அகதிகளின் அவல வாழ்வைப் பதிவு செய்யும் பச்சைக்கண் பேரழகி!
சர்பத் குலாவின் பச்சை நிறக் கண்கள் ஆப்கானிஸ்தான் அகதிகள் பிரச்னையை உலக நாடுகள் முழுவதும் கொண்டு சேர்த்தது. மனோதிடம், சோகம், நிர்க்கதி, அழகு கலந்த படத்தை எடுத்த ஸ்டீவும் பெரும் பாராட்ட


ஆப்கானிஸ்தான் அகதிகளின் சோகத்தை ஆழமாகப் பிரதிபலிக்க பளிச் பச்சை நிறக் கண்களைக் கொண்ட சர்பத் குலாதான் பொருத்தமானவர் என்று தீர்மானித்த பிரபல புகைப்படக்கலைஞர் ஸ்டீவ் மெக்கர்ரி, சர்பத் குலாவை 1984 இல் படம் பிடித்தார்.
சர்பத் குலா அப்போது பாகிஸ்தானில் ஒரு அகதிகள் முகாமில் அவலத்தின் விளிம்பில் இருந்தார். அப்போது குலாவிற்கு வயது பத்து. சர்பத் குலாவின் முகம் 1985 ஜுன் மாத நேஷனல் ஜியோக்ராபிக் இதழில் அட்டைப்படமாக வெளியாகி உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. உலகமே, சர்பத் குலாவை ஆப்கான் போரின் விளைவுகளைச் சொல்லும் அப்பட்ட முகம் என்று அனுதாபம் காட்டியது.
சர்பத் குலாவின் பச்சை நிறக் கண்கள் ஆப்கானிஸ்தான் அகதிகள் பிரச்னையை உலக நாடுகள் முழுவதும் கொண்டு சேர்த்தது. மனோதிடம், சோகம், நிர்க்கதி, அழகு கலந்த படத்தை எடுத்த ஸ்டீவும் பெரும் பாராட்டைப் பெற்றார். இந்த வண்ணப் படம், புகழ் பெற்ற மோனாலிசா படத்துடன் பேசப்பட்டது.
ஸ்டீவ் 1990 வாக்கில், மீண்டும் சர்பத்தைத் தேடி அலைந்தார். 2002- இல் நேஷனல் ஜியோக்ராபிக் இதழின் குழு, சர்பத் குலாவைக் கண்டு பிடித்தது. விஷயம் தெரிந்ததும் ஸ்டீவ் பாகிஸ்தான் வந்து அவரைச் சந்தித்தார். 2002-லும் நேஷனல் ஜியோக்ராபிக் இதழ் சர்பத் குலா பற்றி விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தது. 1985-இல் வெளியான அட்டைப் படத்தை சர்பத் பார்த்தது 2002 -இல் தான். சாதாரணமாக விஐபி பற்றி பல கால கட்டங்களில் ஊடகங்கள் எழுதும். சர்பத் குலா மாதிரி ஒரு அகதியைப் பல கால இடைவெளிகளில் சந்தித்து கட்டுரைகள் எழுதுவது அரிதிலும் அரிது.
சர்பத் இப்போது மீண்டும் செய்தியில்!
போலி ஆவணங்களைக் காண்பித்து சர்பத் தனது மூன்று குழந்தைகளுடன் பாகிஸ்தானின் வசித்து வருவதைக் கண்டுபிடித்து சர்பத் சென்ற மாதம் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். சர்பத்திற்கு தற்சமயம் வயது நாற்பது, "ஹெபாடிடிஸ்- சி' நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சர்பத்திற்கு வேறு பல உடல் கோளாறுகளும் உண்டு. அகதியாக அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டதனால், முகம் பொலிவிழந்து, தோல் சுருங்கி உலர்ந்து நடைப்பிணமாக நிற்கிறார்.

இதை அறிந்த, பெங்களுருவில் உள்ள "நாராயணா மருத்துவமனை' அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் இலவச சிகிச்சை வழங்க முன் வந்துள்ளது.
இந்திய மருத்துவமனையின் பெருந்தன்மையைக் கண்ட ஆப்கானின் தூதர் ஷைதா அப்தாலி தனது நன்றியை இந்தியாவிற்கும், பெங்களூரு மருத்துவமனைக்கும் தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார். உலகத்தின் கவனங்களைக் கவர்ந்து பிரபலமான சர்பத் குலா விரைவில் இந்தியா வந்து தனது சிகிச்சையை மேற்கொள்வார். இலவசமாக அவருக்கு சிகிச்சை வழங்கவுள்ள இந்திய நாட்டிற்கு நன்றி. ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியா உண்மையான நண்பன் என்பது உறுதியாகியிருக்கிறது. என்று பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...