ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இலவசமாக 25,000 பேருக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி! அரசுப் பள்ளி ஆசிரியரின் தவப்பணி!

28 ஆண்டுகளாக இலவசமாக ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளித்து வரும் ஆசிரியர் பற்றி...

P Antony

ஆசிரியர் பி. ஆண்டனி - Dinamani

Published On :22 ஜூலை 2026, 4:56 pm IST

புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர், தனது சொந்த முயற்சியில் பள்ளியைக் கடந்து சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியைத் தவப்பணியாகவே மேற்கொண்டு வருகிறார். 

கடந்த 28 ஆண்டுகளின் இவரது இந்தப் பயிற்சியால், இதுவரை ஏறத்தாழ 25 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை அருகே வல்லத்திராக்கோட்டையிலுள்ள ராமசாமி - தெய்வானையம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆங்கில ஆசிரியர் பி. ஆண்டனி. 

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் இளநிலை ஆங்கிலப் பட்டம், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் முதுநிலை ஆலங்கிலப் பட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை கல்வியியல் பட்டம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கல்வியியல் பட்டம் முடித்திருக்கிறார்.

ஆசிரியர் பி. ஆண்டனி

ஆசிரியர் பி. ஆண்டனி

இத்தோடு நிற்கவில்லை அவரது கற்றல் தாகம். எம்ஏ தமிழ், பொருளியல், அரசியல் அறிவியல், சமூகவியல், எம்.எஸ்சி. (உளவியல்), எம்எஸ்டபிள்யு (சமூக சேவை), எம்.பில்., இதழியலில் முதுநிலை பட்டயம் போன்ற படிப்புகளையும் முடித்திருக்கிறார் ஆண்டனி. கற்றலில் அவருக்கிருந்த தளராதத் தொடர்ச்சிதான், கற்பித்தலிலும் தொடர்கிறது.

தொடக்கக் காலத்தில் பல தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியப் பணியை மேற்கொண்டிருந்தாலும், அரசுப் பணி தொடங்கி 22 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் வட்டார வள மையப் பயிற்றுநராக 7 ஆண்டுகள், அரிமளம் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக 7 ஆண்டுகள், தற்போது, வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆண்டுகளைக் கடந்து ஆசிரியப் பணி தொடர்கிறது.

ஒரு பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தோம், அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தோம் என்பதோடு நின்றுவிடவில்லை ஆண்டனி. புதுக்கோட்டை மாநகரிலுள்ள அவரது வீட்டில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியை மாலை நேரத்துக்கு டியூசனாக சொல்லித் தந்து கொண்டே வருகிறார். 

Story image

கோடை விடுமுறைக் காலத்தில் (ஏப்ரல், மே) இரு மாத சிறப்புப் பயிற்சியை பெரும் தவமாகவே செய்து வருகிறார். இதன்படி, இதுவரை 28 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். 

தனது இந்த இலவச ஆங்கிலப் பயிற்சி குறித்து ஆசிரியர் ஆண்டனி கூறியது:

”எனது பெற்றோர் கிராமப்புற விவசாயிகள். பள்ளிப் படிப்பின்போதே, மிகவும் சிரமப்பட்டுதான் படித்து முடித்தேன். நான் பட்ட சிரமத்தை எந்த கிராமப்புற மாணவர்களும் பெறக் கூடாது என்பதற்காகவே இலவசமாக ஆங்கிலப் பயிற்சியை நடத்துகிறேன்.

வேங்கிடகுளத்திலுள்ள தூய வளனார் பள்ளியின் எனது ஆசிரியர் இ. ஆரோக்கியசாமி, 3 முதுநிலைப் பட்டங்களைப் பெற்றவர். தமிழ், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவார், பாடம் எடுப்பார். ஆசிரியர் ஆரோக்கியசாமியிடம் இருந்து பெற்றதுதான் கற்றல், கற்பித்தலில் எனக்குள் உந்துதலை ஏற்படுத்தித் தந்தது.

 'ஆண்டனி ஸ்போக்கன் இங்கிலிஷ் அகாதெமி' தொடங்கி வீட்டிலேயே தினமும் சராசரியாக 25 பேருக்கு மாலைநேர ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி நடத்துகிறேன். இது 6 மாதப் பயிற்சி. கோடை விடுமுறையில் இரு மாதப் பயிற்சி. இவையனைத்தும் முற்றிலும் இலவசம். இதுவரை 25 ஆயிரம் பேருக்கு மேல் பயிற்சி அளித்திருக்கிறேன்.

Story image

கிராமப்புற மாணவர்களுக்கு அரசு அல்லது தனியார் வேலைவாய்ப்புக்கான நேர்காணலை எதிர்கொள்வதில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கேதான் பலரும் சறுக்குகிறார்கள், வேலை இழக்கிறார்கள். 

எனவேதான் கிராமப்புற, ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இப்பயிற்சி அவசியம் எனத் தொடங்கினேன். மேலும் அவர்களின் பங்கேற்பு ஆர்வத்தைத் தூண்டுவதற்காக அவ்வப்போது ரொக்கப் பரிசுகளையும் வழங்கி ஊக்குவிக்கிறேன்.

என்னிடம் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி பெற்றவர்களில் பலர், ஜெர்மனி மற்றும் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். 

நான் பணியாற்றி வரும் வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில இலக்கிய மன்றத்தின் மூலம், ஆண்டுக்கு ஒரு முறை பிரம்மாண்டமான இலக்கிய விழாவை நடத்துகிறோம். கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர்கள் பங்கேற்றுப் பேசிவருகிறார்கள். கல்லூரிகளில் தமிழ் இலக்கிய விழா நடப்பதைப் போலவே, அந்த ஆங்கில இலக்கிய விழாக்கள் நடைபெறும்.

மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கூட, எனது மாணவர்களிடம் ஆங்கிலப் பேச்சுத்திறனில் சமமாக நிற்க முடியாது. 

Story image

தமிழ், ஆங்கிலத்தில் கவிதை நூல்கள், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி உள்ளிட்ட 17 நூல்களை வெளியிட்டிருக்கிறேன். பள்ளிகளில் வெளியிடப்படும் நூல்களில், பெரும்பாலும் அச்சிடப்பட்ட மொத்த நூல்களையும் அப்போதே அந்தப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிவிடுகிறேன். அடுத்து 4 புத்தகங்கள் அச்சுக்குத் தயாராக உள்ளன.

நண்பர்களுடன் இணைந்து 'பச்சை பூமி' என்ற சூழலியல் அமைப்பையும் நடத்திவருகிறோம். இதன்மூலம் சுமார் 30 ஆயிரம் பனைவிதைகளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்திருக்கிறோம். சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். ஏறத்தாழ 8 ஆண்டுகள் பச்சை பூமிப் பணியும் இணைந்திருக்கிறது.

அகாதெமிக்காவோ, பச்சை பூமிக்காகவோ, அவற்றின் சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்காகவோ, அவற்றின் விழாக்களுக்காகவோ எவரிடமிருந்தும் நிதி வசூலிப்பதில்லை. அரசு ஆசிரியர் பணியில் கிடைக்கும் ஊதியத்திலிருந்தேதான் எல்லாவற்றையும் செய்கிறேன்” என்கிறார் ஆண்டனி.

அடுத்த ஆண்டுடன் அரசுப் பள்ளி ஆசிரியர் என்ற பணியில் இருந்து ஓய்வுபெறுகிறார் ஆண்டனி. ஆனால், நிச்சயம் அவரது இலவசப் பயிற்சிப் பணியில் இருந்து எக்காலத்திலும் ஓய்வென்பது இருக்கப் போவதில்லை.

சொல்லப்போனால், இன்னும் கூடுதல் வேகமாக அவை இருக்கப் போகின்றன.

Summary

Free spoken English training for 25,000 people! A dedicated mission by a government school teacher!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.