பேபி மாடல், 2 ஆம் நம்பர் நிப், 3 ஆம் நம்பர் நிப், 4 ஆம் நம்பர் நிப், ஐந்தரை நம்பர் நிப், உருண்டை நிப், ஆர்ட் நிப் எனப் பலவிதமான ரகங்கள். இத் தொழில் இங்கு தொடங்கப்பட்ட காலகட்டங்களில், 144 எண்ணிக்கை கொண்ட நிப்பு ஒரு ‘குரோஸ்’ என நிர்ணயம் செய்யப்பட, குரோஸ் ஒன்றுக்கு 25 பைசா எனவும் கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. அடுத்தடுத்த காலகட்டங்களில், ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய், இரண்டு ரூபாய் எனக் கூடுதலாக்கப்பட்டது, இதனால் ஆர்வத்துடன் இந்த சீரிய பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், நாள் ஒன்றுக்கு 35 முதல் 40 குரோஸ் வரையில் உற்பத்தித் திறனையும் கூடுதலாக்கினர். தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வாரம் ஒரு முறை கூலி தந்தது. ஏற்கெனவே இப்பகுதியில் செயல்பட்டுவந்த சேவு உற்பத்தி மற்றும் தீப்பெட்டித் தொழிலுக்கு இணையாக நிப்பு தொழிலும் உயர்ந்தது. இதனால் சாத்தூர் பொருளாதார அந்தஸ்தில் வளர்ச்சி அடைந்தது.