கேரள மாநிலம், கொச்சி மராடு பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 20 மாடிகள் கொண்ட இவை அனைத்துமே சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த நான்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் இடிக்கும்படி கடந்த மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 4 குடியிருப்புகளையும் இடிக்கும் நடவடிக்கையை கேரள அரசு தொடங்கியது. நேற்றுமுன்தினம், இவற்றுக்கான குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்து கொடுக்கும் நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டது. கூடுதல் அவகாசம் கேட்ட போது அனுமதி மறுக்கப்பட்டு தற்போது அங்கு மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்து ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.