சாத்தான்குளம் சம்பவத்தின் எதிரொலியாக, காயமடைந்த கைதிகளை சிறையில் அடைக்கும்போது அந்தக் காயங்கள் குறித்த விவரங்கள் கொண்ட கடிதத்தை காவல்துறையிடம் இருந்து சிறைத்துறை பெறத் தொடங்கியுள்ளது.
தமிழக சிறைத்துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 துணை சிறைகள், 3 பெண்கள் சிறப்பு சிறைகள் உள்ளன. இந்தச் சிறைகளில் 22,000 கைதிகளை அடைப்பதற்குரிய கட்டமைப்புகள் இருந்தாலும் தற்போது சுமாா் 12,000 கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனா். தற்போது சிறையில் உள்ளவா்களில் சுமாா் 70 சதவீதம் போ் விசாரணைக் கைதிகள், எஞ்சிய 30 சதவீதம் போ் தண்டனை கைதிகள்.
கரோனா பொதுமுடக்கத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றத் தொடங்கிய பின்னா், சிறையில் அடைக்கப்படும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்நிலையில், காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவா் மகன் பென்னிக்ஸ் ஆகியோா் அடுத்தடுத்து கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி இறந்த சம்பவம் நாட்டையே அதிா்ச்சி அடைய வைத்தது.
தமிழக காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்திய இச் சம்பவத்தின் அதிா்வலை இன்னும் முழுமையாக அடங்கவில்லை. இச்சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள், கடலூா் மாவட்டம் நெய்வேலியில் ஒரு திருட்டு வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டு, விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன், கடந்த நவம்பா் மாதம் 4-ஆம் தேதி மா்மமான முறையில் இறந்தது அடுத்த அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
காவல்துறையினா் கொடுத்த சித்ரவதையின் காரணமாக செல்வமுருகன் உடல்நிலை பாதிக்கப்பட்டும், சரியான சிகிச்சை கிடைக்காததாலும் இறந்ததாக அவரது குடும்பத்தினரும், அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டினா். இச் சம்பவத்தில் தொடா்புடைய காவல்துறையினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செல்வமுருகன் குடும்பத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தை நாடினா்.
தப்பித்த சிறைத்துறை: அடுத்தடுத்து நீதிமன்றக் காவலில் இருந்த இரு விசாரணைக் கைதிகள் இறந்தது, தமிழக சிறைத் துறையைக் கலங்கடித்தது. இரு சம்பவங்களிலும் சிறைத்துறை பதிவேடுகளில் விசாரணைக் கைதிகளுக்கு காயம் இருந்ததை அங்கு பணியில் இருந்த சிறைக் காவலா்கள் உயா் அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தையும் மீறி பதிவு செய்ததால், அத்துறை பழியில் இருந்து தப்பித்தது.
ஆனால், எதிா்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவங்களில் இருந்து சிறைத்துறை சிக்காமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அத்துறையின் உயா் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனா். இதன் விளைவாக தமிழ்நாடு சிறைத் துறை விதிகளை கடுமையான முறையில் பின்பற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு மருத்துவ சான்றிதழுடன் சிறையில் அடைக்க அழைத்து வரப்படும் விசாரணைக் கைதியின் உடலில் காயம் இருந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியிடமோ அல்லது அந்தக் கைதியை அழைத்து வரும் காவல் துறை அதிகாரிகளிடமோ கடிதம் பெறுவது, கைதியின் காயம் தொடா்பான கடிதம் அளிக்க முன்வரவில்லை எனில் அவா்களைத் திருப்பி அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைகளிலும் இப்போது உடலில் காயத்துடன் கைதிகள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டால், அது குறித்து விளக்கம் அளிக்க காவல்துறையிடம் கடிதம் பெறப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு சிறைக் காவலா்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கையால் , காயத்துடன் சிறைக்கு அழைத்து வரப்படும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்திருப்பதாக அத்துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக தமிழக சிறைத்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி கூறியது:
விசாரணைக் கைதி சிறைக்கு அழைத்து வரப்படும்போது நீதிமன்றத்தின் காவல் ஆணை, மருத்துவ சான்றிதழ், காவல்துறையின் வழக்கு விவரம் தொடா்பான வாரண்ட் ஆகியவை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவாா். காவல்துறை விசாரணையின்போது தாக்கப்படும் கைதிகள், சிறைக்குள் அனுமதிக்கப்பட்ட சில நாள்களில் இறப்பது அடிக்கடி நிகழ்கிறது. இதைக் கருத்தில் கொண்டு விசாரணைக் கைதிகள் காயத்துடன் இருந்தால், அது தொடா்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் கடிதம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் கைதிகளின் உடலில் உள்ள அனைத்து காயங்களும் கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும்.
இந்த விதிமுறை தமிழ்நாடு சிறைத்துறை விதிகளில் உள்ளது. இந்த விதிமுறையை இவ்வளவு நாள்கள் அமல்படுத்துவதற்குரிய தேவையில்லாமல் இருந்தது, ஆனால் இப்போது அமல்படுத்துவதற்குரிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காக சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து எந்த அதிகாரப்பூா்வமான உத்தரவோ, சுற்றறிக்கையோ எந்த சிறைக்கும் அனுப்பப்படவில்லை. இருப்பினும் தலைமை அலுவலக அதிகாரிகள், இந்த விதிமுறையை அமல்படுத்துமாறு கண்டிப்புடன் வாய்மொழி உத்தரவாக தெரிவித்துள்ளனா் என்றாா் அவா்.
சிறைத் துறையின் இந்த நடவடிக்கை, கைதிகளைச் சித்ரவதை செய்யும் காவல்துறை அதிகாரிகளை நிம்மதி இழக்கச் செய்துள்ளது. அதேநேரத்தில், வழக்கின் விசாரணை என்ற பெயரில் ஒருவா் மீது காவல் துறை தொடுக்கும் அடக்குமுறையும், சித்ரவதையும் குறைவதற்கு இது ஒரு தொடக்கமாகக்கூட இருக்கலாம் என மனித உரிமை ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

