காய்ச்சலுக்கு பிரியாணி கூடச் சாப்பிடலாம்!!!
நம் அம்மாக்கள் காலத்தில் காய்ச்சல் என்று மருத்துவமனைக்குப் போனால் காய்ச்சல் தீரும் வரை பத்தியச் சாப்பாடு தான்


நம் அம்மாக்கள் காலத்தில் காய்ச்சல் என்று மருத்துவமனைக்குப் போனால் காய்ச்சல் தீரும் வரை பத்தியச் சாப்பாடு தான். நாம் சிறுவர்களாக இருந்த போதும் காய்ச்சலென்று போனால் அது தீரும் வரை குறைந்தபட்சம் மூன்று நான்கு நாட்களுக்காவது இட்லியில் சர்க்கரை வைத்து சாப்பிடுவது, சாதத்தை கஞ்சியாக்கி குடிக்கச் செய்வது பாலில் நனைத்த பிரெட் சாப்பிடுவது போன்ற உப்புச் சப்பில்லாத உணவுகளையே டாக்டர் பரிந்துரைப்பார். காய்ச்சல் சரியாவதற்குள் நாக்கு செத்து சுண்ணாம்பாகி எங்கே காரசாரமான உணவிருக்கிறது என்ற தேடல் இன்னொரு காய்ச்சலாகி விடும். அந்த அளவுக்கு காய்ச்சலின் போது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகள் இருக்கும்.
இன்றைய குழந்தைகள் நல டாக்டர்கள் அப்படி இல்லை போலும். நேற்று குழந்தைக்கு 103 டிகிரி வரை காய்ச்சல் இருக்கிறதென்று குழந்தைகள் நல டாக்டரிடம் சென்றிருந்தோம். குழந்தையைப் பரிசோத்தித்த டாக்டர் "சாதாரண வைரல் காய்ச்சல் தான், காய்ச்சல் மருந்தை மட்டும் நேரா நேரத்திற்கு சரியாகக் கொடுத்துக் கொண்டு வாருங்கள் இரண்டு நாட்களில் சரியாகி விடும் என்றார். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே காய்ச்சல் இருக்கிறது பாலில் நனைத்த இட்லி, பிரெட், கஞ்சி என்று கொடுத்துக் கொண்டிருக்கிறோம் அதெல்லாம் குழந்தைக்குப் பிடிப்பதில்லை சாப்பிடுவதற்கு அடம் பண்ணுகிறது. சாப்பிடவில்லையே தவிர காய்ச்சலோடு வெளியில் போய் விளையாட மட்டும் ரொம்பவும் ஆர்வம், ஆனால் இப்படிப் போதுமான அளவுக்குச் சாப்பிடாமல் விளையாடிக் கொண்டிருந்தால் குழந்தை சோர்வாகி காய்ச்சல் அதிகமாகி விடாதா என்று கேட்டோம். டாக்டர் புன்னகையுடன் ’குழந்தைக்குப் பிடிக்காத உணவுகளையே கொடுத்து விட்டு சாப்பிடாமல் அடம் பண்ணுவதாக வேறு கூறுவீர்களா?’ என்றார்.
காய்ச்சலுக்கு வேறென்ன சப்பிடத் தருவது என்ற குழப்பத்துடன் நாங்கள்’அவளுக்கு கேக், சாக்லெட், மில்க் ஷேக், ஐஸ்கிரீம் தான் பிடிக்கும், அதற்காக காய்ச்சலின் போது அதையெல்லாம் தர முடியுமா?’ என்றோம்.
மருத்துவர் சிரித்துக் கொண்டு ‘வொய் நாட்! குழந்தைக்குப் பிடிக்குமென்றால் அதையே தரலாமே’ என்றார்.
’அதெப்படி காய்ச்சல் அதிகமாகி விடுமே!’ என்றோம்.அதற்கு டாக்டர்;
‘அது தான் இல்லை. குழந்தை சுறு சுறுப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறதே, அதற்குப் போய் கஞ்சியும் பாலும் எதற்கு? குழந்தை எதை விரும்பிச் சாப்பிடுமோ அதையே சாப்பிடத் தரலாம். அதிக கலோரி கொண்ட கேக், மில்க் ஷேக், ஐஸ் கிரீம் தான் பிடிக்குமென்றால் அதிக குளிர்ச்சி இல்லாமல் அறை வெப்ப நிலைக்கு அவற்றின் குளிர்ச்சியை குறைத்த பின் தாராளமாகக் குழந்தை அதை சாப்பிடலாம்.’ இந்த மாதிரி உணவுகளை கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும் குழந்தைக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து விடும். கூடவே காய்ச்சல் மருந்தும் கொடுங்கள், மூன்று நாட்களில் காய்ச்சல் சரியாகி விடும். மேலும் காய்ச்சலின் போது குழந்தை தனது வழக்கமான விளையாட்டுத் தனங்களை எல்லாம் மறந்து அதிக சோர்வுடன் இருந்தால் மட்டும் தான் பெற்றோர் கவலைப் படவேண்டும். சாதாரணக் காய்ச்சலுக்கே குழந்தையைக் காட்டிலும் பெற்றோரான நீங்கள் அதிக சோர்வும் குழப்பமும் கொண்டு பத்திய உணவுகளைக் கொடுத்து குழந்தையைக் கஷ்டப்படுத்தத் தேவையே இல்லை.’ என்றார்.
‘டாக்டர் இதுவரை நாங்கள் பார்த்த எந்த குழந்தைகள் நல டாக்டரும் இப்படிச் சொன்னதே இல்லை. நீங்கள் சொல்வது புதிதாக இருக்கிறது. அதிலும் காய்ச்சலுக்கு ஐஸ் க்ரீம் சாப்பிடுவது எல்லாம் வினையை விலைக்கு வாங்குவது போல இருக்கிறதே?' என்றோம்.
அதற்கு டாக்டர்; 'இல்லை காய்ச்சலின் போது குழந்தை சுத்தமாகச் சாப்பிடாமலே இருந்து அதன் ஆற்றல் குறைந்து பலகீனமாவதை விட இப்படி அதிக கலோரி உணவுகளை கொஞ்சமாகச் சாப்பிடக் கொடுக்கலாம், இரண்டு முக்கியமான காரணங்களுக்காக அதை அனுமதிக்கலாம் ஒன்று காய்ச்சலாக இருப்பதால் குழந்தையால் அதிகமாகச் சாப்பிட முடியாது, கொஞ்சமாகத் தான் சாப்பிடும்; இரண்டாவதாக காய்ச்சலின் போது தொண்டை சற்றுப் புண்ணாவது வழக்கம், அப்போது பிற உணவுகளை விட ஐஸ்க்ரீம், மில்க் ஷேக் எல்லாம் தொண்டையில் எளிதாக வழுக்கிக் கொண்டு உள்ளே செல்லும் இதனால் குழந்தை உணவை கஷ்டப்பட்டு விழுங்கி வைக்கத் தேவை இல்லை. தொண்டைக்கு இதமாக இருக்கும், குழந்தையும் சாப்பிடக் கஷ்டப்படுத்தாது. அதிக குளிர்ச்சி இல்லாமல் மட்டும் பார்த்துக் கொண்டால் போதும். அவ்வளவு ஏன்? குழந்தைக்குப் பிடிக்குமென்றால் காய்ச்சலின் போது பிரியாணி கூட சாப்பிடத் தரலாம்’ வெறும் வயிற்றோடு மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் முக்கியம். அதற்கு இப்படி பிடித்ததை சாப்பிடக் கொடுப்பதால் பெரிதாக எந்தப் பாதிப்பும் வராது’ என்றார்.
ஆச்சர்யத்தோடு மறுநாளில் இருந்து டாக்டர் சொன்னதையே பின்பற்றினோம். காய்ச்சல் சரியானது. குழந்தையும் சாப்பிட அடம் பிடிக்காமல் பிடித்ததை சாப்பிட்டு, கூடவே காய்ச்சல் மருந்தும் எடுத்துக் கொண்டு தெம்பாக விளையாடிக் கொண்டு விரைவில் குணமடைந்தாள்.
குழந்தைகளிடையே காய்ச்சல் மற்றும் வறட்டு இருமலைப் பொறுத்தவரை பெற்றொர்களான நமக்குச் சில மூடநம்பிக்கைகள் இருக்கின்றன சில நேரங்களில் அவற்றை டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் நிராகரிப்பதும் நல்லதே என்று தோன்றுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...