கடந்த வாரம் இணையத்தில் வைரல் டிரெண்ட் அடித்த புகைப்படம் இது. இந்தப் புகைப்படத்தை நன்கு உற்றுக் கவனியுங்கள். அந்தப் பாட்டியின் முகத்தில் வழியும் வேதனை உணர்வு பார்ப்போரை உருகச் செய்யும் விதத்தில் மனம் நெகிழச் செய்கிறது. பாட்டியின் வேதனையைக் கூட, ‘அட இப்படி எத்தனை பேரை நாள்தோறும் சாலையோரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் நகரத்தின் பரபரப்பான இன்னபிற இடங்களிலும் கடக்க நேர்கிறது. அவர்களை நின்று கவனிக்கக்கூட நேரமில்லை. வேலை தலைக்கு மேலே மூழ்கடிக்கக் காத்திருக்கையில் இப்போது இந்தப் பாட்டியின் வேதனை தானா எனக்குப் பெரிது?!’ என்ற ரீதியில் நம்மில் பெரும்பாலானோர் கடந்து விடுகிறோம். ஆனால், பாட்டியின் தோளின் மீது அரவணைப்பாக கை வைத்துக் கொண்டு அவரது வேதனையைச் செவி மடுக்கும் அந்தக் குரங்கைப் பார்க்கையில் அது கடந்து செல்பவர் யாருக்குமே சற்று அதிசயமாகத் தான் இருக்கிறது.