நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வீடுகளுக்கு மீண்டும் புதுவரவாகும் உலக்கை: சடங்குக்காக வாங்கி வைப்பது அதிகரிப்பு

வாழப்பாடியில், பயன்பாடு இல்லாத நிலையிலும், சடங்கு சம்பிரதாயத்திற்காகவும், முன்னோர்களை நினைவு கூறும் வகையிலும், வீடுகள் தோறும் உலக்கையை வாங்கி வைப்பதில் மக்களிடையே மீண்டும் ஆர்வம் அதிகரித்து வருகிறது

News image
வாழப்பாடியில் உலக்கை விற்பனை செய்த  சேலம் வியாபாரி மணிவேல் (63).
Updated On :27 ஜனவரி 2024, 5:47 pm

பெரியார் மன்னன்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், பயன்பாடு இல்லாத நிலையிலும், சடங்கு சம்பிரதாயத்திற்காகவும், முன்னோர்களை நினைவு கூறும் வகையிலும், வீடுகள் தோறும் உலக்கையை வாங்கி வைப்பதில் மக்களிடையே மீண்டும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கம்பு சோளம், கேழ்வரகு, தினை, வரகு ஆகிய சிறுதானியங்களை அன்றாட உணவுக்கு கிராமப்புற மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். நவீன கருவிகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு, சிறுதானியங்களை உமி, தோல் நீக்கி பதப்படுத்தி, உணவு சமைக்க பயன்படுத்துவதற்கு, அம்மி, உரல் ஆட்டுக்கல், குந்தாணி, உலக்கை,  திருக்கை ஆகியவற்றைப் பயன்படுத்தினர்.

அண்மைக்காலமாக சிறுதானியங்களின் பயன்பாடும், சுயமாக பதப்படுத்துவதும் அடியோடு குறைந்து போனது.  கடைகள் தோறும் பதப்படுத்தி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள உணவு தானியங்களை தேவைக்கேற்ப வாங்கி சமைப்பதற்கு மக்கள் பழகிக் கொண்டனர்.

அனைத்து சிறுதானியங்களும், மாவு வகைகளும் வீடு தேடி வருவதால், சிறுதானியங்களை பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட அம்மி, ஆட்டுக்கல், உரல், திருக்கை, உலக்கை, குந்தாணி ஆகியவை  பயன்பாட்டில் இருந்த சுவடே தெரியாமல் அடியோடு குறைந்து போயின.

இருப்பினும், வாழப்பாடி பகுதி கிராமங்களில் பூப்பெய்தும் சிறுமிகளுக்கு சடங்கு சுற்றுவதற்கும், புதுமணத் தம்பதிகளை வரவேற்பதற்கும், இறந்தவரின் உடலை அடக்கம் செய்துவிட்டு இடுகாட்டிலிருந்து வீட்டிற்கு திரும்பும் உறவினர்களை  புனிதப்படுத்துவதற்கும், 'உலக்கை' நல்ல சகுனத்திற்கான அடையாளமாக, சடங்கு, சம்பிரதாய பொருளாக இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, சடங்கு, சம்பரதாயத்திற்காகவும், முன்னோர்களின் நினைவாகவும், உலக்கையை வாங்கி வீடுகளில்  வைப்பதில் வாழப்பாடி பகுதி  கிராம மக்களிடையே மீண்டும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த உலக்கை வியாபாரி மணிவேல்(63). கூறியதாவது: நான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உலக்கை விற்பனை செய்து வருகிறேன். தற்போது, பெரும்பாலும் சிறுதானியங்களை பதப்படுத்துவதற்கு உலக்கை பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், வீடுகளில் சடங்கு, சம்பிரதாயத்திற்காக உலக்கையை வாங்கி வைப்பதில் மீண்டும் மக்களிடையே  ஆர்வம் அதிகரித்துள்ளது.

கிராமப்புற மக்கள் மட்டுமன்றி நகர்புறங்களை சேர்ந்தவர்களும், ஒரு உலக்கைக்கு ரூ. 300 வரை விலை கொடுத்து வாங்கி, புதுவரவாக சேர்த்து, வீடுகளில் சடங்கு பொருளாக வைத்து பாதுகாத்து வருகின்றனர் என்றார்.

இதுகுறித்து வாழப்பாடி அக்ரஹாரம் இல்லத்தரசி கலைச்செல்வி(38). கூறியதாவது. தற்போது  சிறுதானியங்களை பதப்படுத்த உலக்கை பயன்படுத்துவது இல்லை. ஆனால், ஒரு நல்ல காரியத்திற்கு தேவைப்படும் மங்கலப் பொருளாகக் கருதி, உலக்கையை வாங்கி வீட்டில் வைத்துப் பாதுகாத்து வருகிறோம்.

முன்னோர்களின் வழியில் அனைத்து சடங்கு சம்பிரதாயங்களுக்கும், முன்னோர்களை நினைவு கூறும் வகையில் உலக்கையை பயன்படுத்தி வருகிறோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.