபடப்பு, வயிற்றில் வேக்காளம், வாந்தி, முதலியவை ஏற்பட்டுத் தொடர்ந்த நோய்நிலைக்கு அஸ்திவாரமாக இந்தப் பட்டினியே ஆவதுமுண்டு. பட்டினி தொடரும்போது உணவு வேளையில் உணவை எதிர்பார்த்து முன் கூட்டியே சுறுசுறுப்படைந்த ஜீரணத் திரவச் சுரப்பிகள் உணவு வராததால் உபயோகமின்றி இரைப்பையில் அதிகச் சூட்டையும் விறுவிறுப்பையுமளித்து தானே அமைதி பெறுகின்றது. ஆனால் இவை இரைப்பை சுவரில் வேக்காட்டை உண்டாக்கலாம். உணவு கிடைக்காத ஏக்க உணர்ச்சியில் ஜீரண திரவம் அதிகம் சுரக்கும். மனதைக் கட்டுப்படுத்த இந்த பசி உணர்வே வராமலும் இருக்கக் கூடும். அதனால் மனநிலையும் பட்டினியால் ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு முக்கிய காரணமாக ஆகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.