/

அழகுக்கு அழகு சேர்க்கும் 7 பொருட்கள்

இதற்கு நிரந்தர தீர்வு நம் வீட்டிலேயே இருக்கிறது. தேவை நேரம் மற்றும் நம் மீதான நமக்கு இருக்க வேண்டிய அக்கறை.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:40 pm

உமா ஷக்தி.

எல்லா பெண்களின் ஆசை அழகான தோற்றம் வேண்டும் என்பதே. ஆரோக்கியமான சருமம் இதற்கு மிகவும் முக்கியம். தூசி, வெயில், ஸ்ட்ரெஸ் போன்றவை சருமத்தின் இயற்கை எழிலை சிதைத்து சோர்வான தோற்றத்தையும் பொலிவற்றத் தன்மையையும் அதிகரித்துவிடும். இதை சரி செய்ய அழகு நிலையங்களுக்குச் செல்வார்கள் ஆனால் அவை சில நாட்கள் மட்டுமே சருமத்தை அழகாக்க காட்டும்.

இதற்கு நிரந்தர தீர்வு நம் வீட்டிலேயே இருக்கிறது. தேவை நேரம் மற்றும் நம் மீதான நமக்கு இருக்க வேண்டிய அக்கறை. இதோ உங்கள் வீட்டின் சமையல் அறைப் பொருட்களை வைத்தே உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் சிறக்க செய்யும் ஏழு பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம்.

தேன்

Story image

சருமத்துக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் உயிர்ச்ச் சத்துக்கள் அனைத்தும் தேனில் அதிக அளவு உள்ளது. சருமப் பொலிவை மெருகூட்ட தேனின் துணையை நாடலாம். இரண்டு டீஸ்பூன் சுத்தமான தேனை எடுத்து முகம் முழுவதும் பேக் போல போட்டு சற்று நேரம் கழித்து தண்ணீரில் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்கு, கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகள் எல்லாம் நீங்கி முகம் பளபளப்பாகும். தேனீ அல்லது பூவின் மகரந்தம், அல்லது ஆஸ்பிரின் இவை உங்களுக்கு அலர்ஜி எனில் தேனைத் தவிர்ப்பது நல்லது.

முட்டை மஞ்சள் கரு

Story image

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் சத்தும் நீர்ச்சத்தும் அதிக அளவில் உள்ளது. முட்டையில் உள்ள மஞ்சள் கருவை மட்டும் எடுத்து முகத்தில் பேக் போட்டு சற்று நேரம் உலர வைக்கவும். இதிலுள்ள சத்துக்களை சருமம் அப்படி உள்வாங்கும். மஞ்சள் கருவிலுள்ள புரதச் சத்து சருமத்தின் ஆரோக்கியத்தை காக்கும். நீர்ச் சத்து சருமத்தில் படிந்துள்ள மாசு மருக்களை நீக்கி புதுப் பொலிவை அளிக்கும்.

வாழைப் பழம்

Story image

உங்கள் சருமம் மிகவும் வறட்ச்சியாக பொலிவற்று இருக்கிறதா? கவலை வேண்டாம். வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளவும். அதை நன்றாக பிசைந்து  முகத்தில் பேக் போடவும். வாழைப்பழத்தில் பொட்டாஷியம் அதிக அளவில் உள்ளது. அது முகத்தின் வறட்சியை நீக்கி சருமம் மென்மையாக பொலிவாக இருக்கும்படி செய்யும். வாழைப்பழத்தில் வைட்டமின் சத்துக்களும் இருப்பதால் சருமத்தின் நீர்ச்சத்தை சமச்சீராக்கும், தவிர சருமத்தில் படர்ந்துள்ள கருமையை நீக்கும். தோலில் சுருக்கங்கள் விழாமல் பாதுகாத்து இளமையான தோற்றப் பொலிவை அள்ளி வழங்கும்.

எலுமிச்சைப் பழம்

Story image

சருமத்தை மிகவும் பொலிவாக வைத்திருக்க உதவுவதில் முதல் இடம் எலுமிச்சை பழத்துக்குத்தான். அதில் உள்ள சிட்ரிக் ஆசிட் மற்றும் வைட்டமின்கள் சருமத்தில் படிந்துள்ள கறைகள், அழுக்குகள் எல்லாவற்றையும் நீக்கி சுத்தமாக வைத்திருக்கும். எலுமிச்சை சாறு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமம் பளிச்சென்றாகிவிடும். எலுமிச்சை சாறு மட்டும் தேய்ப்பது சருமத்துக்கு காட்டமாகத் தோன்றினால் அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். அல்லது யோகர்ட் மற்றும் பால் கலந்தும் முகத்தில் தேய்க்கலாம். ஆர்கானிக் எலுமிச்சைப் பழத்தை உபயோகிப்பது நல்லது.

யோகர்ட்

Story image

யோகர்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை வளத்துடன் வைத்திருக்கும். இதிலுள்ள மினிரல்கள் சருமத்தில் உள்ள பருக்களை நீக்கும். அழகுடனும் இளமை சேர்த்து சருமம் ஜொலிக்க யோகர்ட் பயன்படுத்துவது பலன் அளிக்கும். ஆர்கானிக் யோகர்ட் பயன்படுத்துவது நல்லது.

ஆலிவ் ஆயில்

Story image

ஆலிவ் ஆயில் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அது சருமத்துக்கும் நல்லது என்பது கூடுதல் சிறப்பு. சிறிதளவு ஆலிவ் ஆயில் எடுத்து முகத்தில் தேய்த்து சற்று நேரம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள வறண்ட தன்மை மாறி சருமத்தின் அழகு மெருகேறும். ஆலிவ் ஆயில் நல்ல மாய்ஸ்சரைஸர். சருமத்தில் ஆழம் வரை ஊடுருவி பளிச்சென்று இளமை பொலிவுடனும் முக எழிலை கூட்டும். அதிக பலன்களுக்கு ஆர்கானிக் ஆலிவ் ஆயிலையே பயன்படுத்த வேண்டும்.

பால்

Story image

சருமம் மென்மையாக பூப்போல இருக்க வேண்டும் என்றால் பால் தான் தலைசிறந்த பொருள். தினமும் சிறிதளவு பாலும் பாலேடும் கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். சருமம் அதை உறிஞ்சி விடும். சிறிது நேரம் கழித்து நல்ல நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். பால் முகத்தில் உள்ள அழுக்குக்களை நீக்கிவிடும். பாலுடன் தேனையும் கலந்து முகத்தில் தடவி வர அதிக பலன்கள் கிடைக்கும்.

குறிப்பு :

ஃபேஸ் மாஸ்க் போட்டுக்கொள்ள சில டிப்ஸ்

முகத்தை ஒரு பஞ்சினால் நன்றாக துடைத்துவிட்டு சுத்தமாக்கிய பின்னர் தான் எந்த ஃபேஸ் மாஸ்க்கையும் போட வேண்டும்.

சீராக முகம் முழுவதும் படரும் படி தடவ வேண்டும்.

கண்கள் மற்றும் உதடுகளைத் தவிர்க்கவும்.

முகத்தில் போடுவதற்கு முன் சிறிதளவு எடுத்து கையில் போட்டுப் போர்க்கவும். அரிப்பு அல்லது எரிச்சல் இல்லாவிட்டால் தான் முகத்தில் தடவ வேண்டும்.

உப்புத் தண்ணீர் அல்லது ஒரு கப் தண்ணீரில் கலக்கப்பட்ட ஒரு டீஸ்பூன் ஆப்பில் சிடார் வினிகர் பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க்கில் ஸ்ப்ரே செய்து  துடைத்துவிட்டு அதன் பின்னர் முகம் கழுவினால் அதிக பலன்கள் கிடைக்கும்.

                                                                                                                                             

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.