உலகெங்கும் மன்னராட்சி வழக்கொழிந்து போய் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்த நாட்களிலும் இன்னும் உலகநாடுகளில் சில மன்னராட்சியின் மகத்துவத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவதை விரும்பியே ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அதில் பிரதான இடம் வகிப்பது இங்கிலாந்து. அங்கே பிரதமர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இங்கிலாந்து அரச குடும்பத்தாருக்கும் அளப்பரிய மரியாதை அளிக்கப்பட்டு வருவது உலகறிந்த உண்மை. இங்கிலாந்து தவிர கனடாவிலும் இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கு அதிகாரம் உண்டு என்கிறது அந்நாட்டு அரசுமுறை நியதிகள். வளைகுடா நாடுகளிலும் ஃபக்ரைன் உள்ளிட்ட சில நாடுகளில் மன்னராட்சி இன்னும் அற்றுப் போகவில்லை என்பது நிஜம். அவர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் இல்லையென்ற போதும் பிறவியிலேயே கிடைத்து விடக்கூடிய குலப்பெருமைகளை அவர்கள் இப்போதும் கட்டிக் காத்து வருவதோடு அவற்றுக்குண்டான வசதிகளையும், மரியாதைகளையும் அனுபவிக்கத் தவறுவதில்லை. உலகின் மன்னராட்சி முறையை வழுவாது பின்பற்றி வரும் மற்றொரு நாடு ஜப்பான். இங்கும் ஜப்பானியப் பேரரசருக்கு அரசியம் அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் நாட்டு மக்களிடையே மன்னர் குறித்த மிகப்பெரிய ஆராதனை உண்டு.