லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மூடப்படும் உணவகங்கள்! நகரங்களில் தங்கியிருக்கும் இளைஞர்கள் நிலை?

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்படும் அபாயம்.

News image

உணவகங்கள் (கோப்புப்படம்) - படம்: எக்ஸ்

Updated On :10 மார்ச் 2026, 9:19 am

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக, எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் உணவகங்கள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.

வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதனால், சென்னை உள்பட அதன் புறநகர் மாவட்டங்களில் உணவகங்கள் மிக விரைவில் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னையில் தங்கி பணிபுரியும் இளைஞர்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

ஏனென்றால் அவர்கள் மூன்று வேளை உணவுகளுக்கு உணவகத்தையே சார்ந்து இருப்பதால், உணவகங்கள் மூடப்பட்டால் பொது முடக்கத்துக்கு இணையான பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்றே தெரிகிறது.

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் நேற்று முதல் தடைபட்டுள்ள நிலையில், தற்போது இருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வைத்து, ஓரிரு நாள்கள் மட்டுமே உணவகங்களை இயக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் பிரச்னை இரண்டு மூன்று நாள்களுக்குள் சீரடையாவிட்டால், அதற்கு அடுத்த நாளே உணவகத்தை மூடியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு உணவக உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரச்னையால், உணவகத்தில் வேலை பார்க்கும் ஏராளமான பணியாளர்களின் வேலை பறிபோகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை பல்வேறு மாவட்டங்களிலும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், முன்னிருப்பு வைத்துக்கொள்ளாத சிறிய கடைகள் இன்று முதலே மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

திடீரென உணவகங்கள் மூடப்படுவதால் வெளியூர்களிலிருந்து வந்து விடுதிகளில் தங்கிப் பணியாற்றுவோர், மாணவர்கள், மருத்துவ பயனாளிகள், சுற்றுலாப் பயணிகள் என பலதரப்பட்ட மக்களும் அவதியடையும் சூழல் உருவாகியுள்ளது.

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்களில் உணவு வகைகளும் குறைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக மதிய சாப்பாட்டில் 2 பொறியல் வகைகள் கொடுக்கப்படும் உணவகங்களில் ஒரு பொறியல் மட்டுமே வழங்கப்படும் என்றும் வெரைட்டி ரைஸ் உணவு வகை வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை வேளைகளில் வழங்கப்படும் போண்டா, பஜ்ஜி போன்றவை சில உணவகங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

பெரிய உணவகங்களில் வழக்கமாக 350 உணவு வகைகள் தயார் செய்யப்படும் நிலையில், 100-க்கும் குறைவான உணவு வகைகள் மட்டுமே தயார் செய்யப்படுகிறது. குறைந்த சமையல் எரிவாயு செலவாகும் உணவுப் பட்டியலை மட்டுமே உணவகங்கள் முன்னுரிமை கொடுத்து தயார் செய்து வருகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊத்தாப்பம், தந்தூரி, சைனீஸ் வகைகளுக்கு அதிக சமையல் எரிவாயு தேவைப்படுவதால் அவற்றையெல்லாம் தயார் செய்வதை தவிர்க்க உணவக உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

சிலிண்டர் தட்டுப்பாட்டால் விலை ஏற்றப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. உணவகங்களை மட்டுமே நம்பி இருப்பவர்கள் பலரும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த நிலையில், மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, எளிய மக்களின் வாழ்க்கை சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னையில், அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

Summary

Restaurants are at risk of closing due to cooking gas shortage.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.