/

நீல வண்ணத்தில் ஜென் ஓவியம்!

பெயரில் தொடங்கி, வாழ்க்கை, கலை என்று அனைத்திலும் ஜென் பெளதத்தை கடைபிடிப்பவர் ஓவியர் போதி செல்வம்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:37 pm

உமா ஷக்தி.

பெயரில் தொடங்கி, வாழ்க்கை, கலை என்று அனைத்திலும் ஜென் பெளதத்தை கடைபிடிப்பவர் ஓவியர் போதி செல்வம். அதை வலிந்து செய்யாமல் வாழ்வியலாகவும் மிகவும் இயல்பாகவும் அமைத்துக் கொண்டார். ஜென் வழியிலான அவருடைய பயணத்தில் இயற்கையுடன் இயைந்து வாழ்வதும் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்வதும் பெரும்பான்மையாக வேடிக்கைப் பார்ப்பதுமாகவே இருக்கிறார். வெள்ளந்தி சிரிப்பும், விதவிதமாக வரையப்பட்ட புத்தர்களும் அவருடைய பிரத்யேகமான அடையாளங்கள். தற்போது போதி செல்வத்தின் ஓவியங்கள் தட்சிண் சித்ராவில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. நீல வண்ணத்தை அடிப்படையாக வைத்து பல ஓவியங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் போதி. இக்கண்காட்சியின் தலைப்பு ‘ஞான விருட்சம்’ (Tree of Enlightenment).

போதி செல்வத்திடம் பேசிய போது அவருடைய வாழ்க்கையின் முக்கிய அங்கமாக நிறங்கள் இருந்து வருவது புரிந்தது. தன்னுடைய மனத்தில் உள்ளவற்றை ஓவியமாக வரையும் போது பெரும்பான்மையாக நீலத்தையே பயன்படுத்துவதாகச் சொன்னார். ‘என் தாய் மொழியான தமிழை எப்படி என்னால் பேசாமல் இருக்க முடியாதோ, அது போலத்தான் நீல வண்ணத்தை கித்தானில் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. என் தூரிகை அதிகம் தொட்ட நிறம் நீலம் தான். நீலம் என்றால் நீங்கள் நினைக்கும் நீல நிறம் மட்டுமல்ல, அவை வெளிர் நீலம், மற்றும் நீலத்தின் சாயல் கொண்ட அத்தனை நீலங்களும் உள்ளடங்கிய நீலம் தான் என்னுடைய நீலம். இங்குள்ள ஓவியங்களை மாற்றி மாற்றி பார்க்கையில் விதவிதமான நீல உணர்வுகளைப் நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள்’ என்றார். அது உண்மையே!

Story image

பெளத்த மரபில் ஆழமான தேடலுள்ள போதி செல்வம் போதி கயாவுக்குச் சென்றுள்ளார். புத்தரின் ஞான வழியில் தன்னுடைய பாதையை வழி வகுத்துக் கொண்ட அவரின் இளமைப் பருவம் எப்படி இருந்தது என்று கேட்கையில், ‘நான் ஒன்பது வயதில் தான் பள்ளிக்குச் சென்றேன். பள்ளிப் படிப்பு எனக்கு அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை. பள்ளிக் கல்வியில் எதையும் கற்றுக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. என்னுடைய கவனம் முழுவதும் இயற்கைக்குத் திரும்பியது. அது எண்ணற்ற விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. பூக்களையும், நீர் நிலைகளையும் மணிக்கணக்கில் வெறுமனே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பேன். அதிலேயே மணிக்கணக்காக லயித்துவிடுவேன். புற விஷயங்கள் மறைந்துவிடும், அது கிட்டத்தட்ட தியானம் போன்ற நிலை.

இப்படியே காட்டுச் செடி போல இயற்கையின் கூட்டாளியாக வளர்ந்துவிட்டேன். என்னுடைய விந்தையான போக்கைப் பார்த்து சிலர் ஆச்சரியப்படுவது உண்டு, சிலர் பயப்படுவதும் கூட உண்டு. ஆனால் அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை. சிரித்தபடி கடந்துவிடுவேன். ’

போதி செல்வத்தின் பெற்றோர்களைப் பொருத்தவரையில் இவருடைய எதிர்காலம் குறித்த அச்சம் அவர்களுக்கு இருந்தது. காரணம் நான்காவது வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு மாடு மேய்க்கச் சென்றுவிட்டார். அவருக்கு அந்த வயதிலிருந்தே இயற்கையுடன் ஒட்டி வாழ்வது மனத்துக்கு நெருக்கமாக இருந்திருக்கிறது. ஐந்து வருடங்கள் இப்படியே மாடு மேய்ப்பதும், விவசாயம் செய்வதுமாகக் கழித்தார். அதன் பின் ஞானத்தை வேண்டி உள்ளுணர்வு வழிப்படுத்த பயணம் செய்ய ஆரம்பித்தார். அவருடைய கால்களுக்கும் அறிவுப் பசிக்கும் ஓய்விருக்கவில்லை. பலவிதமான ஞான மரபுகளை கேட்டு அறிந்தும், இறுதியில் அவரை எல்லா வகையிலும் கவர்ந்தது புத்தர் அருளிய ஜென் வழி. அதன் பின் அவர் திரும்பிப் பார்க்கவில்லை. அதிலேயே லயித்துவிட்டார்.

இப்படியான வாழ்வில் கலை எப்படி அவரிடம் வந்தது, அல்லது அவர் எப்படி தன் கலையை கண்டடைந்தார்? அவரே சொல்கிறார், ‘அப்போது எனக்கு இருபது வயதிருக்கும். டிசம்பர் பூக்களைப் பார்த்து ரசிப்பது மிகவும் பிடித்த செயல். என் வீட்டின் பின்பகுதியில் நிறைய டிசம்பர் செடிகள் உண்டு. அதில் பூத்திருக்கும் மலர்கள் என் பொழுதுகளை ஆக்கிரமிக்கும். ஒரே பூவை பல மணி நேரம் வரைவேன். கிட்டத்தட்ட ஆறு மாதம் தொடர்ந்து அந்தப் பூவையே வரைந்து கொண்டிருந்தேன். இப்படி நானாகவே இயற்கையைப் பார்த்து வரைந்து ஓரளவு ஓவியம் வரையக் கற்றுக் கொண்டேன். முறையாக ஓவியக் கல்லூரியில் எல்லாம் படிக்கவில்லை ஆனால் எனக்கு சில சீனியர் ஓவியர்களின் வழிகாட்டுதல் இருந்தது. அதன் பின் தான் கேன்வாசில் தூரிகைப் பயன்படுத்தி வரையக் கற்றுக் கொண்டேன்.

என்னைப் பொறுத்தவரையிலும் எல்லாம் இயற்கையின் வழிப்படி தான் நிகழ்கிறது. எனவே முழுவதுமாக என்னை ஜென்னுக்கு ஒப்புக் கொடுத்துவிட்டேன். அக வெளிப் பயணத்தில் வழிகாட்டிகள் தேவையில்லை. நீங்களே போதும். உங்களை முதலில் ஆழமாக நேசியுங்கள், நம்புங்கள். உங்கள் உள்ளுணர்வின் வழிகாட்டுதலே ஆகச் சிறந்தது. அதன் மூலம் நீங்கள் உண்மையை கண்டடைவீர்கள் என்பது சர்வ நிச்சயம். என்னுடைய ஓவியங்கள் என் எண்ணங்களின் பிரதிபலிப்புக்கள்.. நான் இங்கு இருக்கும் வரையில் என்னால் முடிந்த வரையில் இவ்வழியில் வெளிப்படுத்திக் கொண்டிருப்பேன்.’ என்று முடித்தார் போதி செல்வம்.

போதி செல்வத்தைப் பற்றியும் அவருடைய ஓவியங்களைப் பற்றியும் மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள : தட்ஷின் சித்ரா – 044 - 27472603

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.