ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இருளர் இன மக்கள், மாணவர்களுக்கு வழிகாட்டும் பெண்!

செஞ்சியில் இருளர் இன மக்கள், மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் எஸ். சுமதி பற்றி...

S Sumathi

எஸ். சுமதி - Dinamani

Published On :3 ஆகஸ்ட் 2026, 6:19 pm IST

ஒடுக்கப்பட்ட இனம், கல்வி அதிகம் பயிலாதவர்கள் என்று கூறப்படும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர், கொத்தடிமைத் தொழிலாளர்களாக இருந்த பெற்றோர் என பல்வேறு தடைகளைத் தாண்டி உணர்வுநீக்க தொழில்நுட்பப் படிப்பு படித்து, இன்று அந்த இனத்தைச் சேர்ந்த மக்களுக்கும், மாணவர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்கலவாயைச் சேர்ந்த பெண் எஸ். சுமதி (32).

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரிலிருந்து வளத்தி செல்லும் சாலையிலுள்ள கல்குவாரியில் கல் உடைக்கும் பணியில்  கொத்தடிமைத் தொழிலாளர்களாக இருந்த 29 குடும்பங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் மீட்கப்பட்டன. அப்போது கொத்தடிமைத் தொழிலாளர்களாக இருந்த தனது பெற்றோருடன் கல்குவாரியில் இருந்தவர்தான் சுமதி.

சுமதியின் பெற்றோர் சக்கரை - குப்பு. இவர்களது சொந்த ஊர் அம்மாகுளம். தொடக்கக் கல்வியை தனது சொந்த ஊரான அம்மாகுளத்தில் படித்த சுமதி, 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மேல்நிலைக் கல்வியை செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். தொடர்ந்து  2011-ஆம் ஆண்டில் சென்னை எம்.எம்.சி (மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி)யில் உணர்வுநீக்க தொழில்நுட்பப் படிப்பை படித்து (மயக்கமருந்து டெக்னீசியன்) சென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

Story image

இதைத் தொடர்ந்து செஞ்சி வட்டம், மேல்கலவாய் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவாவைத் திருமணம் செய்து கொண்ட சுமதிக்கு, தற்போது 9 வயதில் தேவதர்ஷினி என்ற மகள் உள்ளார். மூன்றரை ஆண்டுகளாகக் கொத்தடிமைத் தொழிலாளர்களாக இருந்த தனது பெற்றோர், கஷ்ட நிலையிலும் தன்னைப் படிக்க வைத்ததாகக் கூறும் சுமதி, திருமணத்துக்குப்பிறகு, இருளர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கும், மாணவர்களுக்காகவும் பணிகளை முன்னிலைப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.

தொடர்ந்து அவருடன் உரையாடிய போது, அவர் கூறியது:

கல் குவாரியில் கொத்தடிமைத் தொழிலாளர்களாக எனது தாய், தந்தை இருந்தனர். அங்கு கல் உடைக்கும் வேலையை எனது பெற்றோர் செய்து வந்தனர். அரசால் எங்கள் குடும்பம் உள்பட 29 குடும்பங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையிலும் பெற்றோர் என்னையும், எனது தம்பி சக்திவேலையும் படிக்க வைத்தனர். நான் மேல்நிலைக் கல்விக்குப் பிறகு, சென்னையில் மயக்க மருந்து தொழில்நுட்பப் படிப்பை படித்து முடித்து, தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தேன்.

அதன் பின்னர் எனது பெற்றோர் எனக்குத் திருமணம் செய்து வைத்த நிலையில், நான் எனது வேலையிலிருந்து விலகி, மேல்கலவாய் கிராமத்துக்கு வந்துவிட்டேன். தொடர்ந்து மகள் பிறந்த நிலையில், குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தினேன். இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மகளிரைக் கொண்டு கன்னியம்மாள் மகளிர் சுய உதவிக்குழுவைத் தொடங்கி, அதை நடத்தி வருகிறேன்.

Story image

SRIRAM_RAMESH

இந்த குழுவில் முதல் 5 ஆண்டுகளில் 16 உறுப்பினர்கள் இருந்த நிலையில், அடுத்த சுற்றில் 13 பேர் உள்ளனர். அரசு வழங்கும் சுழல்நிதி, கடனுதவி போன்றவற்றை பெற்று, எங்கள் குழு முறையாக செலுத்தி வருகிறது. இந்த குழுவில் கடன் பெற்றுதான் என்னுடைய வீட்டின் கட்டுமானப் பணியை மேற்கொண்டேன். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட விண்ணப்பித்த நிலையில், 2024-ஆம் ஆண்டில்தான் வீடு கட்டி முடித்தேன். தற்போதும் மகளிர் சுய உதவிக்குழுவின் தலைவராக இருந்து கொண்டு குழுவை வெற்றிக் கரமாக நடத்தி வருகிறேன் என்கிறார் சுமதி.

மாணவர்களுக்கு கல்வி கற்பிப்புப் பணி: எங்கள் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியை (டியூசன்) மேற்கொண்டு வருகிறேன். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் தன்னார்வலராகப் பணியாற்ற தேர்வெழுதி, அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் எனக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனாலும், அதை பற்றி கவலைக் கொள்ளாமல், எங்கள் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பிக்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். ஏற்கெனவே முதியோர்களுக்கு கல்விக் கற்பிக்கும் பணியையும் நான் மேற்கொண்டேன். இந்த பணிகளுக்கு மத்தியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் (தற்போது விபி-ஜி ராம்-ஜி) கீழ், பணித்தளப் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறேன்.

கல்விக் கற்பதற்கு தொடக்கத்தில் சிக்கல், தொடர்ந்து பெற்றோர் கொத்தடிமைத் தொழிலாளர்களாக இருந்தது, அதன் பின்னர் கல்வி கற்று, தொழில்நுட்பப் படிப்பு முடித்து திருமண வாழ்க்கையில் நுழைந்து, தற்போது குடும்பத்தை நடத்தி வருகிறேன். எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கல்விக்காக, பொருளாதார மேம்பாடுக்கான பணிகளை மேற்கொண்ட போதும், தற்போது எனது படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை என்பது தற்போது வருத்தமாகத்தான் உள்ளது.  எனவே அரசு படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்கிறார் சுமதி.

Story image

பின்தங்கிய சமூகத்தில் பிறந்து, பல்வேறு தடைகளைத் தாண்டி மேல்நிலைக் கல்விப் பயின்று, தொழில்நுட்பப் படிப்பு முடித்து, தற்போது தன்னுடைய சமூக மக்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றி வரும் சுமதி, இருளர் சமூகத்திலிருந்து சற்று வித்தியாசப்பட்டுத்தான் தெரிகிறார். அவரது பணியைத் தொடர வேண்டும். அதே நேரத்தில் அரசும் அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு உரிய கவனத்தை செலுத்திட வேண்டும்.

படங்கள்: ஆர். ஸ்ரீராம்

Summary

A woman guiding the Irular community and students!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.