அது மட்டுமல்ல, டொராண்டோவில் தான் சந்தித்த ஈழத்தமிழ் மக்களில் சிலர், ‘ராஜிவ் காந்தியால் தான் தாங்கள் தற்போது உயிருடன் இருக்கிறோம் என்று நன்றிப் பெருக்குடன் கூறினார்களாம். அது மட்டுமல்ல பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற ஈழப்போர் தேவையற்று வெட்டிப் போர் என்றும் அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக ஷாலினி தனது பதிவுகளில் பகிர்ந்துள்ளார். அது மட்டுமல்ல, ஈழப்போரை முன்னிட்டு தனி ஈழக் கோரிக்கை எழுப்பி, ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் தங்களது இன்னுயிரை நீத்த சிலரைப் பற்றிப் பேசும் போது... தன்னிடத்தில் சில ஈழத்தமிழர்கள், அந்த மரணங்கள் அர்த்தமற்றவை... அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இருப்பவர்களுக்கு எங்களது பிரச்னையின் அசலான தன்மை எப்படித் தெரியும்? தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் விவகாரம் ஒரு தேர்தல் காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது. எங்களுக்காக ஒரு நிலைப்பாட்டை தமிழ்நாட்டில் இருப்பவர்களால் எப்படி எடுக்க முடியும்? எங்கள் பிரச்னைகள் நீங்கள் நினைப்பதைப் போல அல்ல, அது முற்றிலும் வேறானது. என்று சிலர் தன்னிடம் தெரிவித்ததாகவும் ஷாலினி பகிர்ந்திருந்தார். இப்படி ஃபிடல் காஸ்ட்ரோ, வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்டோரைப் பற்றி ஒரு சிலரிடம் மட்டுமே பேசி விட்டு அவர்களது கருத்தை ஒட்டுமொத்த கியூபா மக்களின் கருத்து என்றும் ஈழத்தமிழ் மக்களின் கருத்து இது தான் என்றும் பொதுமைப் படுத்தும் விதமாக ஷாலினி தனது பதிவுகள் மூலம் வெளிப்படுத்தி இருப்பது உண்மையில் ஈழப்போரின் வலியையும், வேதனையையும் ரத்தமும், சதையும் கொதித்து உருக உருக அனுபவித்து மீண்டவர்களை ஒன்றுதிரட்டி தங்களது எதிர்ப்புணர்வை முகநூலில் கொந்தளிப்பாக முன்வைக்கச் செய்திருக்கிறது.