மொட்டை மாடித் தோட்டத்தில் காய்கறிகளைப் பயிரிட்டு வளர்க்கச் சொல்லி போதித்தது ‘36 வயதினிலே’ திரைப்படம். அதைத் தவறாகப் புரிந்து கொண்டாரோ என்னவோ இந்த விழுப்புரம் இளைஞர் கண்ணன். வீட்டுக்கு கடைக்குட்டியான கண்ணன் ஒரு மெக்கானிக். டி.வி. மிக்ஸி. ஃபேன் பழுது பார்க்கும் வேலைகளைச் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தவர். கண்ணனின் உடன் பிறந்தவர்கள் சொத்துத் தகராறில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த கண்ணனுக்கு பங்கு தராமல் ஏமாற்ற, அது கண்ணனுக்கு மிகப் பெரிய மனச்சுமையாக மாறியது, இதனால் நண்பர்களோடு சேர்ந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையான கண்ணன் நாளடைவில் தனது மோசமான நடத்தையால் அக்கம் பக்கத்தவரின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார். உடன் பிறந்தவர்கள் புறக்கணிக்க, உறவினர் வெறுக்க குடிப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக போதை வஸ்துக்களுக்கு தடம் மாறியது. இவரது மோசமான செய்கைகளால் சிரமத்துக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் கண்ணனைப் புறக்கணிக்க வருமானம் தந்த வேலையிலும் சிரம தசை.