நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகு அதிக அளவில் பெருகி வருகின்றன. ஊடகங்களில் பதிவு செய்யப்படுவது வெகு குறைவானவையே, அதையே நாம் அதிகம் என நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நிஜத்தில் பெண்கள் இன்னும் அதிக துயரத்தில் இருக்கிறார்கள். நாட்டின் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான அநீதிகளைத் தட்டிக் கேட்கும் முனைப்பு கூட இல்லாமலிருக்கிறது. பெண்கள் பழைய காலங்களைப் போல தங்களுக்கு நேரும் குற்றங்களை வெளியில் சொல்லத் தயங்கவேண்டியது இல்லை. பெண்கள் தங்களது துன்பங்களை வெளிப்படையாக முன்வந்து தெரிவித்தால் தான் எங்களைப் போன்ற போலீஸ்காரர்களால் அவர்களுக்கு தகுந்த நியாயத்தைப் பெற்றுத் தர முடியும். மாறாக, தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பெண்கள் வெளியில் சொல்லத் தயங்கினால் குற்றவாளிகள் தப்பிக்கும் நியாயமற்ற நிலை தான் நீடிக்கும். பெண்கள் ஆண் போலீஸ்காரர்களிடம் சில விஷயங்களைச் சொல்லத் தயங்கலாம் என்பதால் பெண் போலீஸ்காரர்களான நிர்மலா, திருமலா, நாகரத்னா, பார்கவி என நாங்கள் நால்வரும் கிட்டத்தட்ட 1,250 கிமீ தூரத்தை சைக்கிள் மூலமாகச் சுற்று வந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை புகாராகப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினோம். 45 நாட்களானது எங்கள் பயணம் முடிவதற்கு. எங்கள் பயணத்திற்கிடையில் சுமார் 100 இடங்களிலாவது பயணத்தை நிறுத்தி அங்கிருந்த பாதிக்கப்பட்ட பெண்களை அணுகிப் பேசி இருப்போம் என்றனர்.