நேற்று பின்னிரவில், முகப்புத்தகத்தில் ‘எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்’ எனும் நிலைத்தகவலை வாசித்தது முதல் மனம் கனத்துப் போனது. தமிழ் இலக்கிய வட்டாரத்தில் தீவிர வாசிப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்குப் புத்தக வாசிப்பு என்பது அன்றாடம் மூன்று வேளை போஜனம் செய்வதைப் போல இன்றியமையாத செயலாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் சந்திக்க விரும்பிய எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தவர் அசோகமித்ரன். தனது புனைவுகளில், கட்டுரைகளில் மட்டுமல்ல நிஜத்திலும் மிக மிக இயல்பான மனிதராக வாழ்ந்து முடித்த ஆத்மா அவர். அவரது யதார்த்தத் தன்மையைப் பற்றி தனது ‘வாசக பர்வத்தில்’ எஸ்.ராமகிருஷ்ணன் விவரித்திருப்பார். வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.