டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சர்வதேச தாய்மொழிகள் தின பின்புலம்: கிழக்கு வங்க மாணவர்கள் முன்னெடுத்த மொழிப் போர்!

சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுவதன் பின்புலம் குறித்து...

News image
21 பிப்ரவரி 1952 வரலாற்று சிறப்பான போராட்டத்திற்கு டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் கலைத்துறைக் கட்டிடம் அருகே ஆயத்தமாகும் தருணம்.- photo courtesy: Rafiqul Islam
Updated On :21 பிப்ரவரி 2026, 4:55 pm

இராஜ முத்திருளாண்டி

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலையடையும் மகிழ்வுத் தருணத்தில் பிரிவினைப் பெருஞ்சோகம் (1947) இந்தியாவைச் சூழ்ந்து கவ்வியதை அறிவோம். நம்மிடமிருந்து பிரிந்து புதிய நாடாக பாகிஸ்தான் தோன்றும்போதே கிழக்கு, மேற்கு என இரு துண்டுகளாக - இரு துண்டுப்பகுதிகளுக்கும் இடையில் சுமார் 1200 மைல்களுக்கு மேல் (இந்திய நிலப்பரப்பு) இடைவெளி எனப் - ‘பிறவிப் பிளவாகி’ உருவானது. இந்திய வங்காளத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்த பகுதி, கிழக்கு வங்காளம், கிழக்கு பாகிஸ்தான் ஆனது. (தற்போது பங்களாதேஷ்). புதுநாடு உருவானதிலிருந்தே பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியை மேற்கு மேலாதிக்கம் செய்து வருவதாக கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் பலவகைகளில் உணரத் தொடங்கினர். (நம் நாட்டில், ‘வடக்கு- தெற்கு’!) ‘ஒரு நாடு, அந்நிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற முடியும்; ஆனால் அது, அந்த நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரம் பெற்றுவிட்டனர் என்று அர்த்தமல்ல’ என்பதற்கு பாகிஸ்தான் முன்னுதாரணமானது

பிறவிக்குறைபாட்டோடு தோன்றியநாடு இருபத்தைந்து ஆண்டுகள் கூட நிலைக்கமுடியவில்லை. அவ்வாறு நிலைக்காமற் போனதற்குப் பலகாரணங்கள் இருந்தாலும், பெரும்பான்மை மொழியை அப்பட்டமாகப் புறக்கணித்து, நியாயப்படுத்த முடியாத அடாவடியாகச் - சிறுபான்மை மொழியை (உருது) நாட்டின் ஆட்சிமொழி என ஆரம்பத்திலிருந்தே ஒருதலையாக விடாப்பிடியாக முகம்மதலி ஜின்னா போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

‘ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்கள்தொகையில் 56.4% பேர் வங்காள (Bangla) மொழி பேசுகிறார்கள் என்ற உண்மையைப் புறக்கணித்து- 21 மார்ச் 1948இல் - மேற்கு பாகிஸ்தான் மக்கள் தொகையில் 3.27% பேர்மட்டுமே பேசும் உருதுதான் அலுவல்பூர்வ மொழியாக (Official / State Language) இருக்கும் என்று அறிவித்ததே பாகிஸ்தான் இருதுண்டுகளாக உடைந்ததற்கு முதன்மைக்காரணமாகும்.’(மரோன்,1955)

அலுவல் மொழி குறித்த ஆட்சியாளர்களது இணக்கமற்ற நிலைப் பாட்டால் கிழக்கு பாகிஸ்தானில் உருவாகிவளர்ந்து வெடித்த மொழிக் கிளர்ச்சி இருபகுதிகளாகக் காண உரியது. முதல் பகுதி 1947 முதல் 1951 வரை, இரண்டாவது 1952 முதல் 1971 வரை.

மொழிக்கிளர்ச்சி முதற் பகுதி (1947-51)

புதிய பாகிஸ்தானின் நாணயங்கள், தபால் தலைகள் போன்றவற்றில் உருது மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளின் பாடப்பட்டியலில் வங்காளமொழிக்கு இடமில்லை. பாகிஸ்தான் கடற்படைக்கான ஆட்சேர்ப்பு தேர்வில் உருது, ஆங்கிலம் மட்டுமே (கிழக்கு பாகிஸ்தானில் தேர்வு எழுது வோர்க்குத்) தேர்வுமொழிகளாக வைக்கப்பட்டது. ஜின்னாவைப் போலவே, பாகிஸ்தான் அரசாங்கக் கல்வி அமைச்சராக இருந்த பஸ்லூர் ரஹ்மான் ‘’உருது மொழியையே பாகிஸ்தானின் ஒரே தேசிய மொழியாக வைத்திருப்போம் என்று – வங்காளிகளை ஆத்திரமூட்டும் உரைகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

இவைபோன்ற நடவடிக்கைகள் கிழக்கு வங்காளத்தில் படித்த மக்களையும், மாணவர்களையும் தமது தாய்மொழியைப் பாதுகாக்க எழுச்சிபெறத் தூண்டுவதற்குப் போதுமான ஆத்திர மூட்டல்களாக வளரத்தொடங்கின. மொழிகுறித்த மேற்குத் தலைவர்களின் முன் குறிப்பிட்டவகைப் பேச்சுகளை, நிலைப்பாடுகளை எதித்துப் போராட்டங்கள் டாக்காவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தொடங்கின. மகளிர் அமைப்புகளும் (சில்ஹெட் மாவட்ட மகளிர் சமிதி) அரசாங்க மொழிக் கொள்கைக்கு வெளிப்படையாக எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்தன. பாகிஸ்தான் உருவான (1947) ஆண்டின் இறுதியிலேயே தமதுன் மஜ்லிஸ் அமைப்பின் முயற்சியால் கிழக்கு பாகிஸ்தானில் முதல் ‘மொழி இயக்க நடவடிக்கைக் குழு’ அமைக்கப்பட்டது.

பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 23, 1948இல் தொடங்கிய நாளிலேயே கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினரான தீரேந்திரநாத் தத்தா, ‘உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன், வங்காள மொழியையும் அரசியல் நிர்ணய சபையின் மொழியாக’ ஏற்றுக்கொள்வதற்கான தீர்மானத்தை முன்வைத்தார். இந்த தீர்மானத்தைப் பிரதமர் லியாகத் அலிகான், கிழக்கு வங்காள ஆளுநர் குவாஜா நஜிமுதீன் முதலியோர் மிகக்கடுமையாக எதிர்த்தனர்.

அரசியல் நிர்ணய சபையில் வங்கமொழிக்கு இடமளிக்க நஜிமுதீன் உள்ளிட்டோர் மறுப்பதைக் கண்டித்து 1948 பிப்ரவரி 26இல் டாக்காவில் ஒரு எதிர்ப்பு வேலைநிறுத்தம் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. (இதுபோலவே 1965இல் தமிழகத்தில் மாணவர்களே முன்நின்று இந்தித்திணிப்பை எதிர்த்து எழுச்சியுடன் கிளர்ந்தெழுந்தது நினைவுக்கு வருகிறதா?) டாக்கா பல்கலைக்கழகம், அனைத்துக் கல்லூரிகள், பள்ளிகளின் மாணவர்கள், டாக்கா சட்டக் கல்லூரி மாணவர் ஷேக் முஜிபூர் ரஹ்மான் (பின்னர் பங்களா தேஷின் பிரதமரானவர்) முன்னெடுப்பில் ரம்னா பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். வங்காள மொழியை பாகிஸ்தானின் தேசிய மொழியாக அமரச்செய்ய வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் முழக்கம், வலியுறுத்தல்.

தொடர்ந்து, மார்ச் 11இல் - மாணவர்கள், அனைத்துக் கட்சியினர் இடம் பெற்ற ‘மாநில மொழிச் செயல் குழு’ என்ற அமைப்பின் மூலம் கிழக்கு பாகிஸ்தான் முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. மார்ச் 11 வேலைநிறுத்தத்தின் போது முன்போலவே டாக்கா பல்கலைக்கழகம், மற்ற மாணவர்களுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் ரம்னா பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தலைமைச் செயலகமருகே ஆர்ப்பாட்டம் செய்த சட்டக்கல்லூரி மாணவர், ஷேக் முஜிபுர் ரஹ்மான், ஷம்சுல் ஹக், ஒலி அஹத், ஷௌகத் அலி மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மார்ச் 11இல் நிகழ்ந்த போலீஸ் அடக்குமுறை, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட மாணவர்கள் கைது ஆகிய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புதெரிவித்து, டாக்காவில் மட்டுமல்ல கிழக்கு வங்காளம் முழுவதிலும் மாணவர்கள் மார்ச் 13 முதல் 15 வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மக்களிடமும் ஆதரவு வளர்ந்து, வங்காள மொழியையும் பாகிஸ்தானின் தேசியமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது.

மாணவர்கள், மக்கள் எதிர்ப்பு அரசாங்கத்தின் மொழிக் கொள்கைக்கு எதிராக நாளும் அதிகரித்துவந்த சூழலில் பாகிஸ்தான் அதிபர் முகம்மதலி ஜின்னா மார்ச் 19இல் கிழக்கு வங்காளத்திற்கு வருகை தருவதாக இருந்ததால், மாணவர்கள் போராட்டத்தைத் தவிர்க்க,. மொழிப் பிரச்சினையில் ஒரு உடன்பாட்டுக்காக கிழக்கு பாகிஸ்தான் ஆளுநர் நஜிமுதீன், மாணவர்கள் குழுவுடன் (கம்ருதீன் அகமது, அபுல் காசிம், முகமது தோஹா, சையத் நஸ்ருல் இஸ்லாம், அஜீஸ் அகமது, அப்துர் ரஹ்மான் சவுத்ரி) சமரசம் பேசி மார்ச் 15 காலையில் இறுதியாக ஒரு எட்டு அம்ச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

நடவடிக்கைக் குழுவின் அனைத்து நிபந்தனைகளும் ஏற்கப்பட்டன. மொழிப் போராட்டக்காரர்களை ‘’நாசகாரர்கள்’’ என்று அரசு குறிப்பிடுவது தவிர்க்கப்படும்; மார்ச் 11ம் தேதி கைது செய்யப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் (1949 ஜனவரி 20 வரை முஜிபூர் ரஹ்மான் சிறையிலிருந்தார்.) உள்பட அனைவரையும் விடுதலை செய்வது என்பவைகளுடன் முக்கியமாக, வங்காள மொழியை மாநில மொழிகளில் (State Language) ஒன்றாக ஏற்க கிழக்கு வங்காள சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவும், அரசியல் நிர்ணய சபையின் மொழியாக வங்காளத்தையும் அறிமுகப்படுத்தவும், மத்திய அரசின் அனைத்து தேர்வுகளிலும், அலுவல் நடைமுறை களிலும் வங்காள மொழிக்கு, உருது மொழிக்குச் சமமான அந்தஸ்து வழங்கவும் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதிபர் முகம்மதலி ஜின்னா, மார்ச் 19இல் தனது முதல்பயணமாக டாக்காவுக்கு வந்தார். (அதுவே அவரது கடைசி பயணம்; விரைவில் ஜின்னா இறந்தார்) மார்ச் 21இல் ரேஸ் கோர்ஸ் திடலில் (இப்போது ‘சுஹ்ரவர்தி உத்யன்’) நடைபெற்ற கூட்டஉரையின்போதும்; மார்ச் 24இல், அவரைக் கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற டாக்கா பல்கலைக்கழக சிறப்பு பட்டமளிப்பு விழாவிலும்; அவர் கராச்சிக்குப் புறப்படுவதற்கு முன்னர், கிழக்கு வங்காள மக்களிடையே நிகழ்த்திய (மார்ச் 28) வானொலி உரையிலும் போராட்டக்காரர்களை ‘’நாசகார சக்திகள்’’,‘’சதிகாரர்கள்’’ என்ற பழைய வார்த்தைகளால் ஜின்னா அர்ச்சனை செய்து எச்சரித்தார். ‘’உருதுதான் பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக இருக்கும்’’ என்பதை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உரத்து முழங்கினார். ஜின்னாவின் வருகை, உரைகளால் கிழக்கு பாகிஸ்தானில் மொழியுணர்வுக்கனல் எரிநிலை அடைந்தது.

போதாதற்கு, ஜின்னா வருகையையொட்டி உருவான எட்டம்ச ஒப்பந்த வாக்குறுதியை வெகுவிரைவிலேயே (1948 ஏப்ரலில்) நஜிமுதீன் மீறினார். வங்காள மொழியை பாகிஸ்தானின் மாநில மொழிகளில் ஒன்றாக மாற்ற மாகாண சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர மறுத்துவிட்டார். ஜின்னாவின் பேச்சுக்களால் எரிநிலையடைந்திருந்த மொழியுணர்வுக்கனலில் ஆளுநர் நஜிமுதின் செயல் நெய்யூற்றியதானது. கிழக்கு பாகிஸ்தான் முழுவதும் தொடர் போராட்டங்களே அன்றாட நிகழ்வுகளாயின.

பாகிஸ்தானின் தலைவரான முகமது அலி ஜின்னா மரணத்தைத் (1948 செப்டம்பர் 11) தொடர்ந்து பாகிஸ்தான் மத்திய அரசு அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன. நஜிமுதீன் கவர்னர் ஜெனரல் பதவிக்கு உயர்வு பெற்றார். அடுத்து,1951 அக்டோபர் 16இல், பிரதமர் லியாகத் அலி கான் ராவல்பிண்டியில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நஜிமுதீன் பிரதமரானார். கிழக்கு வங்காளத்தின் பொறுப்பை நூருல் அமீன் பெற்றார். (இவற்றுக்கிடையில் அவ்வப்போது நடந்த மொழிக்கான கிளர்ச்சிகளின் விவரங்களை விரித்தால் பெருகும்.)

மொழிக்கிளர்ச்சி - இரண்டாவது பகுதி (1952 முதல்)

பிரதமரானபின் குவாஜா நஜிமுதீன் 1952 ஜனவரி 27இல் டாக்கா வருகை தந்தார். சும்மாஇருக்கமாட்டாமல், மீண்டும் ‘’உருது மட்டுமே மாநில (State) மொழியாக இருக்கும்” என்று தேவையில்லாமல் திருவாய் மலர்ந்தார். அதுவே வெடிமருந்துக் கிடங்கில் தீப்பந்தம் எறிந்ததுபோலாயிற்று. நான்காண்டுகளாகக் கனன்றுகொண்டிருந்த மொழிக்கான எழுச்சித்தீ பற்றிப்படர்ந்து, பொங்கிப் பெருவலிமையோடு, பெருஞ்சீற்றத்தோடு வெடிக்கத்தொடங்கியது.

நஜிமுதீனின் அறிவிப்பை எதிர்த்து டாக்கா பல்கலைக்கழக மாநில மொழிக் குழுவின் சார்பாகப், பல்கலைக்கழக கட்டிடங்களின் சுவர்களில் சுவரொட்டிகள் பல தோன்றின. நஜிமுதீனைக் கண்டித்து இளைஞர் லீக்கின் பொதுச் செயலாளர் ஒலி அஹத் வெளியிட்ட ஒரு பத்திரிகை அறிக்கை டாக்கா செய்தித்தாள்களில் முதன்மையாக வெளியிடப்பட்டு வெகுவாகப் பரவி மக்களைக் கிளர்ந்தெழவைத்தது.

ஜனவரி 30இல், கிழக்கு பாகிஸ்தான் முஸ்லிம் மாணவர் லீக்கின் தலைவரான கலீக் நவாஸ் தலைமையில் பல்கலைக்கழக மாணவர் கூட்டம் - ‘’மாமரக்கூட்டம்’’ (அம்தலா) - நடைபெற்றது. வங்காள மொழியை பாகிஸ்தானின் மாநில மொழிகளில் ஒன்றாக ஏற்க வேண்டும்; முன்னர் கிழக்கு வங்காளத்தில் ஆளுநராக இருந்தபோது நஜிமுதீன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு ஊர்வலமாகச் சென்று பிரதமரின் அலுவல்பூர்வ இல்லத்திற்கு முன் நின்று ஆர்ப்பாட்ட முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினர், ஆர்ப்பாட்டம் முடிந்தபின், டாக்காவின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மாநில மொழி இயக்கத்தை வழிநடத்தும் பொருட்டு அனைத்துக் கட்சி, அனைத்து மாணவர் இணைந்த ‘மாநில மொழி நடவடிக்கைக் குழு’ என்ற 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் மாணவர் லீக்கின் பொதுச்செயலாளர் காசி குலாம் மஹ்பூப் மாநில மொழி நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளரானார்.

அக்கூட்டத்தில் பிப்ரவரி 4 இல் மாணவர்களின் பொது வேலைநிறுத்தம்; பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்து, ஷேக் முஜிபுர் ரஹ்மான் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில மொழிக் குழு அறிவித்தபடி, பிப்ரவரி 4 ஆம் தேதி மாகாணம் தழுவிய வேலைநிறுத்தம் தொடங்கியது. டாக்கா பல்கலைக் கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுச்சியாகக்கூடினர், காலை 11 மணிக்கு காசியுல் ஹக் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. காசி குலாம் மஹ்பூப், டாக்கா பல்கலைக்கழக மாநில மொழிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் மதீன் ஆகியோர் உணர்ச்சிபொங்க உரையாற்றினர். மாணவர்கள் பெருந்திரளாகி ஆர்ப்பாட்டத்தை நடத்தக் கிளம்பினர். பல்கலைக்கழக துணைவேந்தர், பிரதமரின் வீடுகள் வழியாக நகரத் தெருக்களில் மாணவர் பேரணி பெரும்படைபோல அணிவகுத்துச் சென்றது. வேலைநிறுத்தத்தைத் தடுக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோற்றன. டாக்கா மற்றும் மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் (மைமன்சிங், சிட்டகாங், கொமில்லா, மாணிக்கஞ்ச், தினாஜ்பூர், சந்த்பூர், ஃபெனி மற்றும் நாராயண்கஞ்ச் உள்பட) கல்வி நிறுவனங்களிலும் வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன.

பிறகு நடைபெற்ற டாக்கா பல்கலைக்கழக மாணவர் கூட்டத்தில், பிப்ரவரி 21 இல் கிழக்கு வங்காளம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1949 அக்டோபரிலிருந்து சிறையிலடைக்கப் பட்டிருந்த ஷேக் முஜிபூர் ரஹ்மான், பிப்ரவரி 21ஐ மாநிலமொழி தினமாக அறிவித்து போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சிறையிலிருந்து இரகசியச் செய்தி அனுப்பியிருந்தார்.

அதன்படி அந்நாளில் நடைபெற்ற சோகமான - ஆனால் மொழியுணர்வு எழுச்சியூக்கும் - நிகழ்வுகள்தான் வரலாற்றில் மிக அழுத்தமான பதிவாகிவிட்டது. வங்காள மொழி பேசுபவர்களின் இதயங்களில் ஆழமாக வேறூன்றி நிற்கும் பிப்ரவரி, 21நாளின் ஈரநினைவுகள், 1999இல் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு உலக தாய்மொழிகள் தினம் (பிப்ரவரி 21) எனும் உன்னதம் பெற்றுச் சிறப்படைந்துள்ளது.

கிழக்கு பாகிஸ்தானில் 1952 பிப்ரவரி 21 நிகழ்வுகள், விளைவுகள் குறித்துச் சுருக்கமாகக் காண்போமா?.

மாணவர்களது போராட்டத்தை எதிர்கொள்ளவும், பிப்ரவரி 20இல் கிழக்கு வங்காள சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடக்கப்போவதைக் கருதியும், அரசு அலுவலர்களில் கடுமையானவர்கள் எனக் கருதப்பட்ட பலர் டாக்காவுக்கு முன்கூட்டியே இடமாறுதல் அளித்து நியமிக்கப்பட்டனர். புதிதாக நியமனமான மாவட்ட நீதிபதி குரோஷி, பிப்ரவரி 20 முதல் 30 நாள்களுக்குத் தலைநகர் டாக்காவில் 144 தடையுத்தரவைப் பிரகடனம் செய்தார். பிப்ரவரி 20 பிற்பகலில் இருந்து தடையுத்தரவானது மைக்மூலம் அரசாங்கத்தால் நகரெங்கும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் பல்கலைக்கழக மாநில மொழிக் குழு, துணிவுடன் 144 தடையை மீற முடிவு செய்தது.

மாணவர்கள் முன்நிற்க நடைபெறும் பிப்ரவரி 21 பொது வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றியடையச்செய்ய மாநில கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை அளித்தது. பிப்ரவரி 21 ஆம் நாள் விடியலுக்கு முன்பே அனைத்துக்கட்சி நடவடிக்கைக்குழு சார்பிலும், டாக்கா பல்கலைக்கழகக் கமிட்டியின் சார்பிலும் இரண்டு துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. அதில், வங்காள மொழியை, பாகிஸ்தானின் மாநில மொழிகளில் ஒன்றாக அமர்த்தக் கோருவதற்கான நியாயங்கள் விரிவாக விளக்கப்பட்டிருந்தன.

டாக்கா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் அமைத்த தியாகிகள் நினைவு இடம்.(Shaheed Minar)

டாக்கா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் அமைத்த தியாகிகள் நினைவு இடம்.(Shaheed Minar)

பிப்ரவரி 21, காலை 7.30 மணி முதல், நகர டி.எஸ்.பி. சித்திக் திவான் தலைமையில் காவல்துறைப் படைகள் பல்கலைக்கழக பகுதிகளில் நிலைகொண்டனர். டாக்காவின் கூடுதல் நகர எஸ்.பி., மசூத் மஹ்மூத், நகரின் பல்வேறு இடங்களில் காவல்துறை படைப் பிரிவுகளை நிறுத்தினார். காலை பத்து மணியளவில், மேலும் கூடுதல் காவல்படையினர் பல்கலைக்கழக வாயிலருகே குவிக்கப்பட்டனர். அனைத்து காவலர்களும் துப்பாக்கியேந்தி தாக்குதலுக்குத் தயாரான மனப்போக்கில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

அதிகாலையிலிருந்தே மாணவர்களும் மக்களும் வேலைநிறுத்தத்தை முழுமையாக்க (ஆங்காங்கே 4 பேருக்கு மேல் கூடாமல் நின்று) வாகனங்களைத் தடுத்தனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது; நிலைமை மோசமானது. பல்கலைக்கழகத்திற்குள் மாமரத்தின் (அம்தாலா) கீழ் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் காசியுல் ஹக் தலைமையில் குழுமினர். பல்கலைக்கழகத் துணைவேந்தர், டாக்டர் மொயாசிம் ஹுசைன், மூத்த பேராசிரியர்கள், உயரலுவலர்கள், மாணவர்களை அணுகி 144 தடையுத்தரவை மீறவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். மாணவர்கள் அந்த உபதேசத்தைக் கேட்கும் மனநிலையில் இல்லை. காசியுல் ஹக், 144 தடையுத்தரவை மீறுவோம் என்று அறிவித்தார்.

144 தடையுத்தரவு இருக்கும்போது 4 பேர்களுக்குமேல் கூடக் கூடாதல்லவா? அதனை மீறும்வகையில் பத்துப்பத்து மாணவர்கள் கொண்ட, ஒவ்வொருகுழுவாக வளாகத்திலிருந்து சாலைக்கு அலையலையாய் வெளியேறுவது எனத்தீர்மானித்து வெளியேறத் தொடங்கினர். இவ்வாறு டாக்கா பல்கலைக்கழக வாயிலருகே குழுக்களாக மாணவர்கள் வெளிவரத் தொடங்கியதுமே எந்த அறிவிப்பும் செய்யப்படாமல், மாணவர்கள் மீது வாயிலிலும், வளாகத்தின் உள்ளும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் வளாகத்தின் உள்ளே குழுக்களாக வெளிவரக் காத்து நின்ற மாணவர்களும் மொத்தமாகத் திரண்டு, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சை எதிர்கொள்ள ஆயத்தமாகத் தண்ணீர் நிறைத்த வாளிகளுடன் பல்கலைக்கழக வாயிலுக்கு அருகில் பேரலையாக விரைந்தனர்.

நான்குபேருக்கு மேல் குழுவாகச் சாலைக்குவந்த மாணவர்கள் அனைவரையும் காவலர்கள் கைது செய்தனர். மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அங்கிருந்த காவலர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு. போதிய காவல் வாகனங்களுமில்லை. ஆதலால், மாணவிகளைக் கைதுசெய்யாமல் கட்டாயப்படுத்தி வளாகத்திற் குள்ளே திருப்பி அனுப்பினார்கள்.

மாணவர்கள் பெருந்திரளாகப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறி சட்டமன்றம் இருக்கும் சாலையில் திடீரென ஓடத்தொடங்கினர். ஆதரவாக வெளியிலிருந்த கட்சியினர் / மக்கள் காவலர்கள் மீது செங்கற்களை மறைந்திருந்து வீசினர். எங்கும் கண்ணீர்ப்புகை மண்டலமானது. காவலர்கள் மாணவர்கள்மீதும் மக்கள்மீதும் தாறுமாறாகத் தடியடி செய்தனர். கலவரமானது களம்.

முதலணியை நடத்திச்சென்ற மாணவர் தலைவர் காசியுல் ஹக் கண்ணீர்ப்புகை குண்டுவீச்சில் மயங்கி விழுந்தார். சில மாணவர்கள் அவரை கலைக் கட்டடத்தின் முதல் மாடிக்குத் தூக்கிச் சென்று அங்கிருந்தவர்களிடம் ஒப்படைத்தனர். ஆனால், அந்த சம்பவத்திற்குப் பிறகு காஜியுல் ஹக் பற்றி யாரும் கேள்விப்படவேயில்லை!

சாலைக்கு வந்த மாணவர்கள் சட்டமன்றத்தைச் சுற்றி வளைக்கத் திடீர்த்திட்டமிட்டு அருகிலிருந்த மருத்துவக்கல்லூரி விடுதி வாயிலருகே குழுமினர். காவலர்கள் அவர்களைச் சுற்றி வளைத்து சட்டமன்றம் நோக்கிச் செல்லவிடாமல் தடுத்துநின்றனர். மீண்டும் பலதிசைகளிலிருந்தும் காவலர்கள் மீது செங்கற்கள் பறந்து வந்து விழுந்தன. சட்டமன்றத்திற்குச் செல்லும் உறுப்பினர்கள், அமைச்சர்களின் கார்களை மாணவர்கள் மறித்தனர். சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் நேரம் நெருங்கியபோது, மாணவர்கள் மேலும் அமைதியற்றவர்களாக மாறினர்.

காவல்துறையினரும் மிகவிரோதமான தோரணையைக் காட்டி மாணவர்களை நோக்கிச் சரமாரியாக்க் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். பின்னர் முன்னறிவிப்பேதுமில்லாமல், திடீரென விடுதிவாயிலில் இருந்த மாணவர்கள் மீதும், சாலையின் மறுபுறத்தில் கூடியிருந்த கூட்டத்தின் மீதும் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

முதல் காட்சியாக, சாலையோரத்தில் இருந்த ஒரு மாணவரும், அடையாளம் அறியப்படாத மற்றொரு சிறுவனும் மடிந்து வீழ்ந்தனர். மாணவரின் மண்டை ஓடு வெடித்து அவரது மூளை வெளியேவந்து சாலையில் சிதறியது. உலகவரலாற்றில் தாய்மொழிக்காக முதல் களப்பலி அது. துப்பாக்கிச்சூட்டில் ஏராளமான மாணவர்களும் மக்களும் படுகாயமடைந்தனர்.

தலையில் அடிபட்ட பல்கலைக்கழக மற்றொரு மாணவர் ரபிகுதீனின் உடல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்த பிற மாணவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். (பல்கலைக்கழக மாணவர்களான பர்கத், அப்துல் ஜப்பார் இருவரும் அன்று இரவில் இறந்தனர். சுங்கத் துறையின் பியூனான அப்துஸ் சலாமும் பின்னர் இறந்தார்.) கோஷ் மஹால் உணவகத்திற்கு முன்னால் நவாப்பூர் சாலையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார், மேலும் பலர் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட அனைவரின் உடல்களும் சாலையோரத்திலிருந்தும் மருத்துவமனையிலிருந்தும் காவல்துறையினரால் உடனடியாக அகற்றப்பட்டன. உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை, நள்ளிரவுக்குப் பிறகு ரகசியமாக அனைத்து சடலங்களும் அசிம்பூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன. (பொள்ளாச்சி நினைவில் வருகிறதா?)

ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர். உண்மையில் விடுதி வளாகத்திற்கு வெளியே இறந்தவர்களின் எண்ணிக்கை என்னவென்றே இதுவரை தெரியாது.

பிப்ரவரி 21 சம்பவங்கள் குறித்து, அரசாங்கம் முதலில் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. (சங்பாத் பத்திரிகையின் உழைக்கும் பத்திரிகையாளர்கள் அந்த செய்திக்குறிப்பை அச்சிட மறுத்துவிட்டனர் என்பது செய்தி.)

சோகத்தில் மூழ்கிய மாணவர்களால், மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் கயேபி ஜனாஸா (இறந்த உடல்கள் இல்லாத இறுதிச் சடங்கு பிரார்த்தனை) நடத்தப்பட்டது. கயேபி ஜனாசாவில் கலந்து கொண்ட மொத்தமக்களின் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரம் என்று அன்றைய செய்தித்தாள் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷ் நாட்டின் வரலாற்றில் பிப்ரவரி 21 அதிமுக்கியமான நாளானது. பொது விடுமுறை நாளான இந்நாள், ஷோஹித் திபோஷ், (தியாகிகள் தினம்) என்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், மக்கள் மொழிகாக்க உயிர்நீத்த தியாகிகளின் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

பங்களாதேஷின் கலாச்சாரம் மற்றும் வங்காள மொழியைக் கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, தங்கள் தாய்மொழிகள், கலாச்சாரங்களைப் பாதுகாக்கப் போராடும் அனைத்து நாடுகளுக்கும், மாணவர்களுக்கும், மக்களுக்கும் மனிதகுலத்தின் ஆதரவையும் அவர்களோடு துணைநிற்பதை வெளிப்படுத்துவதற்கும் பிப்ரவரி 21 ஒரு அடையாள நாளாக வரலாற்றில் நிலைத்துள்ளது.

தாய்மொழிக்கு உரியநிலையைப் பெறும் உரிமைக்காக மிகுதீரமுடன் போராடிய மாணவர்களின் தியாக மரணங்கள் (1952 பிப்ரவரி 21) இப்போது சர்வதேச தாய்மொழி தினத்தில் நினைவுகூரப்படுகின்றன.

எண்ணற்ற உயிர்ப்பலிகள், கடுங்காயங்கள், பல்லாயிரக்கணக்கில் மாணவர்களுக்கும் மக்களுக்கும் சிறைவாசம் என அணியணியான கொடுமைகள் சோகங்கள் விலையாகி, இறுதியாக, பிப்ரவரி 29, 1956இல் வங்காள மொழி (Bangla) அன்றைய பாகிஸ்தானின் தேசிய மொழிகளில் ஒன்றாக ஏற்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் விடுதலையைத் தொடர்ந்து, அம்மொழி ஒரு புதிய சுதந்திர நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக மாறியது வரலாறு.

கிழக்கு வங்காள மாணவர்கள் களம்நின்று “தாய்மொழிகாப்போம், தன்னுயிரீந்தும்” என வென்றுகாட்டிய தீரப்போராட்டம், தமிழகத்தின் 1965 மொழிப்போருக்கு ஒருமறைமுக உந்துசக்தி எனக் கொள்ளலாம்.

உலகெலாம் எழுக இளைஞர்களே!

எப்போதும், எதுவரினும் எழுந்து நிற்போம் தாய்மொழி காக்க.

கட்டுரையிலுள்ள மாந்தர் பெயர்கள், இடங்கள், நாள், தகவல்களுக்கு ஆதாரம்

• பத்ருதின் உமர், ‘கிழக்கு வங்காள மொழி இயக்கம்’, ஜதியா குரோந்தா பிரகாஷன்,2000

• பத்ருதின் உமர், ‘பங்களாதேஷ் உதயம்’, தொகுதி- 2, வங்காளி தேசிய எழுச்சி, (1958-1971) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், 2006

• ஏ.எம்.ஏ.முஹித், ‘கிழக்கு வங்காள தேசிய மொழி இயக்கம்’ (1947-1956) பல்கலைக்கழக அச்சகம் லிட், 2008

• ஷேக் முஜிபூர் ரஹ்மான், ‘முடிவுறா நினைவுக்குறிப்புகள்’, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், 2012

• ஷேக் முஜிபூர் ரஹ்மான், ‘சிறை நாட்குறிப்புகள்’, வங்காள அகாடெமி, 2018.

[ பத்ருதின் உமர், ஏ.எம்.ஏ.முஹித், ஷேக் முஜிபூர் ரஹ்மான் மூவரும் 1947 மொழி இயக்கம் முதல், வங்க மொழிப்போரில் நேரடியாக முன்னணியில் நின்று போராடியவர்கள்.]

பின்குறிப்பு

கனடாவின் வான்கூவரில் வசித்துவந்த பெங்காலி - கனேடியரான திரு. ரபீகுல் இஸ்லாம் என்பவர் 1998 ஜனவரி 9இல் (அப்போது) ஐ.நா பொதுச் செயலாளராக இருந்த கோபி அன்னானுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், 1952 ஆம் ஆண்டு டாக்காவில் தங்கள் தாய்மொழிக்காக எண்ணிறந்த மாணவர்களும், மக்களும் துப்பாக்கிச் சூடுகளால் படுகொலைகளுக்குள்ளானதை நினைவுகூரும் வகையில் பிப்ரவரி 21ஐ சர்வதேச தாய்மொழி தினமாக அறிவிக்க வேண்டியிருந்தார். பின்னர் பங்களாதேஷ் நாடாளுமன்றமும் இக்கருத்தை யுனெஸ்கோவிற்குப் பரிந்துரைத்தது, தாய் மொழிகளை அழிவிலிருந்து காப்பாற்றும் எண்ணத்தை உலகளவில் ஊக்குவிக்கும் பன்னாட்டு முன்னெடுப்பாக அது விளங்கும் என்ற வேண்டுகோளுடன்.

1952 நிகழ்வுகளின் மறக்க இயலாப் பின்புலத்தைக் கருத்திற்கொண்டு 1999 நவம்பர் 17இல், யுனெஸ்கோ பிப்ரவரி 21 ஆம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்தது. 2000 பிப்ரவரி 21 முதல், உலகளவில் தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச தாய்மொழி தினம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் கவனம் செலுத்துவதாக அமைக்கப்படுகின்றன. அவ்வகையில், இவ்வாண்டுக்கான (2026) சர்வதேச தாய்மொழிதினக் கருப்பொருள்: ‘பன்மொழிக் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் குரல்கள் (Youth voices on multilingual education)’ என இளைஞர்களின் பங்களிப்பை முன்நிறுத்தி யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

**

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.