தென்னக ரயில்வே, சென்னை புறநகர் லோக்கல் ரயில்களில் முதல் வரிசையில் அமைக்கப்பட்டுள்ள கைப்பிடிகளில் மூன்றை நிரந்தரமாக அகற்றியுள்ளது. லோக்கல் ரயில்களில் இரண்டு கதவுகளுக்கு இடையில் மொத்தம் மூன்று வரிசை இரும்புத் தாங்கியில் வரிசைக்குப் பத்து வீதம் மொத்தம் 30 கைப்பிடிகள் பொருத்தப்பட்டிருப்பது வழக்கம். இந்த கைப்பிடிகள் ரயில் பயணிகளின் செளகர்யத்துக்காக வடிவமைக்கப் பட்டவை. பொதுவாக வழக்கமான ரயில்களைக் காட்டிலும் இந்த லோக்கல் ரயில் பெட்டிகளில் ஆட்டம் அதிகமிருப்பதால் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு விழாமல் பயணிக்க மேற்படி கைப்பிடிகள் மிகப்பெரிய வசதியாக இருந்தன. ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருந்தது கண்டறியப்பட்டது. பீக் நேரம் என்று சொல்லப்படக் கூடிய காலை மற்றும் மாலை நேரங்களில் ஃபுட்போர்டில் பொருத்தப்பட்டுள்ள மூன்று கைப்பிடிகளைக் கைப்பற்றித் தொற்றுக் கொண்டு செல்ல 15 முதல் 20 பயணிகளுக்குள் மிகப்பெரிய தள்ளுமுள்ளு ஏற்படும். இதனால் மாற்றுத்திறனாளிப் பயணிகள், பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவது தவிர்க்க முடியாமலிருந்தது.