/

குதிரைவால் போன்ற நீளமான பட்டுக்கூந்தலுக்கு ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் போதும்!

பளீரெனும் அழகும், பளபளப்பான முகமும், ஆரோக்கியமான கூந்தலையும் வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா?

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:03 am

வி. உமா

பளீரெனும் அழகும், பளபளப்பான முகமும், ஆரோக்கியமான கூந்தலையும் வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா? இந்த இரண்டு விஷயங்களில்தான் பல பெண்கள் தங்களின் பொன்னான நேரத்தை செலவிடுகிறார்கள். பார்லர்களுக்குச் சென்றும், பல லட்சம் ரூபாய் செலவழித்து முகச் சீரமைப்பு செய்து கொள்ளும் சிகிச்சைகளையும் மேற்கொள்கின்றனர். இவற்றைவிட சிறந்த வழிமுறை அவரவர் வீட்டிலேயே உள்ளது என்பது பலருக்குத் தெரியாது.

Story image

எளிமையான அதன் பெயர் விளக்கெண்ணை. நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் விளக்கெண்ணையை மருத்துவத்துக்கும் இயற்கையான அழகுப் பராமரிப்பிற்காகவும் பயன்படுத்துகிறார்கள் என்கிறார்கள் நிபுணர்கள். காலம் காலமாக மென்மையான சருமத்துக்கு விளக்கெண்ணையத்தான் பயன்படுத்தினார்களாம்.

Story image

'போடா விளக்கெண்ணை' என்று யாராவது திட்டினால் அவர்கள் உங்களை மட்டம் தட்டுவதாக நினைக்க வேண்டாம். விளக்கெண்ணையில் எத்தனைவிதமான பலன்கள் உள்ளன என்பதை அவருக்கு விளக்கிச் சொல்லுங்கள். அது ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல இயற்கையான அழகுக்கும் மிகச் சிறந்ததாகும்.

Story image

காரணம் அதில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 6 மற்றும் 9 அதிகளவில் உள்ளது. அவை சரும ஆரோக்கியத்துக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது.

Story image

விளக்கெண்ணையைப் பயன்படுத்துவதால் தலைமுடி உதிர்வது குறையும், இளநரை தடுக்கப்படும், மண்டையில் உள்ள பிரச்னைகள் நீங்கி தலைமுடி நன்கு வளரும்.

Story image

சருமத்தைப் பொருத்தவரையில், பருக்கள் வராமல் முகத்தைப் பாதுகாக்கும், வயதாகையில் முகச்சுருக்கம் ஏற்படாமல் காக்கும். இவைத் தவிரவும் விளக்கெண்ணையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

Story image

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும், செழிப்பான அழகுக்கும் தினமும் விளக்கெண்ணையைப் பயன்படுத்துவது நல்லது என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்கள். அவர்கள் பரிந்துரைத்தவை :

1. பருக்கள் வராமல் தடுக்கும் 

அழகு சாதனப் பொருட்களை வாங்கி, அடிகக்டி பயன்படுத்துவதில் உள்ள பிரச்னை என்னவென்றால் அது நாளடைவில் உங்கள் சருமத்தில் இயற்கையாக உள்ள எண்ணெய்த்தன்மையை உறிஞ்சிவிடும். வறட்சியான சருமத்தில் மீண்டும் எதாவது க்ரீம்களைத் பயன்படுத்துவதால் பருக்களை ஏற்படுத்திவிடும்.

Story image

ஆராய்ச்சியே செய்யாமல் செயற்கையான க்ரீம்களை நம்பி முகத்தைக் கொடுக்கும் பலர் விளக்கெண்ணையை முகத்தில் தேய்ப்பதற்கு தயங்குவார்கள். அது பிசுபிசுவென்று இருக்கிறது. அதன் வாசனை குமட்டுகிறது என்றெல்லாம் காரணம் கண்டுபிடித்துக் கொண்டிருக்காமல் அதன் பலன்களை நினைத்துப் பார்த்தால் உண்மையில் ஆச்சரியப்படுவீர்கள். இயற்கையாக சருமத்துக்கு சமச்சீரான போஷாக்கை தரவல்லது விளக்கெண்ணை மட்டுமே. 

Story image

சில துளி விளக்கெண்ணையை எடுத்து, உங்கள் முகம் முழுவதும் படரும்படி மென்மையாக தேய்த்துக் கொள்ளுங்கள். இரவு முழுவதும் அது உங்கள் முகத்தை ஊறினாலும் நல்லதுதான். காலையில் எழுந்தவுடன் முகத்தை சுத்தமான நீரால் கழுவிவிடுங்கள். இரவு முழுவதும் ஊற வைக்க முடியவில்லை என்றால்  ஒரு மணி நேரம் ஊற வைத்தபின், வெந்நீரில் ஆவி பிடிக்கலாம். இதன்மூலம் முகத்திலுள்ள மென்துவாரங்கள் திறந்து விளக்கெண்ணையைச் சருமம் நன்றாக உறிந்துக் கொள்ளும்.

Story image

2. தலைமுடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்

எந்த எண்ணெயாக இருந்தாலும் அதை ரெகுலராகப் பயன்படுத்தும்போது கூந்தலுக்கு போஷாக்கினைத் தரும். அது விளக்கெண்ணையாக இருந்தால் கூடுதல் பலன்களைத் தரும் என்பது உண்மை. காரணம் விளக்கெண்ணையில் மற்ற எண்ணெய்களில் இல்லாத ரிஸினொலைக் எனும் ரசாயனம் உள்ளது. மேலும் ஒமேகா 6 கொழுப்புச்சத்தும் அதிகளவில் பொதிந்திருப்பதால், தலையில் தேய்க்கும் போது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

Story image

மேலும் விளக்கெண்ணை தலைமுடி வறட்சி அடைவதைத் தடுத்து, இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. தினந்தோறும் சிலருக்கு கொத்து கொத்தாக தலைமுடி உதிரும். தொடர்ந்து விளக்கெண்ணையைத் தேய்த்து வர கைமேல் பலனைக் காண்பார்கள்.  

Story image

வாரம் ஒரு முறையேனும் இந்த எளிய குறிப்பைப் பின்பற்றுங்கள் :

  • விளக்கெண்ணையை வெந்தயப் பொடியுடன் கலந்து கொள்ளவும்.
  • தலை முழுவதும் படும்படி நன்றாக தேய்த்து ஊற வைக்கவும்.
  • மெல்லிய துணியால் தலையைக் கட்டியபின், ஆவி பிடிக்கவும்.
  • அதன்பின் மைல்ட் ஷாம்பூ பயன்படுத்தி தலைமுடியை நன்கு அலசவும். 
Story image

இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால், தலைமுடி உதிர்வது குறைவதுடன் அதன் வேர்க்கால்கள் பலம் பெறும்.

3. முகச் சுருக்கத்தை தடுக்கும்
 
விளக்கெண்ணையைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால் முகச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும். சருமம் மென்மையாகவும் புத்துனர்ச்சியுடன் இருக்கும். காரணம் விளக்கெண்ணெய் சருமத்தின் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும் ஆற்றலை உடையது.

Story image

ஏற்கனவே முகச் சுருக்கம் இருந்தால் கூட தினமும் இரவு சில துளிகள் விளக்கெண்ணெயை சுருக்கங்களில் தடவி ஊற வைத்தபின் காலையில் கழுவிவர நல்ல பலன்களைத் தரும். பிரசவத்துக்குப் பின் ஏற்படும் வயிற்றுச் சுருக்கத்தையும் விளக்கெண்ணையைத் தொடர்ந்து தடவி வர விரைவில் சுருக்கங்கள் நீக்கும்.

Story image

4. கண்களில் ஏற்படும் கட்டியை குணப்படுத்தும்

விளக்கெண்ணெயில் மருத்துவ பலன்களும் அதிகம் உள்ளது. கண்களில் ஏற்படும் சிறு கட்டிகளுக்கு விளக்கெண்ணெய் சிறந்த மருந்தாகும். மூன்று அல்லது நான்கு நாட்கள் தொடர்ந்து ஒரு துளி விளக்கெண்ணையை காலை மட்டும் இரவில் கட்டியில் விட்டு வந்தால் கட்டி குணமாகும். கட்டியால் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பும் நீங்கி, குளிர்ச்சியாக உணரச் செய்யும்.

Story image

5. புண்களை ஆற்றும்

வயிற்றில் டாக்ஸின்களின் தேக்கம் அதிகரித்தால், அது மலச்சிக்கலை ஏற்படுத்தி அடிக்கடி அடிவயிற்றில் வலியைத் தரும். பாட்டி வைத்தியம் செய்வது போல் தொப்புளில் சிறிதளவு விளக்கெண்ணெயைத் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். சித்த மருத்துவரின் பரிந்துரைப்படி வரையறைக்கப்பட்ட அளவில் விளக்கெண்ணையைக் குடிப்பதாலும் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுதலைக் கிடைக்கும். விளக்கெண்ணெய், புண்களை ஆற்றவும்,  நரம்பு மற்றும் மூட்டு வலிகளுக்கான மூலிகைத் தைலம் காய்ச்சவும் பயன்படும். பூச்சிக்கடி அல்லது அலர்ஜியால் உட‌லி‌ல் ஏற்படும் தோ‌ல் அ‌ரி‌ப்பு‌க்கு ‌விள‌க்கெ‌ண்ணை மருந்தாகும். குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே இதனை பழக்கிவிட்டால் அவர்கள் வளரும் போது, அதன் பயன்களை முழுவதும் அடையலாம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.