வடமாநிலமொன்றின் கலாச்சாரப் பெருமைகளையும் பாரம்பர்ய விளையாட்டுக்கள் மற்றும் நடனங்களையும் தமிழகத்தில் பரப்பும் வகையில் முழுக்க முழுக்க வீர தீர சாகச விளையாட்டுகள், பொம்மலாட்டம், யானைச்சவாரி, குதிரைச் சவாரி, மாட்டுவண்டிச் சவாரி, ஒட்டகச் சவாரி, பொய்க்கால் குதிரை, எனப் பல்வேறு விதமான கேளிக்கைகள் நிரம்பிய அந்த கிராமத்தின் நுழைவாயிலில் விருந்தினர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் மேள தாளங்களுடனும், பொய்க்கால் குதிரை ஆட்டத்துடனும், மஞ்சள், குங்குமம் இட்டு மலர் தூவி வரவேற்கும் விதமே அலாதியானதாக இருக்கும். விடுமுறை நாட்களில் சென்னை வாழ் மக்கள் குடும்பம் குடும்பமாக இங்கே வருகை தருவது வழக்கமான ஒன்று. தனிப்பட்ட பார்வையாளர்களுக்கு மாலை 4 மணிக்கு மேல் அனுமதி. அதே சமயம் பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களது சுற்றுலா என்றால் பகலிலும் இங்கு அனுமதி உண்டு. தவிர இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகளும், விளம்பரங்களுக்கான படப்பிடிப்புகளும் கூட நடத்தப்படுவதுண்டு.