வெங்கய்யாவின் அரசியல் வாழ்வில் அவருக்குப் பயணங்கள் என்றால் கொள்ளைப் ப்ரியம். குடும்பத்தினரைப் பொறுத்தவரையில் அவர் எந்த நேரம் எங்கிருப்பார்? என்பதை தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்துத் தான் தெரிந்து கொள்வார்கள்... என அவரது மகளே ஒரு ரியாலிட்டி ஷோ வில் தெரிவித்திருக்கிறார். அப்படிப் பரபரப்பாக வாழ்ந்த தீவிர அரசியல்வாதியான வெங்கய்யா தற்போது எந்தக் கட்சி சார்பானவராகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. உபராஷ்டிரபதியாக கட்சி சார்பற்றவராகப் கடமையாற்ற வேண்டிய அவசியம் அவருக்கு இப்போது உண்டு. அது மட்டுமல்ல ‘நடப்பு நிகழ்வுகளைப்’ (current affairs) பொறுத்தவரை உடனுக்குடன் தனது கருத்தை ஊடகங்களில் பதிவு செய்து விடும் பழக்கமுள்ள சுறுசுறுப்பான அரசியல் தலைவரான அவர் இனி அந்த த்ரில் அனுபவத்தை இழக்கப் போகிறார். முன்னைப்போல பாஜக சார்பாகவோ அல்லது சுய சார்பாகவோ தனது கருத்துக்களை சூட்டோடு சூடாகப் போல்டாகப் பதிவு செய்ய அவரது பதவி அனுமதிக்குமா? எனத் தெரியவில்லை. இந்திய ஜனாதிபதியைப் போலவே, உப ஜனாதிபதி பதவி வகிப்பவர்களுக்கும் தங்களது பதவிக் காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்? எனப் பல முறைமைகள் இந்திய அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் அவர்கள் முறையாகக் கடைப்பிடித்தாக வேண்டும். அப்படிப் பார்த்தால் வெங்கய்யா இனி பாதுகாவலர்கள் இல்லாமல் எங்கேயும் செல்ல முடியாது. அவரைச் சந்திக்க அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்குமே கட்டுப்பாடுகள் விதிக்கப் படலாம். முன்னைப் போல ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் கட்சிக்காரர்களின் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் குடும்ப உறுப்பினரைப் போல சர்வ சகஜமாக பயணித்து சொந்த மாநில மக்களுடன் நேரடி, நெருங்கிய தொடர்பில் இருக்க முடியாது. நினைத்த மாத்திரத்தில் தமிழக, கர்நாடக, கேரள லோக்கல் அரசியல் விவகாரங்களில் தனது இன்ஸ்டண்ட் கருத்துக்களைப் பதிவு செய்ய முடியாது. மொத்தத்தில் தீவிர பாஜக விசுவாசியான தன்னை அரசியல் சார்பற்றவராகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இனி வெங்கய்யாவுக்கு உண்டு. தனது பழுத்த அரசியல் ஞானத்தால் அதையும் அவர் இயல்பாகக் கடந்து வர இயலலாம். என்ன இருந்தாலும் பாஜகவில் அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், போன்ற நாடறிந்த பிரபலங்களை முந்திக் கொண்டு வெங்கய்யா உபராஷ்டிரபதியானது ஒரு திறமையான அரசியல்வதியாக அவருக்கு கிடைத்த வெற்றியே!