ஆனால் கே.விஸ்வநாத்தைப் பொறுத்தவரை அவர் தனது சாதனைகளின் மேல் திருப்தி கொண்ட மனிதராக இல்லை. சமீபத்தில் அவரளித்த பேட்டியொன்றில்; நான் எதையோ சாதித்து விட்டதாக இப்போதும் நினைக்கவில்லை. சொல்லப்போனால் இது வரை நான் செய்த படங்களில் எனக்கு இன்னமும் திருப்தியில்லை என்று தான் நான் கூற விரும்புகிறேன். நான் மட்டுமல்ல; நீங்கள் எந்த ஒரு கலைஞரிடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டாலும் அவர்களால் அப்படித்தான் கூற இயலும். கலை, இசை, கவிதை போன்ற துறைகள் எல்லாம் மிகப் பெரிய சாகரம் போன்றவை. அந்தக் கடலை நாம் ஒரு துளியாக்கி நம்மால் பருகி விட முடியுமா? நான் சங்கராபரணம் திரைப்படத்தை இயக்கினேன். ஆனால் அதைத் தாண்டியும் நான் இயக்க வேண்டிய படம் என ஏதோ ஒன்று இருப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது. என்னைப் பொறுத்த வரை ஒரு கலைஞனுக்கு தனது வேலையில் திருப்தி என்ற விசயம் மட்டும் எப்போதுமே கிட்டவே கிட்டாது.