அமைதி ஆனந்தம் பிராணாயாமம்
நாம் உள்ளும் புறமும் அமைதியாகவும் மகிழ்வாகவும் இருக்கின்ற பொழுதுகளைக் கவனித்துப் பார்த்தால்


நாம் உள்ளும் புறமும் அமைதியாகவும் மகிழ்வாகவும் இருக்கின்ற பொழுதுகளைக் கவனித்துப் பார்த்தால் நாம் மூச்சு விடுவதில் தான் சூட்சுமம் உள்ளது தெரியும். நம்முடைய மூச்சு ஆழமானதாகவும் இயற்கையுடன் ஒத்திசைவாகவும் இருக்கும் போதும் ஆனந்தமும் அமைதியும் நம்மிடம் நிரம்பியிருக்கும். ஆமை அதிக நாட்கள் (கிட்டத்தட்ட 400 ஆண்டுகள்) அமைதியாக உயிருடன் வாழ்வதற்குக் காரணம் அது ஒரு நிமிடத்தில் நான்கு மூச்சுக்கள் மட்டுமே விடும்.

வேகமாக ஒரு வேலையைச் செய்யும் போதோ அல்லது கடுமையாக கோபப்படும் போதோ நம்முடைய முச்சு இரைப்பதை கவனித்திருப்பீர்கள். நமக்கே தெரியாமல் நம்முடைய நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பை நாம் உருவாக்குகிறோம்.
சரியான முறையில் மூச்சு விடாமல் நம்முடைய நுரையீரலின் திறனை 30 சதவிகிதம் தான் பயன்படுத்துகிறோம். பிரணாயாமம் முறையாக கற்றுக் கொண்டு அதன் படி மூச்சை இயல்பாக விடப் பழகிக் கொண்டால் அது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பிராணாயாமம் தொடர்ந்து செய்து வந்தால் உடலின் சக்தி அதிகரிக்கும். சுவாசப் பயிற்சியை பின் பற்றி கோடிக் கணக்கான மக்கள் சக்தியை அதிகரித்து சாதனைகள் பல செய்து பெரும் பயன் அடைந்து வருகிறார்கள்.
நம்முடைய எண்ணங்கள் காற்றாடி போல, பிரணாயாமம் முதலிய மூச்சுப் பயிற்சிகள் அதைக் கட்டுப்படுத்தும் மெல்லிய நூல். தொடர்ந்து பிரணாயாமம் செய்து வந்தால் நம்முடைய எண்ண ஓட்டங்களை தெள்ளந் தெளிவாக்கலாம். இந்த நொடியில் எப்படி இருப்பது என்று பிரணாயாமம் செய்ய செய்ய தெரிந்துவிடும். அந்தந்த நொடிகளில் முழு விழிப்புணர்வுடன் இருப்பதே தியானம். வாழ்க்கையை அது நேர்மறையாக மாற்றும். உள் மூச்சு வெளிமூச்சு ப்ரீத் இன் ப்ரீத் அவுட் இந்த சுழற்சி மனிதர்களுக்கு நின்றுவிட்டால் அவர்கள் உடலில் உயிர் அற்றுப் போய்விட்டது என்று அர்த்தம். உணர்வுகளின் வெளிப்பாடு சுவாசத்தினால் தான் மாற்றம் அடைகிறது என்பது மூச்சைப் பற்றி கூறும் முக்கிய விஷயம். பிரணாயாமம் செய்வதால் உடல் நிலை, உணர்வு நில்லை மற்றும் சக்தி நிலை சமன் நிலையில் இருக்கும். இதனால் தெளிவான சிந்தனையும், மன அமைதியும் கிடைக்கும்.
மூச்சுக்கு சிறிது முக்கியத்துவம் கொடுங்கள். அது நல்ல ஆரோக்கிய வாழ்க்கைக்கு உங்களை இட்டுச் செல்லும். யோகத்தில் பலவிதமான பிரணாயாமப் பயிற்சிகள் உள்ளன. அவற்றில் ஏதோ ஒன்றை அல்லது சிலவற்றை பழக்கத்தில் கொண்டு வந்தால் ஒருபோதும் நோய் நொடி எதுவும் நம்மை அண்டாது. பரிபூர்ண ஆரோக்கியத்துடன் வாழலாம்.துயரம் அடைந்த போது சோக உணர்விலும், ஆச்சரியம்,வியப்பு போன்ற உணர்வுகள் ஏற்படும் போது இன்னொரு விதமாகவும், சோர்வாக இருக்கும்போதும் வேறொரு வகையாகவும், சந்தோஷமாக இருக்கும் போது முற்றிலும் வேறுவகையாகவும் மூச்சின் தன்மை மாறி மாறி இருப்பது இயற்கை. மனம் ஒரு குரங்கு என்று இதைத்தான் சொல்கிறார்கள். இப்படி மனம் ஒவ்வோரு உணர்விலும் இருக்கும்போதும் மூச்சை எப்படி விடுகிறோம் என்பதை கவனித்து அறிந்து கொள்ள வேண்டும். நமக்கு எந்த உணர்வு தேவையோ அந்த உணர்வில் இருக்கும்படி மூச்சைப் பழக்குவதே பிரணாயாமப் பயிற்சி.
நம்முடைய மூச்சு மணிக்கு ஒரு முறை, மூக்கின் இடது பக்கத் துவாரத்தில் இருந்து வலது பக்க துவாரத்தின் வழியாக மாறிமாறி நடைபெறும். இதன் நன்மை தீமைகளைக் கண்டறிந்து, இரு துவாரங்கள் வழியிலும் ஒரே நீளமும் தன்மையும் இருக்கும்படியாக மூச்சை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் மூச்சுப்பயிற்சி செய்வதை யோகிகள் கண்டுபிடித்தனர். உடலை உரப்படுத்தி, மனதை நிலைப்படுத்தி, சுவாசத்தையும் மூச்சையும் ஒழுங்குப்படுத்தி, அதன் மூலம் பயனடைய பிராணாயாமக் கலையை உருவாக்கினார்கள்.
ப்ராணன் தான் வாழ்க்கையின் ஆதாரம். பிரணாயாமம் செய்வதற்கு முன் நாடி சுத்தி செய்வது நல்லது. அது சுவாசத்தை சீராக்கும் ஒரு எளிய மூச்சுப் பயிற்சி . அதை ஒன்பது முறை தினமும் செய்து வந்தால் அது மூச்சை சீராக்கி மனத்தை அமைதியாக்கும். உடலையும் மனத்தையும் சமன்படுத்த நாடி சுத்தியே சிறந்த வழி.நாடிகள் அழுக்குகளால் அடைப்பட்டு இருந்தால் அவற்றுள் வாயு வடிவப் பிராணன் நுழைய முடியாது. எனவே, நாடிகளைத் தூய்மையாக்கும் முறைகளில் நிர்மானு, சமானு என்ற இரண்டு வகைகள் உண்டு. நிர்மானு என்பது, உடலைத் தூய்மை ஆக்கும் முறைகளில் நாடி சுத்தம் செய்வது. சமானு என்பது வேதமந்திர பீஜ மந்திரத்துடன் மூச்சை இழுத்துவிட்டுச் செய்வது.பிராணாயாமத்தின் பொதுவான அளவு 1:4:2. அதாவது, உள் மூச்சு ஒன்று, கும்பகம் நான்கு, வெளி மூச்சு இரண்டு. இப்படி ஒரே ஒரு பிராணாயாமம் தினமும் பழகினாலும் போதும்.

நம்முடைய உடலில் உள்ள நச்சுத்தன்மையை எப்படி அகற்றுவது? சுவாசம், வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் இவற்றின் மூலம் தான் உடலுள்ள கழிவுகள் அகற்றப்படுகின்றன. அடுத்து யோகா, நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ், ஜிம் பயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் மூலமாகவும் உடல் சுத்திகரிப்பு ஆகிறது. போதிய ஓய்வும், சமச்சீர் உணவுப் பழக்கமும், உறக்கமும் கூட இன்றிமையாதது. எளிமையான சைவ உணவுப் பழக்கமே உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
விரைவில் செரிக்கக் கூடிய தானிய உணவுகள், பச்சைப் வகைகள், காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள், பால், வெண்ணெய், நெய், சிவப்பு அரிசி, கொழியல் அரிசி எனப்படும் கைக்குத்தல் அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்ற எல்லா ஆர்கானிக் உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம். உப்பு, புளிப்பு, காரம், கசப்பு கலந்த உணவுகளை கூடுமானவரையில் தவிர்க்கவேண்டும். சமைத்து வெகுநேரம் ஆன, பழைய, கெட்டுப்போன உணவுகளைச் சாப்பிடக் கூடாது. பச்சைக் காய்கறிகள், தேங்காய் போன்றவற்றைச் சாப்பிடலாம். அதிகம் வெயிலில் அலைவதோ, நெருப்பின் அருகில் வெகு நேரம் நிற்கவோ கூடாது.
அரை வயிறு உணவும், கால் வயிறு காற்றும், கால் வயிறு தண்ணீரும் உடலில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அதிகப் பசியுடனோ, சாப்பிட்ட உடனேயோ பிராணாயாமம் செய்வது உடல் நலத்திற்கு கெடுதல்.
மூச்சுப் பயிற்சி பற்றி தெரிந்து கொள்ள கடல் அளவு விஷயங்கள் உள்ளன. முறையான மூச்சுப் பயிற்சி தொடர்ந்து செய்து வர மன அழுத்தம், டென்ஷன் போன்றவற்றிலிருந்து விடுதலை அடையலாம். உடலின் தட்ப வெப்பத்தை சமன்படுத்தி மூளையின் இரண்டு பகுதியையும் சரியாக இயங்கச் செய்து, இதயத்தையும் சீராக்கி ரத்த ஓட்டத்தை சரிப்படுத்தி ரத்த ஓட்டம் மற்றும் சுவாசம் ஆகிய அனைத்தும் ஒழுங்காக நடைபெற உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...