/

வீட்டிலேயே பார்லர்

அழகான பொலிவான சருமமே இளமைத் தோற்றத்துக்கு ஒரே வழி என்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:35 pm

உமா ஷக்தி.

அழகான பொலிவான சருமமே இளமைத் தோற்றத்துக்கு ஒரே வழி என்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக்.

தாறுமாறான க்ளைமேட் மாற்றங்களால் அதிகம் பாதிக்கபடுவது சருமம் தான். கோடை காலத்தில் சருமம் சூரியக் கதிரால் பாதிப்படைந்து டேன் ஆகிவிடும் பிரச்னை என்றால் குளிர் காலத்தில் சருமம் ட்ரை ஆகிவிடும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு வீட்டில் நாம் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களிலேயே இருக்கிறது. நேரமும் மனதும் இருந்தால் எல்லா சீசனிலும் பளிச்சென்று இருக்கலாம்.

Story image

பொதுவாக அனைவருமே தலையணை வைத்துப் படுப்பதைத் தவிர்க்கவேண்டும்.  இது கழுத்துப் பகுதியில் சதை மடிப்புகள் விழாமல் தடுக்கம்,முகத்துக்கு ரத்த ஓட்டம் அதிகமாகக் கிடைப்பதால் முகச் சுருக்கம் வராமல் பாதுக்காக்கும்.

வாரத்தில் இரண்டு தடவை இதை முயற்சிப் பாருங்கள் : 

முட்டையில் வெள்ளைக் கருவை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக நுரைக்கும் வரை அடித்துக் கலக்கவும். அதில் ஒரு ஸ்பூன் சோள மாவைக் கலந்து முகத்தில் மேற்புறமாகத் தடவவும். முப்பது நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.

நன்றாக மசிக்கப்பட்ட ஆப்பிள் ஒரு ஸ்பூன், மற்றும் ஈவ்னிங் ப்ரிம் ரோஸ் ஆயில் (பார்மஸியில் காப்சூல் வடிவத்தில் கிடைக்கும், இரண்டு காப்சூல்களை உடைத்துப் போட்டுக் கொள்ளலாம்) மற்றும் 1/2 ஸ்பூன் சர்க்கரை கலந்து முகத்திலும் கழுத்திலும் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும். இப்படிச் செய்தால் முகத்தில் விழும் சுருக்கங்கள் குறைந்து, முகம் பொலிவு பெறும்.

Story image

நன்றாக பழுத்த அவகேடோ (பட்டர் ப்ரூட்) பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சதைப் பகுதியைத் தனியாக எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேனைக் கலந்து, ஒரு ஸ்பூன் பொடித்த கல்கண்டை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். முகத்தில் இந்தக் கலவையை நன்றாகத் தடவி, ஒரு மெல்லிய துணியால்  மூடவும்.  அப்படியே சில நிமிடங்கள் விடவும். உலர்ந்தபின் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.  வயதான சுவடே தெரியாமல் முகம்  இளமை ஜொலிப்புடன் இருக்கும்.

சருமம் டேன் ஆகியிருந்தால் அதை நீக்கி மீண்டும் பொலிவாக சில வழிமுறைகள் உள்ளது.

ஆலோவேரா (கற்றாழை) ஜெல் – ஆலோவேரா ஜெல் சருமத்திற்கு மிகவும் நல்லது. தொடர்ந்து அதைத் தடவி வந்தால் சருமம் டேன ஆவதைத் தடுக்கலாம்.

மஞ்சள் மற்றும் எலுமிச்சைச் சாறு – சருமத்திலுள்ள அழுக்குகளை அகற்றி சருமம் பொலிவாக இருக்க தொடர்ந்து மஞ்சள் மற்றும் எலுமிச்சைச் சாறு பயன்படுத்த வேண்டும். ஒரு கிண்ணத்தில் மஞ்சள் எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சை சாற்றை அதனுடன் கலந்து பிசைய வேண்டும். சரி சம அளவில் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு இருப்பது நல்லது. முகம்,கழுத்து, கை கால்களில் இந்தக் கலவையைத் தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும். அதன் பின் கழுவிவிடவும். வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து இப்படிச் செய்து வர அதன் பலன்கள் விரைவில் தெரிய ஆரம்பிக்கும்.

பால் பவுடர் பேக் – பாதாம் எண்ணெய் சம அளவு எடுத்து பால் பவுடருடன் கலக்க வேண்டும். இதை முகத்தில் தேய்த்து பதினைந்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமத்தில் படிந்துள்ள மாசு மருக்கள் நீங்கி பளபளப்புடன் இருக்கும்.

இதே போன்று முட்டையின் வெள்ளைக்கருவும் சருமத்திற்கு நல்லது. தவிர வெள்ளரிக்காய், பப்பாளி, தக்காளி ஆகியவற்றையும் மசித்து கூழாக்கி பேக் போன்று முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி வர சருமத்தில் நீர்ச் சத்து சமன் நிலையில் இருக்கும். பொலிவுடன் மட்டுமின்றி ஆரோக்கியமாகவும் சருமம் பாதுகாக்கப்படும்.

பனிக்காலத்தில் முகம், கை கால்கள் வறட்சியுடன் காணப்படும். அச்சமயங்களில் மாய்சரைசர் பயன்படுத்தலாம். இதற்கென சந்தையில் கிடைக்கும் கிரீம் வாங்கி உள்ளங்கை,கால்களில் தடவுங்கள்.  நீரினால் கழுவினாலும் சற்று நீடித்திருக்கும். வெளியில் செல்லுமுன், இரவு உறங்கும்முன் கிரீமை தடவி விட்டுத் தூங்குவது நலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.