குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நீடித்துக் கொண்டிருக்கையில் அரசியல் தலைவர்களிடையே சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. இட ஒதுக்கீட்டுப் பிரச்னையை மையமாக வைத்து குஜராத் அரசியலில் முக்கியத்துவம் பெற்ற தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஹர்திக் படேலைப் பற்றிய சர்ச்சையான வீடியோக்கள் தொடர்ந்து எதிர்கட்சிகளால் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ஹர்திக் படேல் ஹோட்டல் அறையொன்றில் ஒரு பெண்ணுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் முறைகேடாக நடந்து கொள்ளும் வகையிலான பாலியல் வீடியோ ஒன்று எதிர்கட்சியினரால் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவுக்கான எதிர்வினையாக ‘ தேர்தலில் தோல்வி கண்டு விடுவோமோ என்ற பயத்தில் பாஜக ஆபாசமான, கீழ்த்தரமான பிரச்சாரத்தில் இறங்கி விட்டது. இது பாஜகவுக்குப் புதிதில்லை. பாஜக தலைவர்கள் தாங்கள் வெறுக்கும் மாற்றுக் கட்சித் தலைவர்களை இப்படித்தான் கேவலப்படுத்துவார்கள் என்று ஹர்திக் படேல் தனது பிரச்சாரக் கூட்டங்களில் காட்டமாகப் பேசியிருந்தார்.