சமூகக் கண்ணோட்டத்தில் டி.வி சீரியல்களைப் பொறுத்தவரை, நல்ல பெண்ணுக்கான வரையறைகள் எப்போதுமே குறைவு. நீங்கள் தான் நல்ல பெண் ஆயிற்றே! பிறகு உங்களைப் பற்றி விளக்கிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது. நல்லவர்களுக்கு, ‘நல்லவர்’ என்ற ஒரே விளக்கம் போதுமானதாக இருக்கிறது. ஆனால் கெட்ட பெண் என்றால் அவர் எப்படி கெட்டவர்? எந்த விதத்தில் கெட்டவர்? அவர், தன் குடும்பத்திற்கும், இந்தச் சமுதாயத்திற்கும் எந்த அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவர்” என்றெல்லாம் விளக்கியாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக வேண்டியதாகி விடுகிறது. கெட்டவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களை வரையறுக்கும் போது இந்த சமூகத்திற்கு தங்களது வாதத்தை அழுத்தமாக முன் வைக்க கொஞ்சம் அதிகமாகவே உயர்வு நவிற்சி அணியும், தற்குறிப்பேற்ற அணிகளும் தேவைப்பட்டு விடுகின்றது. அதனால் தான் பாருங்கள்... டி.வி சீரியல்களில் வரும் கெட்ட பெண்கள் எல்லாம் எப்போதுமே பின் லேடனின் உடன்பிறவாத் தங்கைகள் ரேஞ்சில் சதா சர்வ காலமும் பிறருக்கு கெடுதல் செய்வதைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டே அலைவதாகக் சித்தரிக்கப் படுகிறார்கள். டி.வி சீரியல்களைப் பொறுத்தவரை ஒரு கெட்ட பெண் என்றால், அதிலும் அவள் கல்லூரி மாணவி என்றால், உடனே உலகிலுள்ள எல்லா கெட்ட சகவாஸங்களுடனும், கெட்டுக் குட்டிச் சுவராகி சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு வீணாய்ப் போன இளைஞனின் மீது அவளுக்கு கண் மூடித் தனமான காதல் வர வேண்டும். அவனுக்காக தனது மொத்தக் குடும்பத்தையும் கதறி அழ வைத்து விட்டு அவள் அவனோடு ஓடிப் போய் திருட்டுக் கல்யாணம் செய்து கொண்டு வாழத் தொடங்க வேண்டும். அந்த வாழ்க்கையில் அவள், புராணக் கதைகளின் பதிவிரதைகளான, சத்யவான் சாவித்திரிக்கும், நளாயினிக்கும் இணையாகக் கஷ்டங்களைப் பட்டுத் திருந்தி நல்ல பெண்ணாக முயற்சிக்க வேண்டும். அவ்வளவே தான்.