ராணி பத்மினி தீப்பாய்ந்ததை என்னால் துணிச்சலான காரியமாகவோ, அல்லது அவரது தைரியத்தின் அடையாளமாகவோ கருத முடியவில்லை. ஏனெனில், ஒரு பெண், வாழ்வின் கடினமான தருணங்களில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பதை எப்படி துணிச்சலுக்கு உதாரணமாகக் கூற முடியும்? தனக்கு வரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வெல்வது தானே வெற்றியாக இருக்க முடியும். நான் இந்தக் கோட்டை வளாகத்தில் தான் பிறந்தேன். இங்குள்ள ஒற்றை அறை தான் எனது வீடு. எனக்கு 3 வயதான போது போலியோ தாக்குதலால் எனது கால்கள் செயலிழந்து இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. அதனால் பிற்காலத்தில் யாரும் மணந்து கொள்ள முன்வரவில்லை. என் பெற்றோர் என்னை வற்புறுத்தி எனது 18 வயதில் காடு கேளாத, வாய் பேச முடியாத ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர். திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள நான் விதித்த ஒரே நிபந்தனை. மணமான பின்னும் நான் எனது கல்வியைத் தொடர வேண்டும் என்பதே. அதற்கு ஒப்புக் கொண்டு எனக்குத் திருமணம் நடத்தப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டே எனது கணவர் மற்றொரு பெண்ணையும் மணந்து கொண்டதால், நான் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற விண்ணப்பித்தேன். இதையறிந்து எனது பெற்றோரும், உறவினரும்... வேண்டாம் அப்படிச் செய்யாதே, உனக்கு அதன் பிறகு வேறொரு கணவன் வாய்க்கவே மாட்டான் என்றார்கள். எனக்கு மகாக் கோபம் வந்தது. என் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து முடிக்க கணவன் என்ற பெயரில் ஒருவன் இருந்தே ஆகவேண்டுமென்பதில்லை. என்னால் எனது சுயகால்களில் நிற்க முடியும் என்று உள்ளுக்குள் முடிவெடுத்ததோடு அதை அவர்களுக்கான பதிலாகவும் திரும்பச் சொன்னேன்.