இது நடந்தது இந்தியாவில் அல்ல. நம் அண்டை நாடான பங்களாதேஷில் தனியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியொன்றின் ஆங்கிலப் பேராசிரியரான மசூத் மமூத்திற்குத் தான் இப்படியொரு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார்கள் அவரது மாணவர்கள். மசூத், மாணவர்களுக்குப் பாடம் எடுக்கையில் தொடர்ந்து அவரது சொற்பொழிவுகளில் பொருத்தமற்றதும், ஆபாசமானதுமான கருத்துக்களும், சொல்லாடல்களும் இடம் பெறுவது வாடிக்கை என்று குற்றம் சாட்டும் மாணவர்கள். இது குறித்து கடந்த ஏப்ரலில் மாதத்தில் நாட்டின் துணை கல்வி அமைச்சருக்கு புகார் அளித்திருந்ததாகக் கூறுகின்றனர். மாணவர்களின் புகாரைத் தொடர்ந்து பல்கலைக் கழக அதிகாரிகள் அந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரித்தனர். ஆனால், அப்போது மாணவர்களின் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக எதுவும் கண்டறியப்படவில்லை என்கிறது சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம்.