மதச் சடங்குகளை நிறைவேற்ற கங்கையில் இறங்கிய தன்னை பாலியல் நோக்கில் அணுகிய ஆண்களிடம் அப்பெண், தன்னை விட்டு விடுமாறு கதறி இருக்கிறார். புனித நதியான கங்கையை கருத்தில் கொண்டு அதன் புனிதத்தைக் குலைக்காமல் இருப்பதற்காகவாவது தன்னை விட்டு விடுமாறும், கங்கை என்பவள் வெறும் நதியல்ல அவள் நமது தாயைப் போன்றவள். அவள் முன்னிலையில் இப்படி பாலியல் வன்முறை செய்வது எந்த விதத்தில் நியாயம்’ என்று கேட்டும் அப்பெண் போராடி இருக்கிறார். ஆயினும் பெண் பித்தர்களான அவ்விரு ஆண்களும் கங்கையின் புனிதத்தைப் பற்றியோ, ஒரு பெண்ணின் கதறலைப் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படாமல் தங்களது வக்கிரப் பசியைத் தீர்த்துக் கொண்டதோடு அதை வீடியோவாக்கி சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து தற்போது காவல்துறையில் மாட்டி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இச்சம்பவத்தில் மேலும் கொடுமை என்னவென்றால், ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை ஆண்கள் சிலர் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்யும் வீரப் பிரதாபத்தைக் காண குற்றவாளிகள் இருவருள் ஒருவனான மஹ்தோ அறியாச் சிறுமி ஒருத்தியையும் உடனழைத்துச் சென்றிருந்த விஷயம் காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தற்போது அச்சிறுமியும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டு விட்டதாக பாட்னா எஸ் பி மனு மகராஜ் தெரிவித்திருக்கிறார்.