டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

எப்ஸ்டீனும் நரவணேயும்! பிரதமர் பதிலில்லை, தொடர்ந்து முடங்கும் மக்களவை!

எப்ஸ்டீன், நரவணே விவகாரங்களால் மக்களவை முடங்கியிருப்பது பற்றி...

News image
பிரதமர் நரேந்திர மோடி- ANI
Updated On :9 பிப்ரவரி 2026, 8:28 am

எஸ். ரவிவர்மா

மக்களவை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று முடங்கியுள்ளது.

எப்ஸ்டீன் கோப்புகள், இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி எம்.எம். நரவணேவின் நூல் என ஒரே நேரத்தில் இரு பெரும் பிரச்னைகள் நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றன. இன்னமும் இதுபற்றிப் பிரதமர் நரேந்திர மோடி கருத்து எதுவுமே தெரிவிக்கவில்லை.

எப்ஸ்டீன் கோப்புகள், அமெரிக்காவில் குழந்தைகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த உலகத் தலைவர்கள் தொடர்பான ஆவணங்களில் பிரதமர் மோடியின் பெயர் ஒருபக்கம், இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி எம்.எம். நரவணே எழுதிய புத்தகத்தில், சீன ராணுவ ஊடுருவலின்போது மத்திய அரசு முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு இன்னொரு பக்கம். இதற்கு நேரடியாக பதிலளிக்காமல் ஆளும் பாஜக அரசு திணறிக் கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சியினரோ, வெளிவராத எப்ஸ்டீன் கோப்புகளின் பக்கங்கள் இன்னும் அமெரிக்காவசம் இருக்கின்றன, அதன் காரணமாகவே இந்தியாவை விற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அமெரிக்காவிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் என்று விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்காத விவகாரத்தை கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்துள்ளனர்.

எப்ஸ்டீன் கோப்புகளும் மோடியும்

குழந்தைகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளியான அமெரிக்காவின் பெரும் பணக்காரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தவர்கள், உரையாடியவர்கள், ஆலோசனை பெற்றவர்கள், அவருக்குச் சொந்தமான தனித் தீவுக்குச் சென்றவர்கள் தொடர்பாக 35 லட்சம் பக்கங்கள், 1.8 லட்சம் புகைப்படங்கள், 2,000 விடியோக்கள் அடங்கிய “எப்ஸ்டீன் கோப்புகளை” அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.

இந்த எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பில் கிளின்டன், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவில் தொடங்கி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. டிரம்ப், பில் கிளின்டன் போன்றவர்களின் பெயர்களில் என்ன குற்றச்சாட்டு இருக்கிறது என்பதில் மக்களுக்கு தெளிவு கிடைத்திருக்கும் சூழலில், பிரதமர் மோடி மீதான தகவல் புரியாத புதிராக இருக்கிறது.

ஜூலை 9, 2017 தேதியன்று ஜெஃப்ரி எப்ஸ்டீன் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில், “இந்திய பிரதமர் மோடி ஆலோசனை பெற்றார், இஸ்ரேலில் அமெரிக்க அதிபரின் நலனுக்காகத் தேவையான எல்லாவற்றையும் (டேன்ஸ்ட் அன்ட் சாங் - danced and sang) செய்தார். அது நல்ல பலனளித்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Story image

இந்த மின்னஞ்சலை எப்ஸ்டீன் அனுப்பியதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக, அதாவது ஜூலை 4 - 6 வரை இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னதாக, 2017 ஜூன் 25, 26 தேதிகளில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பைச் சந்தித்திருந்தார்.

இதனிடையே, 2017 மார்ச் 16 அன்று எப்ஸ்டீனுக்கு தொழிலதிபர் அனில் அம்பானி அனுப்பிய செய்தியில், அதிபர் டிரம்ப்புடனான பிரதமர் மோடியின் சந்திப்புக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில், பாலியல் குற்றவாளியிடன் மோடி என்ன ஆலோசனை பெற்றார்? டிரம்ப்பின் நலனுக்காக மோடி இஸ்ரேல் சென்றது ஏன்? டேன்ஸ்ட் அன்ட் சாங் என்றால் என்ன? மோடி - டிரம்ப் சந்திப்புக்கு பாலியல் குற்றவாளியிடம் அனில் அம்பானி உதவி கேட்டது ஏன்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், மோடியின் இஸ்ரேல் பயணத்தை தவிர மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் புறக்கணிக்கக் கூடிய வதந்தி என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ”மோடிக்கு டிரம்ப்பை மிகவும் பிடிக்கும், ஏனென்றால் என்னால் அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க முடியும்” என்று பேசிய காணொலி வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

மோடியின் அரசியல் வாழ்க்கையை அழிக்கும் வகையில் டிரம்ப்பிடம் என்ன ஆதாரங்கள் இருக்கின்றன என்ற கேள்வியையும் இணையத்தில் எழுப்பி வருகின்றனர்.

புயலைக் கிளப்பிய நரவணே நூல்

இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி எம்.எம். நரவணே எழுதியிருக்கும், “ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny)” என்ற சுயசரிதை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் இந்திய நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, காங்கிரஸின் தேசபக்தி குறித்து விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ”இந்தியா - சீனா இடையே கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த மோதல் குறித்து தனது நினைவுகளை அப்போதைய ராணுவத் தளபதி நரவணே தனது சுயசரிதை நூலில் எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல் பல்வேறு காரணங்களால் வெளியாகவில்லை. அதில் தெரிவித்திருக்கும் சிலவற்றைப் பேச விரும்புகிறேன்” என்றார்.

இதற்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுத்தார். மறுநாள், ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு, அவைத் தலைவர் இருக்கையை நோக்கி காகிதங்களைக் கிழித்தெறிந்தனர். இதன் காரணமாக தமிழக எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன் உள்பட 8 பேர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “மக்களவை எதிர்க்கட்சித் தலைவரைக் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசவிடாமல் செய்தனர். முன்னாள் ராணுவத் தளபதி நரவணே எழுதிய நூலில் இருந்து சில வரிகளைக் குறிப்பிட்டுப் பேசுவதற்கே நான் முயற்சித்தேன்.

அமெரிக்காவுடன் கடந்த 4 மாதங்களாக நிலுவையில் இருந்த வர்த்தக ஒப்பந்தம், திங்கள்கிழமை இரவு திடீரென இறுதி செய்யப்பட்டது எப்படி? இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப் பெரிய அளவில் நெருக்கடி வந்துள்ளது. அமெரிக்காவில் கௌதம் அதானிக்கு எதிராக உள்ள வழக்காக இருக்கலாம் அல்லது எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து மேலும் தகவல்கள் கிடைத்திருக்கலாம். பிரதமர் மோடி நெருக்கடிக்குப் பணிந்துவிட்டார். தங்களுடைய கடின உழைப்பு, ரத்தம், வியர்வை அனைத்தும் இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மூலம் விற்பனை செய்யப்பட்டுவிட்டது என்பதை இந்திய விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தேசமே விற்பனை செய்யப்பட்டுவிட்டது” என்றார்.

நரவணே நூலில் குறிப்பிட்டவை குறித்து பேசிய ராகுல், “சீன ராணுவ ஊடுருவலின்போது, முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நரவணே, ராஜ்நாத் சிங்கை அழைத்து, சீனப் படைகள் கைலாஷ் முகடுக்கு வந்துவிட்டன, என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, உடனடியாகப் பதிலளிக்கவில்லை. தொடர்ந்து, ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடமும் அவர் கேட்டுள்ளார். ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. பின்னர், மீண்டும் ராஜ்நாத் சிங்கை அழைத்தபோது, உயர்நிலைக் குழுவிடம் கேட்பதாகக் கூறியுள்ளார். உயர்நிலைக் குழுவின் நிரந்தர உத்தரவு என்னவென்றால், சீனப் படைகள் எல்லைக்குள் வந்தால், அனுமதி இல்லாமல் அவர்கள் மீது சுடக் கூடாது என்பதுதான்.

பின்னர், பிரதமர் மோடி, “எது சரி என்று நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள்” என்று ஒரு செய்தியை அனுப்பினார். இதன் பொருள், நரேந்திர மோடி தனது கடமைகளைச் செய்யவில்லை, "இது என் சக்திக்கு அப்பாற்பட்டது" என்று கூறி, ராணுவத் தளபதியை அவர் விரும்பியதைச் செய்யச் சொல்லியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து புத்தகத்தில் எழுதியுள்ள நரவணே, 'நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன், முழு அரசமைப்பாலும் நான் கைவிடப்பட்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார்” என்றார்.

மேலும், மக்களவைக்கு வருவதற்கு மோடிக்கு துணிச்சல் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பிய ராகுல், பிரதமர் (பிப். 3) வரும் பட்சத்தில் நரவணேவின் நூலை அவருக்கு பரிசளிப்பேன் என்று சவால்விட்டார் ராகுல். அன்று மக்களவைக்கு மோடி வரவில்லை. அவரது பேச்சும் ரத்து செய்யப்பட்டது. பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகளில் முதல்முறையாக மோடியின் பதிலுரை இல்லாமல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிடப்பட்டிருந்ததால் நான்தான் அவரை அவைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தினேன் என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா ஒரு விளக்கத்தை அளித்தார்.

மறுநாள் மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமரோ, 100 நிமிட உரையில் எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டுகளான நரவணே நூல் மற்றும் எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பயங்கரவாதத்தை அழித்ததற்காக எதிர்க்கட்சியினர் தனக்கு சவக்குழி தோண்ட முயற்சிப்பதாக அவர் பங்குக்கு ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ராகுல் காந்தியைப் பேச விடாததை கண்டித்தும், மத்திய அரசு கம்பீரமாக சொல்லிக் கொண்டிருக்கும் ’மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு நேரெதிராக உள்ள அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கோரியும் மக்களவையை நான்காவது நாளாக முடக்கி வைத்துள்ளனர் எதிர்க்கட்சியினர்.

வெளியாகாத நரவணே நூலில் இருப்பதை குறிப்பிட வேண்டாம் என்றுதான் மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளார்களே தவிர, நரவணே கூறியது பொய், தவறான செய்தி என்று இதுவரை தீர்க்கமாக மறுக்கவில்லை.

நரவணே குறிப்பிட்டிருப்பது உண்மையா? எப்ஸ்டீனுக்கும் மோடிக்கும் சம்பந்தம் இருக்கிறதா? புரியாத புதிர்கள். காலம்தான் இவற்றை வெளிப்படுத்த வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.