நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா?

தீவிர பொதுவுடைமை நாடான வட கொரியாவின் அதி உயர் தலைவரான கிம் ஜோங் உன் நலமாக இருக்கிறாரா, இல்லையா?  உயிருடன்தான் இருக்கிறாரா? வழக்கம் போல இந்தக் கேள்விகள் எதற்கும் விடை தெரியவில்லை. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:30 pm

ததாகத்

தீவிர பொதுவுடைமை நாடான வட கொரியாவின் அதி உயர் தலைவரான கிம் ஜோங் உன் நலமாக இருக்கிறாரா, இல்லையா?  உயிருடன்தான் இருக்கிறாரா? வழக்கம்போல இந்தக் கேள்விகள் எதற்கும் விடை தெரியவில்லை.  எல்லாமே புதிராகத் தொடருகின்றன.

அவசர அவசியமாக நடந்த இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின் அதிபர் கிம் ஜோங் உன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகிவரும் நிலையில், வடகொரிய அரசுத் தரப்பிலிருந்து இதுபற்றி எவ்விதத் தகவலும் அறிவிக்கப்படவில்லை.

வட கொரிய ஊடகங்களில் வழக்கம்போலவே அவரைப் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. கிம்மின் சாதனைகள் பற்றிய வழக்கமான செய்திகளுடன் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் அவருடைய மேற்கோள்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு செய்தித் தாளான ரோடாங் சின்முன்னில் எல்லா இடங்களிலும் வழக்கம்போல அவருடைய பெயர்கள் இடம் பெற்றிருந்தபோதிலும் அவருடைய உடல்நிலை கடுமையாக மோசமடைந்திருப்பதாகக் கூறப்படுவது பற்றி எவ்விதத் தகவலும் இல்லை.

எனினும், எப்போது அனுப்பினார் என நாள்கள் குறிப்பிடாமலேயே முக்கியமான பிரமுகர்களுக்கு பிறந்த நாள் பரிசுகளை அவர் ்அனுப்பிவைத்துள்ளதாக அந்த செய்தித் தாள் தெரிவித்துள்ளது.

அரசின் அதிகாரப்பூர்வ செய்தி இதழில் விளையாட்டு சாதனம் மற்றும் பழம் பறிக்கும் சாதனம் உருவாக்கப்பட்டது பற்றிய செய்திதான் பிரதானமாக இடம் பெற்றுள்ளது.

வட கொரியாவை அதன் எல்லைக்கு வெளியே இருந்து கவனிப்பவர்கள், அவருடைய உடல் நிலை பற்றிய உண்மைத் தகவல்களை அறிந்துகொள்வது எளிதல்ல என்றே குறிப்பிடுகின்றனர்.

வட கொரியாவில் கிம்மின் ஆட்சியில் செய்திகள் வெளியிடுவது மிகவும் கடினமானது என்பது குறிப்பிடத் தக்கது.

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின் கிம் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை என செவ்வாய்க்கிழமை கூறப்பட்டது.

அமெரிக்காவின் அதிபர் டிரம்ப்பின் அலுவலர்கள், ஏற்கெனவே, வட கொரியாவில் அடுத்து யார் வரக் கூடும் என்பது பற்றிக் கவனிக்கத் தொடங்கிவிட்டனர் என்று வெள்ளை மாளிகை செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

எனினும், கிம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளியாகும் செய்திகள் உறுதி செய்யப்பட்டவை அல்ல என்று தாங்கள் நம்புவதாக தென் கொரியாவும் சீனாவும் தெரிவித்துள்ளன.

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை பற்றி வெளியான வதந்திகளை உறுதி செய்யக் கூடிய எவ்விதத் தகவலும் எங்களால் பெறப்படவில்லை என்று தென் கொரிய அதிபர்  அலுவலகப் பேச்சாளர் காங் மின்-சியோக் தெரிவித்துள்ளார்.

தவிர, வட கொரியாவுக்குள் வழக்கத்துக்கு மாறாக எதுவும் நடப்பதாகவும் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

வட கொரியாவின் அதி உயர் தலைவரான, 36 வயதான கிம் ஜோங் உன், கடைசியாக ஏப்ரல் 11 ஆம் தேதிதான் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு வெளியே எங்கேயும் தோன்றவில்லை.

ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற்ற அவருடைய தாத்தா கிம் இல் சுங்கின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்காததைத் தொடர்ந்து, அவரைப் பற்றிய வதந்திகள் இறக்கை கட்டிப் பறக்கத் தொடங்கின.

ஏப்ரல் 12  ஆம் தேதி இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதாகக் கூறப்படும் கிம், தற்போது ஹயாங்ஸான் என்ற சுற்றுலா நகரில் தங்கியிருப்பதாகவும் உடல்நிலை தேறிவருவதாகவும் கூறப்படுகிறது.

கடுமையான புகைப் பழக்கம், அளவுக்கு மீறிய உடல் பருமன், கூடுதல் பணி ஆகியவற்றின் காரணமாகக் கடந்த சில மாதங்களாகவே கிம்மின் உடல்நிலை சீர்குலைந்திருந்தது. 

கிம்மின் உடல்நிலை தொடர்பான செய்திகள் உண்மையெனில், அமெரிக்காவுக்கே சவால் விடும் அளவுக்கு ஏராளமான அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வட கொரியாவின் எதிர்காலம் சிக்கலானதாக இருக்கும், ஏனெனில், கிம்மிற்குப் பிறகு அதிகாரத்தை ஏற்கக் கூடியவர் யார் என்பது பற்றி அவர் எதுவும் அறிவித்ததில்லை.

கிம் ஜோங் வுன்னின் சகோதரியும் அதிகாரத்தின் மீது அக்கறையுள்ளவருமான கிம் யோ-ஜோங் ஆட்சியைப் பிடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பையே இறங்கிவரச் செய்தவர் என்ற பெருமையைப் பெற்ற கிம் ஜோங் உன், இப்போது எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் - கேள்விகள் மட்டும் இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.