சென்னை மெரினாவில் இருக்கும் கார்ப்பரேஷன் நீச்சல் குளத்தில் 38 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் நேற்று மூழ்கி இறந்தார். அவர் மண்ணடி, டஹ்ம்பு செட்டித் தெருவைச் சேர்ந்த சஃபியுல்லா என அடையாளம் காணப்பட்டார். தனியார் நிறுவனமொன்றில் மேலாளராகப் பணியாற்றிய சஃபியுல்லா தினமும் காலையில் தன் குழந்தைகளை நீச்சல் கற்றுக் கொள்ள மெரினா நீச்சல் குளத்துக்கு அழைத்து வருவது வழக்கம் எனக் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. வழக்கம் போல செவ்வாயன்று காலை 7.30 மணியளவில் தனது மகனையும், மகளையும் நீச்சல் பயிற்சிக்கு அழைத்து வந்த சஃபியுல்லா அவர்களை நீச்சல் பயிற்றுநரிடம் ஒப்படைத்து விட்டு தானும் சற்று நேரம் நீந்தலாம் என முடிவு செய்து குளத்தில் குதித்திருக்கிறார். குதித்த மாயத்தில் சஃபியுல்லா மூச்சுத் திணறி இறந்திருக்கிறார். அவர் குதித்த நீச்சல் குளத்தில் ஆழம் 2.5 அடி மட்டுமே. எனவே ஆழத்தின் காரணமாக நிகழ்ந்த மரணமாக இருக்க வாய்ப்பு இல்லை என அண்ணா சதுக்க காவல்நிலைய காவலர்கள் தெரிவித்தனர்.