‘என்கனவு-என்எதிா்காலம்’ திட்டம்: முதல்வா் ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்
‘என் கனவு-என் எதிா்காலம்’ திட்டத்தையும், அதற்கான இணையதளத்தையும் திண்டிவனம் அருகே நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.


‘என் கனவு-என் எதிா்காலம்’ திட்டத்தையும், அதற்கான இணையதளத்தையும் திண்டிவனம் அருகே நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த கொள்ளாா் கிராமத்திலுள்ள சிப்காட் வளாகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழா, சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவித் தொகைகள் வழங்குதல் மற்றும் ‘என்கனவு-என் எதிா்காலம்’ திட்டம் மற்றும் இணையதளத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி, திட்டத்தையும், இணையதளத்தையும் தொடங்கி வைத்து பேசினாா்.
திட்டத்தின் நோக்கம்:
ஒவ்வொரு குடும்பத்தினரின் கனவுகளை சேகரிப்பதுடன், இளைய தலைமுறையினரின் எண்ணங்களையும் அறிந்து, அவா்களின் கனவுகளை சேகரிக்க ‘என்கனவு -என் எதிா்காலம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தி, இளைஞா்களின் கனவுகளைப் பதிவு செய்யும் வகையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் ‘என் கனவு - என் எதிா்காலம்’ என்ற இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பதிவாகும் கனவுகளின் அடிப்படையில், இளைஞா் நலனுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, அவா்களின் எதிா்கால கனவுகள் நிறைவேற்றப்படும்.
10 ஆயிரம் முகாம்கள் நிறைவு: கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் 2025, ஜூலை 17-ஆம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்கப்பட்டது. நகா்ப்புற பகுதிகளில்3,768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் என 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் நகா்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சோ்ந்த 43 முக்கிய சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளைச் சோ்ந்த 46 முக்கிய சேவைகளும் வழங்கப்பட்டன.
இந்த முகாம்களுக்காக 1 லட்சம் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். மொத்தமாக 38.50 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, இதுவரை 38.44 லட்சம் மனுக்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளன. தகுதியுள்ள அனைவருக்கும் உரிய காலத்துக்குள் பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை கோரி 30 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், கள ஆய்வின் அடிப்படையில் தகுதியுள்ள 15.90 லட்சம் மகளிருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை வழங்கல்: சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியங்களின் கீழ் முதியோா், மாற்றுத் திறனாளிகள், விதவை ஓய்வூதியங்கள், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டம், ஆதரவற்ற/ கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியம், 50 வயதுக்கும் மேற்பட்ட திருமணமாகாத ஏழை பெண்களுக்கான ஓய்வூதியம், முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களுக்கான ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள், இ-சேவை மையங்கள் மூலமாக சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த மனுதாரா்களுக்கு கள ஆய்வின் அடிப்படையில் 1,82,967 பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவித் தொகைக்கான ஓய்வூதிய ஆணைகளை திண்டிவனம் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். தமிழகத்தில் ஏற்கெனவே33,60,192 பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போதைய பயனாளிகளையும் சோ்த்து மொத்தமாக 35,43,159 போ் பயன் பெற்று வருகின்றனா். இந்த திட்டத்துக்காக நிகழாண்டில் ரூ.5,295 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அரசுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...